"ரசிகர் மன்றமே வேண்டாம்னு சொன்னவர்!" யாருக்கும் தெரியாமல் 12 ஊழியர்களுக்கு வீடு கட்டி கொடுத்த அஜித், பின்னணி!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், திரைக்கு வெளியே எப்போதும் மிகவும் தனித்துவமானவர். தனக்கென ரசிகர் கூட்டம் வேண்டாம் என்று மன்றங்களையே கலைத்தவர். அவர் செய்யும் உதவிகள் மற்றும் நல்ல விஷயங்கள் பெரும்பாலும் வெளியில் தெரியாமல் இருப்பதுதான் அஜித்தின் வழக்கம். இந்த நிலையில், அஜித் 2012ஆம் ஆண்டு செய்த ஒரு மிகப் பெரிய மனிதநேயம் குறித்தத் தகவல் தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் தல
அஜித், சினிமா பின்புலமே இல்லாமல் திரையுலகிற்கு வந்து, இன்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். அவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும், ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போல்தான். இந்த ஆண்டு அஜித்தின் நடிப்பில் 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இதில் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி அடைந்தது.
மீண்டும் கூட்டணி
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார் அஜித். இந்தச் சூழலில், அஜித்தின் 64வது படத்தை அவரே இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மனிதாபிமான உதவி
அஜித்குமார், எப்போதும் விளம்பரத்தைத் தவிர்ப்பவர். அவர் செய்த ஒரு மகத்தான உதவி குறித்தத் தகவல் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு, கேளம்பாக்கம் கண்டிகை பகுதியில், அஜித் தனது வீட்டில் வேலைப்பார்த்த 12 ஊழியர்களுக்கு - சமையல்காரர், டிரைவர், தோட்டக்காரர்கள் உட்பட - தனித் தனியாக வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்.
அஜித் அவென்யூ
சுமார் 1500 சதுர அடியில் வரிசையாகக் கட்டப்பட்டுள்ள அந்த வீடுகள் அமைந்துள்ளப் பகுதிக்கு, 'அஜித் அவென்யூ'எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் என்ற புகழைத் தாண்டி, தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விதமாக அஜித் செய்த இந்த மனிதாபிமான உதவி, மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
அஜித்தின் தனித்துவமும்
அஜித்தின் இந்தச் செயலும், பொதுவாழ்க்கையில் அவர் கடைப்பிடிக்கும் தனிமையும், மற்ற நடிகர்களாலும் பாராட்டப்படுகிறது. சமீபத்தில் கூட நடிகர் பார்த்திபன், அஜித்தின் தனிப்பட்டக் கருத்துக்களைப் பாராட்டிப் பேசியிருந்தார். நடிகர் விஜய், அஜித் ஆகியோர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்தாலும், அஜித் ரசிகர் மன்றங்களைக் கலைத்ததன் மூலம், ரசிகர்களின் அன்பை ஒரு நடிகருக்கான ஆதரவாக மட்டும் குறுக்காமல், தனிப்பட்ட நல்ல செயல்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக வாழ்கிறார் என்பதை நிரூபித்துள்ளார்.
இப்படி, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஊழியர்களுக்கு 12 வீடுகள் கட்டிக் கொடுத்து, அவர்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்த அஜித்குமாரின் இந்தச் செயல், உண்மையிலேயேப் பாராட்டத்தக்கது.












Click it and Unblock the Notifications