"துள்ளுவதோ இளமை" நடிகர் அபிநய் காலமானார்! கல்லீரல் பாதிப்பால் வறுமையில் வாடிய கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி
சென்னை: கடந்த 2002-ஆம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியானப் படம் 'துள்ளுவதோ இளமை'. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில்ப் பரிச்சயமான நடிகர் அபிநய், இன்று அதிகாலை 4 மணியளவில் உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவுத் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபிநயின் திரை பயணம்
நடிகர் அபிநய் தமிழ் திரையுலகில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், டப்பிங் கலைஞராகவும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ் தவிர மலையாளம் உள்ளிட்டத் திரையுலகிலும் நடித்துள்ளார். 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் அபிநய், 2004-ஆம் ஆண்டு வெளியான 'சிங்கார சென்னை' மற்றும் 2005-ஆம் ஆண்டு வெளியான 'பொன் மேகலை' ஆகியப் படங்களில் நாயகனாக நடித்திருந்தார். சில விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.
டப்பிங் கலைஞர்
இவர், விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர். தவிர, சூர்யாவின் 'அஞ்சான்', கார்த்தியின் 'பையா', 'காக்கா முட்டை' ஆகியப் படங்களில் சில கதாபாத்திரங்களுக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
வறுமையின் பிடியில் சிக்கிய கலைஞர்
44 வயதாகும் அபிநய், சிலகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். படங்கள் வாய்ப்பு இல்லாததாலும், நிலையான வருமானம் இல்லாததாலும் அவர் வறுமையில் சிக்கினார். அபிநய்க்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலமும் குன்றியது. சில மாதங்கள் முன்பு, வயிறு வீங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது புகைப்படம் வெளியாகி, திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்த அந்தப் புகைப்படத்தைக் கண்டு ரசிகர்கள் வேதனையடைந்தனர்.
உதவி கோரிக்கை
இந்தச் சூழ்நிலையில் தான், சிகிச்சைக்குப் பண உதவி கோரியும் அபிநய் அண்மையில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அபிநயின் நிலை அறிந்ததும், திரையுலகைச் சேர்ந்தச் சில நல்ல உள்ளங்கள் அவருக்கு உதவிக் கரம் நீட்டினர். 'துள்ளுவதோ இளமை' படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகர் தனுஷ் தனது பழைய நண்பனுக்கு உதவும் வகையில், அபிநய்க்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கியதாகத் தகவல் வெளியானது.
KPY பாலா
அதேபோல், நடிகர் KPY பாலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி அவருக்கு ஆறுதல் கூறியிருந்தார். இதன் பிறகு, உடல்நலம் குன்றிய போதும் கூட அபிநய் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வந்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய், இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். அண்மையில் ஒரு பட விழாவில் பங்கேற்ற அவர், அப்போதே தனக்கு உடல்நிலை மோசமாகி வருவதாகப் பேசியிருந்தார்.
தனுஷ் போன்ற திரைக் கலைஞர்கள் உதவிக் கரம் நீட்டியும், ஒரு திறமையானக் கலைஞன் வறுமையின் பிடியில் சிக்கி, தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டது தமிழ் திரையுலகில் ஒரு சோகமான பக்கத்தை பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications