ஹீரோ சூட்கேஸில் "காண்டம்” இருந்தால் கூல்.. ஹீரோயின் பேக்ல இருந்தா? தமிழ் சினிமா ரூல்ஸ் வேற லெவல்
சென்னை: சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் பார்த்துட்டு ஒரு விஷயம் நமக்கு மட்டும் நல்லாவே புரியுது. தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு ஒரு ரூல்ஸ் ஹீரோயினிக்கு இன்னொரு ரூல்ஸ். படத்தில் சூர்யா கேரக்டர் பல பெண்களுடன் பழகி இருக்கிறார். சூட்கேஸில் காண்டம் இருக்கிறது அதை அம்மா கண்டுபிடிக்கிறார். கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சங்கடம்... அவ்வளவுதான். பெரிய ஒழுக்கப் பிரசங்கம் எதுவும் கிடையாது. உண்மைய சொன்னா அந்த காண்டம் சீனையே படம் ரொம்ப கூலாக தான் கடந்து போகிறது.
சரி.. இதே இடத்தில் நம்ம ஒரு சின்ன கற்பனை பண்ணி பார்ப்போமா? சூர்யா சூட்கேஸில் இருந்த காண்டத்துக்கு பதிலாக மமீதா பேக்கில் காண்டம் இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? அய்யய்யோ படம் வேற லெவலுக்கு ட்ரோல் ஆகி இருக்கும்? ஒரு பொண்ணு இப்படி எல்லாம் இருக்கலாமா என்று கேள்வி வந்திருக்கும். சரி படத்தில் எப்படி இருக்கும் தெரியுமா? அவளுக்கு என்ன பின்னணி? எதுக்காக இப்படி இருக்கா? அவள் நல்ல பொண்ணா? என்று 10 கேள்வி வரும்.
தமிழ் சினிமாவின் கட்டமைப்பு
அதோடு ஒரு ஃப்ளாஷ் பேக்.. அதிலும் ஒரு சோகப்பாடல்.. அதுக்கப்புறம் அவள் அப்படி வாழ வேண்டிய கட்டாயம் என்னன்னு ஒரு பெரிய கதை.. கடைசியில் ஹீரோ வந்து நீ தப்பு பண்ணல சூழ்நிலை தான் உன்னை இப்படி ஆக்கி இருக்கு என்று சொல்லி அவளை கரம் பிடிப்பார். இது கற்பனை தான். ஆனா தமிழ் சினிமாவை இத்தனை வருடம் பார்த்த நமக்கு இப்படி எல்லாம் தோணாமல் இருக்குமா?

ஆடையில் காண்டம் பேசியதற்கு என்ன நடந்தது
2019-ல் ரத்தினகுமார் இயக்கிய ஆடை வந்த போது அமலாபால் நடித்த கேரக்டர் பாலியல் விஷயங்களை வெளிப்படையாக பேசும் விதமே பெரிய விவாதமாக மாறியது. குறிப்பாக காண்டம் பற்றி அவர் பேசும் அந்த வசனம் சோசியல் மீடியாவில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. அதாவது பாலியல் தொழில் செய்யும் பெண் என் பாதுகாப்பு, என் முடிவு என்று பேசினதை கூட ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலை இன்னும் இருக்கிறது என்பதுதான் அந்த விவாதம் காட்டியது. ஆனால் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் அதே காண்டம் ஒரு ஆண் கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் வரும் போது அது காமெடியாக மாறுகிறது. இதுதான் இப்போது சிலர் சுட்டிக்காட்டும் இரட்டை அளவுகோல்.
பருத்திவீரன் சம்பவம்
இது மட்டும் இல்லங்க, தமிழ் சினிமா பெண் கேரக்டரை பரிசுத்தமானவர் என்று காட்டுவதற்கு இன்னொரு வழியையும் அடிக்கடி பயன்படுத்துகிறது. பருத்திவீரன் படத்தில் பிரியாமணி நடித்த முத்தழகு கேரக்டர் பலருக்கும் ஞாபகத்திற்கு இருக்கும். அதில் வில்லன்கள் முத்தழகுவை பாலியல் வன்புணர்வு செய்து விடுவார்கள். உடனே முத்தழகு என்னை கானா பொணமா ஆக்கிடு என்று கெஞ்சுவார். காரணம் அவர் இன்னொருவால் வன்புணர்வு செய்யப்பட்ட விஷயம் கூட யாருக்கும் தெரிய கூடாது என்று சொல்லுவார்.

கடைசியில் கார்த்தியும் அவரை அப்படியே பண்ணி விடுவார். அப்படி பார்த்தால் இன்னொருவனால் பாலியல் வன்புணர்வு செய்தால் அந்த பெண் கெட்டுப் போய்விட்டாள் என்று இவர்கள் காட்டுகிறார்களா? என்பதுதான் கேள்வி. இப்படியான கதைகளில் பெண்ணின் காதல், உடல், உறவு எல்லாமே ஒரே ஆணை சுற்றி தான் இருக்க வேண்டும் என்ற பிம்பம் தொடர்ந்து வந்திருக்கிறது. அதனால் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் மமீதா கேரக்டரை பார்க்கும்போது சிலருக்கு அந்த பழைய சினிமா கணக்கு நினைவுக்கு வருகிறது.

அதுமட்டுமில்லைங்க ரிதம் படத்தில் மீனா ஹீரோயினாக நடிச்சிருப்பாங்க அவங்க முதலிரவுக்கு முன்பே கணவர் இறந்து போயிடுவார். அதற்குப் பிறகு வேறு ஆணை எட்டிகூட பார்க்க மாட்டாங்க.. அதில் ஒரு டயலாக் வரும், ஆட்டோல போனாலும் நான் கண்ணகி தான் என்று.. அதே படத்தில் ஹீரோவும் காதல் மனைவியை இழந்து விடுவார். ஆனால் முதலில் அவர்தான் மீனாவை காதலிக்க தொடங்குவார். பிறகு குடும்பத்தில் சூழ்நிலை, மகனின் எதிர்காலம் என எல்லாவற்றையும் பார்த்து ஹீரோயினி மனம் மாறுவார். இப்படி தான் அந்த காலத்தில் இருந்தே பல படத்திலும் பெண் கேரக்டர்கள் தொடர்ந்து வருகிறது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சம்பவம்
சஞ்சய் வெளிநாடு போகிறார் டேட்டிங் செய்கிறார். பல பெண்களுடன் Casual relationship வைத்திருக்கிறார். படமும் அதை பெரிய ஒழுக்க பிரச்சனையாக மாற்ற வில்லை. ஆனால் மமீதா நடித்த மேடி கேரக்டரின் கடந்த காலம் அப்படி இருந்திருந்தால் கதையே வேறு திசைக்கு சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் இந்த விமர்சனம்.
கதைப்படி, மேடிக்கு 20வயது மூத்த ஆண் மீது காதல் வருகிறது. அதுவே ஒரு சின்ன பையனுக்கு மூத்த பெண் மீது காதல் வரும்படி படம் எடுக்கவில்லையே ஏன்? ஆண் வயதானவராக இருக்க வேண்டும், பெண் வயது குறைந்தவராக இருக்கணும் என்ற ஆதிக்கத்தை இந்த படமும் காட்டுகிறது.
சூர்யா- ஜோதிகா மீண்டும் கல்யாணம் செய்தது இதற்கு தானா? அழகான காரணம்!
கடைசியில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் நமக்கு ஒரு விசித்திரமான கேள்வி விட்டு செல்கிறது. ஹீரோவின் கைப்பையில் காண்டம் இருந்தால் அது அவனுடைய கடந்த காலம். ஹீரோயின் கைப்பையில் அதே காண்டம் இருந்தால் அது அவளுடைய குணம் ஆகிடுமா? தமிழ் சினிமா உண்மையில் இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் ஒரே அளவுகோலில் பார்க்க தயாரா? என்பதுதான் இங்கே பேச வேண்டிய விஷயம்.


Click it and Unblock the Notifications
