அப்பா இறந்தபோது வீட்டில்.. என் முதல் படத்திலும் இதுபோல தான்! தம்பி பற்றி பேசி கண் கலங்கிய அதர்வா
சென்னை: நடிகர் முரளியின் மகனான "ஆகாஷ் முரளி" நடிக்கும் "நேசிப்பாயா" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட முரளியின் மூத்த மகன் அதர்வா தன்னுடைய தந்தையின் மறைவு மற்றும் தம்பியின் கேரக்டர் குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
80ஸ் 90's காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த முரளிக்கு இப்ப வரைக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் முரளி கடந்த 2010 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக தன்னுடைய 48வது வயதில் உயிரிழந்தார். அவருக்கு ஷோபா என்ற மனைவியும் அதர்வா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்களும் காவியா என்ற மகளும் இருக்கின்றனர்.

முரளி கடைசியாக தன்னுடைய மகன் அதர்வா நடித்த பானா காத்தாடி திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு சில மாதங்களிலே முரளி மரணம் அடைந்திருந்தார். பானா காத்தாடி திரைப்படம் பெரிய அளவில் அதர்வாவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் அதர்வா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அதர்வாவை தொடர்ந்து அவருடைய தம்பி ஆகாஷ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.
வாடா போடான்னு பேசியதால் வந்த வினை! ரஜினி வெளிப்படையாக சொன்ன வார்த்தை.. ராதாரவி உடைத்த ரகசியம்
ஆகாஷ், நேசிப்பாயா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த திரைப்படத்தை அறிந்தும் அறியாமலும், பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாரா, ஆர்யா போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
அதிலும் நயன்தாரா தன்னுடைய பட ப்ரமோஷனுக்கே கலந்து கொள்ள மாட்டார். ஆனால் விஷ்ணு வரதனின் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக நேற்று கலந்து கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. நயன்தாராவோடு அதர்வா இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் தம்பியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில் இந்த விழாவில் அதர்வா தன்னுடைய அப்பா முரளி மற்றும் தன்னுடைய தம்பி ஆகாஷ் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அதர்வா பேசுகையில், என்னுடைய அப்பாவின் மறைவு எங்களை பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று யாருக்குமே தெரியாது. நாங்கள் எல்லோரும் உடைந்து போய் இருந்தோம். அப்பாவின் உடல் வீட்டில் இருந்தபோது அம்மா தன்னுடைய ரூமை விட்டு வெளியே வரவில்லை. அவங்க அங்கு இருந்து அழுது கொண்டு இருந்தாங்க.
அக்காவுக்கு நடப்பது எல்லாம் புரிந்தது. எனக்கும் சூழ்நிலையை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்த நேரத்தில் என்னுடைய தம்பி ரொம்பவும் சின்ன பையனாக இருந்தான். அவன் என் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தான். அப்பாவின் முகத்தை பார்த்து விட்டு நான் அவனைப் பார்த்தேன் அவன் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவன் முன்பு நாம் அழக்கூடாது, நாம தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று நான் கொஞ்ச நேரத்துக்கு கெத்தாக இருந்தேன்.

ஆனாலும் என்னால் ஒரு கட்டத்திற்கு மேலே நடிக்க முடியவில்லை. நான் உடைந்து அழுதுவிட்டேன். அப்போது அவன்தான் என் பக்கத்தில் வந்து ஒன்னும் கவலைப்படாத அண்ணே நான் உன்னை பார்த்துக்கிறேன் என்று சொன்னான். அந்த வார்த்தை என்னால் மறக்க முடியாது. நான் அவனுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவன் சொன்ன வார்த்தை ரொம்ப பெருசாக இருந்தது.
அதுபோல என்னுடைய முதல் படமான பானா காத்தடி பட போஸ்டர் வெளியீட்டின் போது இதே போல நான் மேடையில் பேசிக் கொண்டிருந்தேன். கீழே வரிசையில் அப்பா உட்கார்ந்து இருந்தார். நான் ஒவ்வொரு முறையும் பேசிவிட்டு அவரையே பார்த்தேன். நான் எதாவது தவறாக பேசுகிறேனா என்று அவருடைய முகத்தை பார்த்து பார்த்து பேசினேன். ஆனால் இன்று என்னுடைய தம்பியின் படம் வெளியாகி இருக்கிறது.
அவன் மேடையில் பேசும் போது என்னுடைய மனதும் பக் பக்கென்று துடித்துக் கொண்டிருக்கிறது. அப்பா இருந்த இடத்தில் நான் இன்று இருக்கிறேன். அப்பாவின் உணர்வுகளை இன்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் மக்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய அப்பாவிற்கும் எனக்கு கொடுத்த ஆதரவு பெருசு, அதைவிட அதிகமாக என்னுடைய தம்பிக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று உங்களிடம் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் என அந்த பேட்டியில் கண்கலங்க அதர்வா பேசியிருக்கும் நிலையில் இந்த வீடியோவிற்கு பலரும் அதர்வாவிற்கு ஆறுதலும் அவருடைய தம்பி ஆகாஷ்க்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications