பிக்பாஸ் அர்ச்சனா-அருண் நிச்சயதார்த்தம்! ‘என் வாழ்க்கை உன்னுடன்!’ - அருண் நெகிழ்ச்சி! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: தமிழ் சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை அர்ச்சனா மற்றும் நடிகர் அருண் ஆகியோர் தங்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு, சமூக வலைத்தளங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு, அருண் வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான பதிவு மற்றும் பிரபலங்கள் தெரிவித்த வாழ்த்துக்கள் வைரலாகி வருகின்றன.

அருணின் நெகிழ்ச்சியான பதிவு
நிச்சயதார்த்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் அருண், அனைவரின் மனதையும் தொடும் ஒரு நெகிழ்ச்சியான பதிவையும் இட்டுள்ளார்.
"ஒரு காலத்தில் காதலாகத் தொடங்கிய நமது பயணம்... இன்று இந்த நிச்சயதார்த்தம் வரை வந்து நிற்கிறது. எனது எதிர்காலமும், என் வாழ்க்கையும் உன்னுடன் தான் என்பதை இந்த நாள் உறுதி செய்துள்ளது. இனிமேல் நமது பயணங்கள் அனைத்தும் ஒன்றாக, நம் காதலைப் போலவே மகிழ்ச்சியாக இருக்கும்! அனைவருக்கும் நன்றி"என்று அவர் பதிவிட்டிருந்தார்.
அருணின் இந்த அன்புப் பதிவு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. லட்சக்கணக்கான லைக்குகளையும், ஆயிரக்கணக்கான வாழ்த்துக்களையும் இந்தப் பதிவு பெற்று வருகிறது.
திரையுலகினர் வாழ்த்து மழை
அருண் பதிவிட்ட புகைப்படத்திற்கு கீழே, பல திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரியோ ராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ், பிக்பாஸ் சக போட்டியாளர்களான விஜே பாலாஜி, ரம்யா பாண்டியன், விஜய் வசந்த், ஃபரினா ஆசாத் என பலரும் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.
பிக்பாஸ் முதல் வாழ்க்கை வரை
அர்ச்சனாவின் சினிமா வாழ்க்கை விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியலில் தொடங்கியது. நடிகை அர்ச்சனா, 'ராஜா ராணி' சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இவரது வில்லத்தனம் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், இவரது இயல்பான நடிப்பு அவரைப் பிரபலம் ஆக்கியது. இவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே வந்த அவர், துவக்கத்தில் பலரால் நிராகரிக்கப்பட்டார். ஆனால், சக போட்டியாளரான பிரதீப் வெளியேற்றப்பட்டபோது, அதற்கு எதிராகத் துணிச்சலாகப் பேசியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றார்.
ஒவ்வொரு வாரமும் தன் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தி, பிக்பாஸ் தமிழ் வரலாற்றின் முதல் வைல்ட் கார்ட் வின்னர் மற்றும் இரண்டாவது பெண் டைட்டில் வின்னராக சாதனை படைத்தார். அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே, அருணுக்கும் அர்ச்சனாவுக்கும் காதல் இருப்பதாக வதந்திகள் பரவின. இருவரும் இந்த வதந்திகள் குறித்துப் பெரிதாக வாய் திறக்கவில்லை.
அதேபோல், நடிகர் அருண் விஜய் டிவியில் ஒளிபரப்பான'பாரதி கண்ணம்மா' சீரியலின் கதாநாயகனாக நடித்துப் பிரபலமானார். அர்ச்சனா பிக்பாஸில் வெற்றி பெற்ற அடுத்த சீசனில் அருண் கலந்துகொண்டபோது, அவர்களது காதல் உறுதி செய்யப்பட்டது. பிக்பாஸ் வீட்டிற்குள் நண்பராகச் சென்று, அருணுக்கு ஆதரவு கொடுத்த அர்ச்சனா, அதன் மூலம் தங்களது காதலையும் ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தினார்.
பிக்பாஸ் மூலம் உருவான இந்த ரியல் செலிபிரிட்டி ஜோடி, தற்போது தங்களது திருமண பந்தத்தில் இணையவுள்ளது. இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications