என் கண்ணு முன்னாடி அஜித், விஜய் சண்டை போட்டாங்க! கெட்ட வார்த்தை பேசுவாரு! வெங்கட் பிரபு உடைத்த ரகசியம்
சென்னை: தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் அஜித்-விஜய் நட்பு குறித்து, இயக்குநர் வெங்கட் பிரபு அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் நிஜ வாழ்க்கை, மற்றும் கேரக்டர் குறித்து அவர் பகிர்ந்த தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

வெங்கட் பிரபு பேட்டி
இயக்குநர் வெங்கட் பிரபு கூறியதாவது, அஜித் குமார் மிகவும் ஓபனாகவும், எமோஷன்களை வெளிப்படையாக காட்டும் தன்மை கொண்டவராகவும் இருப்பார். சில சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டு உடனே கண்கலங்கிவிடுவார் என்றும், அருகிலுள்ளவர்களிடம் அன்பை வெளிப்படுத்தும் விதமும் நேர்மையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். நம்மை திடீரென்று பார்த்தால் கட்டிப்பிடிக்கும் போது கூட சில கெட்ட வார்த்தைகள் எல்லாம் பேசி சந்தோஷமா கட்டிப்பிடிப்பாரு என்று சிரித்தபடியே வெங்கட் பிரபு போட்டுக் கொடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில், நடிகர் விஜய் முற்றிலும் மாறுபட்ட குணநலன் கொண்டவர் என்றும் வெங்கட் பிரபு கூறினார். விஜய் தனது உணர்ச்சிகளை எளிதில் வெளியில் காட்டாமல் கட்டுப்படுத்திக் கொள்வார். வெளிப்படையாக அமைதியாக இருப்பவர் போல தோன்றினாலும், அவருடைய அன்பு மற்றும் பாசம் மிகவும் ஆழமானது. குறிப்பாக அவர் ஒருவரை அணைத்துப் பேசும் போது தான் அந்த பாசம் முழுமையாக உணர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அஜித் விஜய் சண்டை
மேலும், அஜித் குமார் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசையாக இருந்ததாம். இதுகுறித்து இருவரிடமும் ஒருமுறை பேசியபோது, இருவரும் 'நான் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பேன்' என்று என் கண்முன்னே சண்டை போட்டுட்டு இருந்தாங்க. அப்ப நான் கதை கூட ரெடி பண்ணல அதற்கு முன்னே இப்படி சண்டை போடுறீங்களே என்று கேட்டேன். ஆனா ரெண்டு பேருமே என்ன வேணாலும் கதையை வச்சுக்கோங்க.. ஆனா வில்லனா நான் தான் நடிப்பேன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க என்றும் பழைய நினைவுகளை வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.

வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு, தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லும் பாணியால் பிரபலமான இயக்குநர். 'சென்னை 600028' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், அஜித் குமார் நடித்த 'மங்காத்தா' படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அந்த படம் அஜித்தின் திரைபயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது. தொடர்ந்து பல வெற்றி படங்களை வழங்கியுள்ள அவர், முன்னணி நடிகர்களுடன் நல்ல நட்புறவை பேணி வருகிறார்.
இந்த நிலையில், அஜித்-விஜய் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மீண்டும் அதிகரித்துள்ளது. வெங்கட் பிரபுவின் இந்த பேட்டி, அந்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications