Maman movie: மண்சோறு சாப்பிட்டா படம் ஓடிருமா? இது ரொம்ப முட்டாள்தனம்.. வேதனையாய் இருக்கு! சூரி வருத்தம்
சென்னை: நடிகர் சூரி நடிப்பில் மாமன் திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நேற்று மே 15ஆம் தேதி சூரியின் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்திருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நடிகர் சூரி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
ஒரு திரைப்படம் வெளியாகும் போது அந்த திரைப்பட நடிகர்களின் ரசிகர்கள் எதாவது வித்தியாசமாக செய்து கொண்டிருப்பார்கள். இது அந்த நடிகர்களை கவர்வதற்காகவா? அல்லது உண்மையாகவே நடிகர்கள் மீது வைத்திருக்கும் பாசத்திற்காகவா? என்பது பலருக்கும் புரியாத புதிராகத்தான் இருந்து வருகிறது. திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் போது முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும் என்று மணிக்கணக்கில் தியேட்டர் வாசலில் காத்து கிடைப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

சூரியின் மாமன் திரைப்படம்
வீட்டிற்கு அடிப்படையான பொருள்கள் வாங்க வேண்டும் என்று சொன்னால் கடைக்கு போய் ஐந்து நிமிடம் செலவழிக்க சோம்பேறித்தனம் படுபவர்கள் கூட தங்களுடைய நடிகர்களின் திரைப்படங்களை பார்ப்பதற்காக மணிக்கணக்கில் காத்துக் கிடப்பது பார்த்திருப்போம். அதுபோலத்தான் நேற்று ஒரு சம்பவம் நடைபெற்றது. இன்று நடிகர் சூரியின் மாமன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் ட்ரைலர் வெளியானதில் இருந்து திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. சூரியின் மாமன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நேற்று அவருடைய ரசிகர்கள் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு சூரியின் பெயருக்கு அர்ச்சனை செய்திருந்தனர்.
சூரிக்காக பிரார்த்தனை
அதோடு இதுபோல பிரார்த்தனை தொடர்ந்து சூரியின் எல்லா படங்களுக்கும் தாங்கள் செய்ய போவதாகவும் பேட்டி கொடுத்திருந்தனர். இது இணையத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து நடிகர் சூரி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். அதில் அவர் பேசும்போது மாமன் படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குழந்தைகளோட அக்காங்க, தம்பிங்க பலர் வந்திருந்தாங்க. எல்லோருமே இந்த படத்தை பார்க்கும்போது எங்க வாழ்க்கையே பார்த்த மாதிரி இருக்குன்னு சொன்னாங்க.
வருத்தமான விஷயம்
இதைத்தான் நான் படம் வெளியாவதற்கு முன்பே சொல்லியிருந்தேன். அதேபோல இப்போது மக்கள் பாராட்டுவது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. இப்போ நான் கமலா தியேட்டருக்கு வந்திருக்கிறேன். ரசிகர்களை சந்திப்பதாக நிற்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாரும் இந்த படத்தை தியேட்டர்ல பாருங்க உங்களுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை நினைவுபடுத்தும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
மண் சோறு
அதாவது, மாமன் படம் காலையில் ரிலீஸ் ஆகி இவ்வளவு பெரிய சந்தோசம் எனக்கு கிடைத்து கொண்டிருக்கிறது. எல்லா பக்கத்திலிருந்து எல்லாரும் வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம்ம பட்ட கஷ்டத்திற்கு இன்னைக்கு பலன் கிடைத்திருக்கிறது என்பது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. அதே நேரத்தில் வருத்தமான விஷயம் என்றால் மதுரையில் மாமன் படம் வெற்றி அடைய வேண்டும் என்று சில அன்பு தம்பிகள்... அப்படி அவங்களை அன்புத்தம்பிகள் என்று சொல்றதுக்கே எனக்கு வருத்தமா இருக்கு. மாமன் படம் வெற்றி அடைய மண் சோறு சாப்பிட்டு இருக்காங்க.
முட்டாள்தனம்
தம்பீங்களா இது ரொம்ப முட்டாள்தனம். எங்கேயோ இருந்துட்டு நாம இப்படி பண்ணுனா என் காதுக்கு வரும் என்னை இம்ப்ரஸ் பண்ணலாம்ன்னு அல்லது படம் நல்லா வரணும்னு நீங்க இப்படி பண்ணி இருக்கலாம். ஆனால் ஒரு படம் நல்லா இருந்தா மக்களுக்கு பிடிக்கும், அந்த படம் நல்ல ஓடும். அதை விட்டுட்டு மண் சோறு சாப்டா எப்படி படம் ஓடும்? இது ரொம்ப வேதனையா இருக்கு.
சாப்பாட்டுக்காக கஷ்டம்
அந்த காசை நாலு பேருக்கு தண்ணி வாங்கி கொடுத்திருக்கலாம், மோர் வாங்கி கொடுத்திருக்கலாம், சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கலாம். இதுபோல செய்றவங்க என் தம்பிகளாகவோ, ரசிகர்களாகவோ இருக்க கூட தகுதி இல்லை என்று நினைக்கிறேன். நான் சாப்பாடை அவ்வளவு மதிக்கிறவன். சாப்பாடு இல்லாம பல நாள் இருந்திருக்கிறேன். அதோட கஷ்டம் எனக்கு தெரியும்.
சாப்பாட்டுக்கு மரியாதை இல்லை
இன்னைக்கு நான் இந்த இடத்திற்கு அவ்வளவு கஷ்டப்பட்டு வந்து இருக்கிறேன். அப்படி கஷ்டப்பட்ட சாப்பாட்டுக்கு கூட நீங்க மரியாதை கொடுக்கவில்லை. அந்த சாப்பாடை நீங்க மதிக்கவே இல்ல. இது எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு. காலையிலிருந்து அவ்வளவு பாராட்டுகள் வரும்போது சந்தோஷமாக இருந்து ஆனால் இந்த தவறான செயலை செய்து என்னை கஷ்டப்படுத்திட்டீங்க. தயவுசெய்து இதுபோல ஒரு தவறு செய்யவே செய்யாதீங்க. இது ரொம்ப முட்டாள்தனமா இருக்கு என்று வருத்தமாக நடிகர் சூரி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications