எம்ஜிஆரின் மோதிரக் கையால் தங்க மோதிரத்தை பரிசாக பெற்ற பிரபல இயக்குநர் யார்? அந்த நால்வரில் ஒருவர்!
சென்னை: எம்ஜிஆரின் மோதிரக்கையால் தங்க மோதிரத்தை பரிசாக பெற்ற பிரபல இயக்குநர் யார் தெரியுமா? அவர்தான் ஜெயிலர் படத்தில் ஜெயில் கைதியாக நடித்த இந்தி நடிகரை அறிமுகப்படுத்தியவர்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 1970 பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார்.

அந்த மேடையில் ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட் மாணவர்கள் நான்கு பேர் ஒரு ஸ்பூஃப் கிட் நிகழ்ச்சி நடத்தினார்கள். அது மிகவும் பாராட்டப்பட்ட நிகழ்ச்சி. எம்.ஜி.ஆருக்கு அந்த நிகழ்ச்சியையும் அந்த இளைஞர்களையும் மிகவும் பிடித்து விட்டது.
சில நாட்களுக்குப் பிறகு எம்.ஜி.ஆரிடமிருந்து சென்னைக்கு வரச் சொல்லி அந்த நான்கு இளைஞர்களுக்கும் அழைப்பு வந்தது. அவர்களும் மகிழ்ச்சியோடு செல்ல எம்.ஜி.ஆர் வீட்டில் விருந்து நடந்தது. விருந்து முடிவில் எம்.ஜி.ஆர் சென்னையை சுற்றி பார்க்கவும் ஏற்பாடு செய்து அவர்கள் வாங்கிய எல்லா பொருட்களுக்கும் பணமும் கொடுத்தார்.
அவர்களை அழைத்துக் கொண்டு தான் நடித்த ஒரு படத்தின் தியேட்டருக்கு சென்று அவர்களோடு படமும் பார்த்தார். அன்று முதல் அவர்கள் எம்.ஜிஆரின் அன்புக்கு பாத்திரமானார்கள்.
அந்த நால்வர் சுரேஷ், காமெடி நடிகர் அஸ்ரானி, கமலுடன் சத்யாவில் நடித்த பெயிண்டால். இவர்களுடன் நாலாவது ஆள் பின்னாளில் பெரிய இயக்குனராக வந்தார். நடிப்பு பயிற்சி பெற்று நடிகராகி அதில் சோபிக்க முடியாமல் இயக்குனரானார் அவர்.
இந்த இயக்குனர் எம்.ஜி.ஆரை மட்டும் விடாமல் எல்லா நல்ல நாட்களுக்கும் வாழ்த்து அனுப்பிக் கொண்டே இருப்பார். அந்த இயக்குனருக்கு நீண்ட நாள் காதலி ஒருத்தி இருந்தார். காதலியையே மணக்க முடிவெடுத்து திருமணம் நிச்சயமானது. ரெஹனா ஃபரூக்கி என்கிற இஸ்லாமிய பெண்ணான அவர் இந்துவாக மாறி முக்தா என பெயர் மாறினார். பின்னாளில் முக்தா ஆர்ட்ஸ் என தன் தயாரிப்பு கம்பெனிக்கு மனைவி பெயரை வைத்தார்.
இயக்குனர் எம்ஜி.ஆருக்கு அழைப்பிதழை அனுப்பி வைத்தார். அன்று மாலை இயக்குனரின் வீடருகில் நடந்த திருமண வரவேற்புக்கு எம்.ஜி.ஆர் வந்து விட்டார். இயக்குனருக்கு ஆச்சர்யம். எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார் என்றதும் அருகிலிருந்த தமிழ் மக்கள் அவரைப் பார்க்க வந்து விட்டனர். எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து அவர்களோடு பேசிவிட்டு பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.
அதில் மணப்பெண்ணுக்கான தங்க நகைகள் இருந்தன. இயக்குனருக்கு விக்டரி சிம்பல் கொண்ட மோதிரத்தை அணிவித்தார் எம்.ஜி.ஆர்.
சில நாட்களில் இயக்குனரின் முதல் படம் வெளிவந்தது. படத்தின் பெயர் காளிச்சரண்(தமிழில் சங்கிலி). அந்த இயக்குனர் வேறு யாருமல்ல.
கல்நாயக் இயக்குனர் சுபாஷ் கை தான் அவர்.
பின்னாளில் ராம் லக்கன், த்ரி மூர்த்தி, ஹீரோ போன்ற வெற்றிப் படங்களை தந்த சுபாஷ் கை தான் எம்ஜிஆரிடம் மோதிரக்கையால் மோதிரம் பெற்றவர். மாதுரி, அனில்கபூர், ஜாக்கி ஷராஃப் போன்றோரை அறிமுகப்படுத்தியவர். எம்.ஜி.ஆர்-சுபாஷ் கை நட்பில் எம்.ஜி.ஆர் சுபாஷ் கையின் ஒரு வெற்றிப்படத்தின் கதையை வாங்கினார். அந்தப்படம் Karz. ஆனால் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்ததால் அது எடுக்கப்படவேயில்லை.
பின்னாளில் அந்தப்படம் கமல் நடித்து தமிழில் வந்தது. அது தான் 'எனக்குள் ஒருவன்'. கலைக்கு முன் மொழியாவது.... ஹிந்தி எதிர்ப்பாவது.... அதெல்லாம் அரசியலுக்கு தான். எம்.ஜி.ஆரின் மேலோங்கிய அந்த மொழி கடந்த நட்பு பாராட்டும் தன்மை...ஆச்சரியம் தான்....பிரமிப்பும்... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications