தனுஷ் ஒரு பேய்.. அத்தனை பேர் முன்னாடி செய்த செயல் இருக்கே.. மறக்க முடியாது.. நடிகர் சரவணன் ஓபன்
சென்னை: நடிகர் சரவணன் "ராயன்" திரைப்படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார். அதில் நடிகர் தனுஷ் நடிகராக இனிமையானவர், ஆனால் டைரக்டராக இருக்கும்போது அவர் ஒரு பேய் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதோடு தான் தனுஷை பேய் என்று சொல்வதற்கு காரணம் என்ன என்பது பற்றியும் விளக்கி இருக்கிறார்.
நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியானது. இந்த திரைப்படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தனர். அதில் நடிகர் சரவணனும் ஒருவர். சரவணன் ஆரம்பகாலத்தில் கதாநாயகனாக நடித்து பிறகு முக்கிய கேரக்டரிலும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த சரவணன் பருத்தி வீரன் திரைப்படத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய இரண்டாவது ஆட்டத்தை தொடங்கினார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைதான் அவருக்கு எமனாக முடிந்தது.
குலதெய்வ கோவிலில் தனுஷ்.. மக்களை பார்த்ததும் சட்டென செய்த செயல்.. வெளியிட்ட அந்த போஸ்ட்
அதாவது கல்லூரி காலத்தில் நாங்கள் பஸ்ஸில் பெண்களை இடிப்பதற்காகவே போவோம் என்று அவர் பேசியது பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியது. அதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஆனால் சினிமா மற்றும் சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ராயன் திரைப்படத்திலும் துரை கேரக்டரில் நடித்திருந்தார். பெரிய ரவுடியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த திரைப்பட அனுபவம் குறித்து சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் சரவணன் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் ராயன் திரைப்படம் எனக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்து இருக்கிறது. இந்த திரைப்படத்தில் துரை கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். இந்த திரைப்பட வாய்ப்பு எனக்கு தனுஷ் மூலமாகத்தான் கிடைத்தது.
அதனால் தனுஷுக்கு நன்றி சொல்ல வேண்டும். தனுஷின் அப்பா கஸ்தூரிராஜாவின் திரைப்படத்தில் நான் ஏற்கனவே நடித்திருக்கிறேன். தாய் மனசு என்ற அவருடைய படத்தில் நான் கதாநாயகனாக நடித்து, இப்போ அவருடைய மகன் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயனில் நான் வில்லனாக நடிக்கிறேன். இது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த மாதிரி ஒரு வாய்ப்பு எந்த நடிகருக்கும் கிடைத்திருக்காது என்று நான் நினைக்கிறேன்.
அதுபோல தனுஷை நடிகராக பார்க்கும்போது ரொம்பவும் ஸ்வீட்டான பெர்சன். ஆனால் அவரை தயாரிப்பாளராக பார்க்கும்போது அவர் ஒரு பேய் என்றுதான் சொல்ல வேண்டும். பேய் போல தான் அவர் வேலை செய்வார். முதல் நாள் எனக்கு ஒரு காட்சி சொல்லி தந்தார். அதாவது நான் ஒரு பத்திரிக்கையை படித்துக் கொண்டிருப்பேன் அப்போது தனுஷ் அங்கே வருவார் அவரை பார்த்து வாப்பா ராயா என்று நான் சொல்லும் காட்சி. அந்த காட்சி நடிக்கும் போது அந்த செட்டில் எல்லோருமே இருந்தார்கள்.
எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் அப்புறம் எனக்கு அடியாள்களாக நடிப்பவர்கள் என்று செட்டு முழுக்க ஆட்களாக இருந்தார்கள். அவர்கள் முன்பு எனக்கு தனுஷ் அப்படியே காட்சிகள் சொல்லித் தந்தார். எனக்கு அதை பார்த்ததும் பயம் வந்துவிட்டது. அவருடைய கம்பீரம் போல நம்மால் நடிக்க முடியுமா என்று எனக்கே ஒரு நிமிடம் திகைப்பு ஏற்பட்டுவிட்டது. எனக்கு இதுவரைக்குமே யாரும் நடிப்பு சொல்லி தந்தால் அதுபோலவே நடிக்க வராது.
காட்சிகளைப் பற்றி சொன்னாலே போதும் நான் நடித்து முடித்து விடுவேன். ஆனால் தனுஷ் அன்று சொல்லி தந்த விதத்தை பார்த்து நான் மிரண்டு போனேன். அதை என்னால் மறக்க முடியாது. தனுஷுக்கு எல்லா திறமையும் இருக்கிறது. அவர் இன்னும் மேலும் பல படங்கள் நடிக்க வேண்டும், இயக்க வேண்டும் என்று அந்த பேட்டியில் சரவணன் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
