அஜித் படத்துக்கு வந்த சிக்கல்! ஓடிடியில் இருந்து அதிரடியாக தூக்கப்பட்ட குட் பேட் அட்லி! காரணம் இதுதானா?
சென்னை: அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற இந்தப் படம், தற்போது இசைஞானி இளையராஜா தொடர்ந்த காப்பிரைட்ஸ் வழக்கு காரணமாக, ஓடிடி தளத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்ஸ் ஆபீஸில் குட் பேட் அக்லி
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், ஒரு தரமான 'ஃபேன் பாய்' சம்பவமாக இந்தப் படத்தை இயக்கி இருந்தார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அர்ஜுன் தாஸ் மாஸ் காட்டியிருந்தார். மேலும், திரிஷா, சுனில், பிரியா வாரியர், பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்ட வரவேற்பினைப் பெற்று, வசூலிலும் சக்கைபோடு போட்டது.
என் ஜோடி மஞ்ச குருவி
தற்போது வெளியாகும் புதிய படங்களில், பழைய ரெட்ரோ பாடல்களைப் பயன்படுத்துவது ஒரு ட்ரெண்டாகிவிட்டது. குறிப்பாக, இளையராஜாவின் பாடல்களே அதிக அளவில் இடம்பெறுகின்றன. அந்த வகையில், குட் பேட் அக்லி படத்தில் என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன் உள்ளிட்ட இளையராஜாவின் பிரபலமான பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
ஆனால், தனது அனுமதி இல்லாமல் இப்பாடல்களைப் பயன்படுத்தியதற்காக, இளையராஜா தரப்பில் இருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நஷ்ட ஈடாக ரூ. 5 கோடி வழங்க வேண்டும் என்றும், அனுமதி இல்லாமல் பயன்படுத்திய பாடல்களுக்கு ராயல்டி தொகை தர வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டது. இதற்குப் பதிலளித்த தயாரிப்பு நிறுவனம், "சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது" என்று கூறியது. ஆனால், அந்த உரிமையாளர் யார் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
ஓடிடியிலும் நீக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி
நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, பாடல்களைப் படத்தில் தொடர்ந்து பயன்படுத்தியதற்காக, தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பிலிருந்து புதிய நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், உடனடியாகப் பாடல்களைப் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இந்த தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில், திரையரங்குகளில் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படம், ஓடிடி தளத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால், தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி படம் திடீரென நீக்கப்பட்டுள்ளது. இளையராஜா தொடர்ந்த காப்பிரைட்ஸ் வழக்கு காரணமாகவே இந்தப் படம் நீக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் படம் நீக்கப்பட்டது, அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications