பொண்ணு உடம்ப வச்சு தான் பேசுவியா? நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? மேடையில் கொந்தளித்த தீபா
சென்னை: விஜய் டிவி பிரபலமாகவும் சின்னத்திரை, வெள்ளி திரையில் நடிகையாகவும் இருக்கும் தீபா சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தென் மாவட்ட பெண்களின் அவல நிலை குறித்தும் ஆண் ஆதிக்கம் செய்யும் ஆண்களிடம் கோபமாக சில கேள்விகளை கேட்டு இருக்கிறார்.
அதோடு பெண்களை உடல் உறுப்புகளை வைத்து அவமானப்படுத்துபவர்கள் மற்றும் பெண்களை அடித்து துன்புறுத்துபவர்களுக்கு எதிராகவும் தீபா கடுமையாக சாடி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் தீபா திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இவரை ரசிகர்கள் பெரும்பாலும் அக்கா என்றுதான் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்த நிலையில் அதில் பெண்களுக்கு நடக்கும் அவல நிலை குறித்து கணீர் என்ற குரலோடு கேள்வி எழுப்பி இருந்தார்.
அதில் தீபா பேசுகையில், நான் தென் மாவட்டங்களில் இருக்கும் பெண்களுக்காக பேச வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். ஏன்னா எங்களுக்கு சின்ன வயதில் இருக்கும்போது கதைகள் மூலமாகத்தான் டிரைனிங் கொடுக்குறாங்க. அதில் புருஷன் தாசி வீட்டுக்கு போனாலும் அவனை கூடையில் வைத்து சுமக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார்கள்.
அப்படி புருஷன் இன்னொருத்தி வீட்டுக்கு போனா நீ கேள்வி கேட்கக்கூடாது... அவனுக்கு தொண்டுகள் செய்யணும், இல்லன்னா இந்த சமுதாயம் உன்னை தவறாக சொல்லிவிடும், நீ பத்தினி கிடையாது என்று சொல்லியே எங்களை வளர்க்கிறார்கள். அதே நேரத்தில் ஒரு ஆணிடம் நீ ஆம்பள புள்ள அவளை அடக்கி வைக்கணும். அவ எங்க போறான்னு பார்த்து வையி.. அவளை எப்படி விடலாம் என்றெல்லாம் சொல்லி வளர்க்கிறார்கள்.
இதைவிட கேவலம் என்னென்ன வீட்டில் சாப்பிடும் போது கூட அதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். கொஞ்ச அதிகமா கஞ்சி குடித்து விட்டால் கூட நீ பொம்பள புள்ள குறைச்சு தின்னு... ஆம்பள பையனுக்கு அதிகமா வையி என்று அதட்டி வைப்பார்கள். நாங்களும் நம்மை அடித்து துன்புறுத்தும் மாப்பிள்ளையை திருத்திடலாம் என்று பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிச்சு வந்தாலும் திருந்தாத ஜென்மத்தை என்ன செய்ய முடியும்? அந்த மாதிரி ஆண்களிடம் பாதிக்கப்பட்டது எங்க வாழ்க்கையும் எங்களுடைய சந்தோஷமும் தான்.
என்னைக்காவது எங்க சந்தோஷத்துக்காக நாங்க வாழனும்னு ஆசைப்பட கூடாதா? அப்படி ஆசைப்படனும் நெனச்சுக்கிட்டேம்னு வச்சுக்கோங்க எங்களுக்கு ஒரு பட்டம் கட்டி ஒதுக்கி வச்சிருவாங்க. இன்னும் ஊர்ல கதைகள் மூலமாக தான் பல
கொடுமைகள் பண்ணிக்கிட்டு இருக்காங்க... எங்களை ஒருத்தன் ஏமாத்திட்டு போயிட்டான்னா கூட அவன் வருவான் வருவான்னு காத்திருக்க வேண்டும். நாங்க மனுஷங்க கிடையாதா? எங்களுக்கும் உணர்வுகள் இருக்காதா? ஆம்பளைங்களுக்கு மட்டும் தான் எல்லாமே இருக்குமா?
அவங்களுக்கு செக்ஸுவல் ஆசை இருக்கிற மாதிரி எங்களுக்கும் ஆசை இருக்காதா? எனக்கு என் புருஷன் என்கிட்ட பல்லை காட்டி சிரிச்சு பேசணும்னு ஆசை இருக்காதா? என் புருஷன் என்கிட்ட மனச விட்டு பேசணும்னு ஆசை இருக்காதா? அடி, மிதி, ஏன் கடிச்சி வெச்சா கூட என் புருஷன் கடிச்சு வச்சிட்டான்னு வெளியே சொல்ல கூடாது... சொன்னா குடும்பமானம் பேரும்... போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிராத என இப்படி சொல்லி சொல்லி எங்கள அடிமையா வைக்கிறாங்க.
இது வந்து நான் பேசுறது ஹை கிளாஸ்ல இருக்குற பெண்களுக்காக இல்ல என்ன மாதிரி நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கவங்களுக்காக பேசுறேன். ஆக்சிடென்ட்ல புருஷன் செத்துப் போயிட்டா அந்த பொண்ணுக்கு அந்த பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சா என்ன தப்பு? கல்யாணம் பண்ணி வைக்க கூடாதுன்னு வீட்டுல அடைச்சு வைக்கிறது..
அந்த பொண்ணு யாரு கூடயாவது பேசிட்டாலோ, போயிட்டாலோ அதை பெருசா பேசுறது... ஏன் ஆம்பளைங்க போகலையா? அப்படியே உங்களுக்கு அக்கறைன்னா அந்த பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிருக்கலாமே? அதுபோல கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு வீடியோ வைரல் ஆச்சு அதில் ஒரு குறிப்பிட்ட ஜாதி பெண்களின் மார்பகத்தை அறுக்க வேண்டும் என்ற ஒருத்தன் பேசி இருக்கான்.
இது எவ்வளவு பெரிய கேவலம்? பெண்களின் மார்பகத்தை கடவுள் எதுக்கு படைச்சிருக்கார்?
அந்த மார்பகத்தால் ஒரு குழந்தைக்கு பசியை ஆத்துவதற்காக தானே? அப்ப நீயும் உங்க அம்மாவிடம் அதே மார்பகத்தில் தானே பால் குடித்துவிட்டு வந்து இருக்க? நீ இன்னொரு பெண்ணின் மார்பகத்தை அறுத்து விடுவேன் என்று சொல்லுறியே எவ்வளவு கேவலம்... என்று குரல் எழுப்பிய தீபா இதற்கு மேலும் நான் பேசுவேன் ஏனென்றால் நான் என் கண் முன்பு பார்த்தது விஷயங்களையும் நான் அனுபவித்த கொடுமைகளும் தான் இங்க பேசிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் அதனால் என்னுடைய குடும்பத்தில் பிரச்சனை வந்துவிடும் என்றுதான் நான் சில விஷயங்களை பேசவில்லை என்று கோபத்தில் கொந்தளித்த தீபாவிற்கு ரசிகர்கள் பலரும் நீங்கள் சரியாக சொன்னீர்கள் என்று பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் இன்னும் ஒரு சிலர் இந்த அவல நிலை தென்மாவட்டங்களில் மட்டுமல்ல இன்னும் பல கிராமங்களில் இது போலத்தான் நிலைமை இருக்கிறது என்று பலர் கமாண்ட் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications