கேரளாவே கொண்டாடிய காதல் ஜோடியின் வாழ்க்கையில் திடீர் இழப்பு.. இரண்டு வருடத்தில் சிதைந்து போன கனவு
கேரளாவில் ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதிக்கு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளா: பிரணவ் என்கிற நபருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு விபத்தில் முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்தினால் வீல் சேரில் முடங்கியுள்ளார்.
முகநூல் வழியாக அவரோடு சஹானா என்ற பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு பிறகு காதலாக மாறி இருக்கிறது.
பிரணவ் நிலைமை முழுக்க தெரிந்த சஹானா வீட்டில் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் பிரணவ் திடீரென ரத்த வாந்தி எடுத்து உடல்நிலை சரியில்லாமல் போக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்திற்கு பிறகு விழிப்புணர்வு
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கன்னிக்கரா என்ற பகுதியை சேர்ந்த பிரணவ் 8 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நண்பரோடு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய நண்பர் மது அருந்திய காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் பின்னாடி அமர்ந்திருந்த பிரணவ் அதிகமாக பாதிக்கப்பட்டார். பிரணவ்வின் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டு அவருடைய வாழ்க்கை வீல் சேரில் முடங்கியது. தன்னுடைய வாழ்க்கை முழுவதும் வீழ்சேரில் முடங்கப்பட்டதற்கு பின்பும் தான் அனுபவித்து வந்த கஷ்டங்கள் குறித்து கேரளா போக்குவரத்து துறையினர் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அனுபவத்தை எடுத்துக் கூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

முகநூலில் மலர்ந்த காதல்
பிரணவ் சமூக வலைத்தளத்தில் பல விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அது பல வீடியோக்கள் வைரலான நிலையில் அதற்கு பலர் பாராட்டு தெரிவித்து வந்தனர். அந்த மாதிரி தான் அவருடைய வீடியோவை திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த சஹானா என்ற பெண் பார்த்திருக்கிறார். பின்பு பேஸ்புக் வழியாக இவருக்கு ரெக்யூஸ்ட் அனுப்பி இருக்கிறார். அதை பிரணவ் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க, பிரணவ் போன் நம்பரை facebook பக்கத்தில் இருந்து எடுத்து சஹானா வாட்ஸ் அப்பில் பேசி இருக்கிறார். பேச தொடங்கியதும் தன்னுடைய காதலை தெரிவித்த சஹானாவிற்கு பிரணவ் எவ்வளவு அறிவுரை கூறியிருக்கிறார்.

காதல் திருமணம்
பிரணவ் தன்னுடைய நண்பர்கள் மற்றும் பெண் தோழிகள், குடும்பத்தினர்கள் என ஒவ்வொருத்தராக அனுப்பி சஹானாவிற்க்கு எவ்வளவோ அட்வைஸ் கொடுத்திருக்கிறார். ஆனால் சஹானா தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார். பின்பு ஒருமுறை அவரை நேரில் வரவைத்து தான் படும் அவஸ்தைகளையும் கஷ்டங்களையும் நேரில் பார்க்கும்படி செய்திருக்கிறார். அதற்குப் பிறகும் சஹானா தன்னுடைய காதலில் இருந்து பின்வாங்காமல் இருக்க, அதற்கு பிறகு திருமணத்திற்கு சரி என்று பிரணவ் கூறி இருக்கிறார். தன்னுடைய வீட்டில் உள்ளவர்களின் விருப்பத்தையும் மீறி சஹானா பிரணவ்வை கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி காதல் திருமணம் செய்திருந்தார்.

உடல் நல குறைவால் உயிர் இழப்பு
திருமணத்திற்கு பிறகும் கணவன் மனைவி இருவரும் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு தங்கள் காதல் குறித்தும் பல வீடியோக்களில் பேசி வந்தனர். இரண்டு வருடங்கள் இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக கடந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சஹானா ஒரு கோடி ரூபாய்க்கான பரிசுப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு லட்சம் ரூபாய் வெற்றி பெற்றார். அந்த நிகழ்ச்சி முழுக்க அவர் தன்னுடைய கணவர் பிரணவ் மருத்துவ செலவுக்காகத்தான் இந்த விளையாட்டை விளையாடி வருவதாக கூறி வந்தார். இந்த நிலையில் நேற்று பிரணவ் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்பு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரணவ் உயிரிழந்த சம்பவம் இணையவாசிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பலர் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications