வறுமை! 3 நாள் 3 வேளை ஊறுகாயை சாப்பிட்டேன்! 4வது நாள் வயிற்றுப்போக்கு.. எதிர்நீச்சல் நடிகரின் சோக கதை
3 நாட்களுக்கு வெறும் ஊறுகாய், தண்ணீர் மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தேன்- எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து
சென்னை: 3 நாட்களுக்கு ஊறுகாய், தண்ணீர் குடித்து உயிர் வாழ்ந்தேன் என எதிர்நீச்சல் குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் ஜி. மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, 2008 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் எனும் படத்தை இயக்கினார். இதன் பின்னர் புலிவாய் எனும் படத்தில் 2014 ஆம் ஆண்டு சப்போர்டிங் ரோல் செய்திருந்தார். இவர் அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய படங்களில் ராஜ்கிரணின் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடமும் மாரிமுத்து உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் நடித்த முதல் படம் வாலி. 2023 ஆம் ஆண்டு இவர் நடித்த படம் கோடை ஆகும். இவர் தற்போது எதிர்நீச்சல் எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

குணசேகரன்
இந்த சீரியலில் இவர் ஆதிமுத்து குணசேகரன் எனும் கேரக்டரில் கனிகாவின் கணவராக நடித்து வருகிறார். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த அண்ணன், 3 தம்பிகள். பெண்களை வேலைக்காரர்களாகவும் சந்தோஷப்படுத்தும் நபராகவும் மட்டுமே நடத்துகிறார்கள். இதில் 3ஆவது தம்பியின் மனைவி ஜனனி இந்த பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்கிறார்.

இரு தம்பி மனைவி
தனது மனைவியையும் இரு தம்பிகளின் மனைவிகளை குணசேகரன் மிதிப்பதும் 3ஆவது தம்பியின் மனைவியுடன் மல்லுக்கட்டுவதும் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. பட்டம்மாள் பாட்டியை (பாம்பே ஞானம்) கொண்டு குணசேகரனையும் அவரது தாயையும் எப்படி அடக்குகிறார் ஜனனி என்பதே இந்த கதையாகும். ஜனனி, பட்டம்மாள் கொடுக்கும் தைரியத்தால் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி ஆகியோரும் பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.

குணசேகரன் நடிப்பு
இந்த சீரியலில் குணசேகரன் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. அவருடைய முக பாவனை, பாடி லேங்குவேஜ் எல்லாமே அருமை. திருமண மேடையில் மணப்பெண் நடனம் ஆடுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தையும் இந்த சீரியலில் அவர் சொல்லியிருந்தார். அது போல் நீயா நானாவில் மணப்பெண் நடனமாடுவது தவறு என வாதம் செய்தார்.

மாரிமுத்து
இந்த நிலையில் சாய் வித் சித்ரா எனும் நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து பேசுகையில், நான் தேனியிலிருந்து சென்னைக்கு வந்த போது ஒரு மேன்ஷனில் தங்கியிருந்தேன். அங்கிருந்தபடியே ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி வேலை தேடி கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் காசு இல்லாத நேரத்தில் என் நண்பர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்வேன்.

தீபாவளி பண்டிகை
ஒரு முறை தீபாவளி பண்டிகை வந்தது. என் அறையில் இருந்தவர்கள் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். ஊருக்கு போக கூட காசு இல்லாத நிலையில் அறையிலேயே தங்கிவிட்டேன். இதையடுத்து பசித்தது, வழக்கம் போல அக்கவுண்ட் வைத்து சாப்பிடும் ஹோட்டலுக்கு போனேன், அங்கு ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

ஹோட்டலில் சாப்பிடலாம்
உடனே வேறு ஹோட்டலில் சாப்பிடலாம் என இருந்த என்னிடம் காசு இல்லை. சரி மற்ற அறைகளில் இருக்கும் நண்பர்களிடம் வாங்கிக் கொள்ளலாம் என போனேன், அவர்களது அறைகளிலும் பூட்டு இருந்தது. என்னை தவிர எல்லாருமே தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு சென்றுவிட்டார்கள். பசி வயிற்றை கிள்ளியது, என்ன செய்வது என தெரியவில்லை.

ஊறுகாய்
அறையில் ஏதாவது உலர் உணவுகள் இருக்கிறதா என பார்த்தேன். ஒன்றுமே இல்லை. அங்கு ஒரு ஊறுகாய் பாட்டில் மட்டுமே இருந்தது. ஆபத்துக்கு பாவமில்லை என கருதி ஊறுகாயை நக்குவது அதன் காரத்தை குறைக்க ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது, இப்படி 3 வேளையும் 3 நாட்களுக்கு செய்தேன். பிறகு 4ஆவது நாள் எனக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தேன். அதற்குள் அறைக்கு நண்பர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் என்னை அழைத்து கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு அங்கு குளுகோஸ் ஏற்றினார்கள். இவ்வாறு மாரிமுத்து குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications