ரஜினியையே ஓட வைத்த பிரபல இயக்குநர்! சம்பள பாக்கி வேறயாமே! வெளிவந்த கொடி பறக்குது சீக்ரெட்
சென்னை: 16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு ரூ 3000 சம்பளம் பேசப்பட்டதில் அவருக்கு ரூ 2500 மட்டுமே பாரதிராஜா கொடுத்ததாகவும் பின்னாளில் அந்த 500 ரூபாயை கேட்ட ரஜினி ஒரு கட்டத்தில் அதை கேட்காமல் விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: 'ஓ...காதல் என்னை காதலிக்கவில்லை'
என்ன ஒரு பாட்டு. காது வழியாக இதயத்துக்குள் நுழையும் ஒரு சுகம் சில பாடல்களுக்கு மட்டும் தான் இருக்கும். அதில் இந்த பாடல் ஒன்று..

அதுவும் அந்த எஸ்.பி.பியின் "தே......வி வான் சொல்லியா மேகம் வரும். நீ சொல்லியா காதல் வரும்?" வரிகள் அழகோ அழகு. படத்தில் எஸ்.பி.பியோடு வாணி பாடும் பாடலில் வாணி காதலின் கோரிக்கை வைக்க பாலு ஏற்றுக்கொள்ள மாட்டார்.
அடுத்த அதே பாடலில் சித்ரா குரலில் காதலை ஏற்றுக் கொண்டு காதலிக்கும் பாடலாக வரும். பாரதிராஜா 'வேதம் புதிது' படத்தில் கடன்கள் ஏற 'எம்.ஜி.ஆரை கண்ட ஸ்ரீதரை'ப் போல ரஜினியை சந்தித்து கால்ஷீட் கேட்க ரஜினியும் உடனே தந்து விட்டார். அதற்கு முந்தைய 'முதல் மரியாதை'யும், 'கடலோரக் கவிதைகள்' தந்த வெற்றி ரஜினி தந்த மரியாதை அது.
ரஜினி கால்ஷீட் கிடைத்ததும் பாரதிராஜா கதைக்காக அலைகிறார். அவரின் ஆஸ்தான கதாசிரியர் செல்வராஜ் அப்போது மும்பையில் ஹிந்திப் படங்களில் பிஸி. அவரைப் பிடிக்க முடியாததால் வெளி ஆட்களிடம் கதை கேட்கிறார். அப்போது ஒரு இளைஞன் சொன்ன கதை அவருக்கு பிடிக்கிறது.
கதைப்படி ரஜினி பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி. அவருக்கு ஒரு காதலி. இந்த நிலையில் பிரதமரைக் கொல்ல ஒரு பெண் முயல்கிறார். அது யாரென்று பார்த்தால் ரஜினியின் காதலி. இந்த கேஸில் ரஜினியும் சிக்க அவரும், காதலியும் மீண்டு வருவதே மீதிக் கதை. பாரதிராஜாவுக்கு கதை பிடித்துவிட செல்வராஜிடம் அபிப்ராயம் கேட்கிறார். அவரோ ரஜினிக்கு ஏற்ற கதை என சொல்கிறார்.
ரஜினியின் கால்ஷீட் தேதி நெருங்கி விட பாடல் பதிவாக்கி பாடல்களை படமாக்குகிறார். அப்போது யாரோ இந்த கதை வெற்றி பெறாது எனச் சொல்ல மணிவண்ணனை அழைக்கிறார். பிரதமரைக் கொல்லும் கதையை தூக்கிப் போட்டு விட்டு மணிவண்ணன் வேறொரு கதையை சொல்கிறார்.
அதன் படி சண்டைக் காட்சிகளை படமாக்குகிறார்கள். என்ன எடுப்பது என்றே தெரியவில்லை. குழப்பமாகி செல்வராஜை நிர்பந்தித்து சென்னைக்கு அழைக்கிறார் பாரதிராஜா. அவர் இது வரை எடுத்த பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் பார்த்து விட்டு ஒரு கதையை தயாராக்குகிறார். அது தான் இப்போது நாம் பார்க்கும் 'கொடி பறக்குது'.
லேசாக அமிதாப் நடித்து அவர் மனைவி கதையெழுதிய 'ஷாஹென்ஷா' படத்தை ஒத்திருந்தது பாரதிராஜா-செல்வராஜின் துரதிர்ஷ்டம். இந்தப் படத்தில் ரஜினி அழகனேன்றால் அப்படி ஒரு அழகு. இப்போதைய ரஜினி வயதின் சரிபாதிக்கருகே. அதாவது 37 வயது 'கொடி பறக்குது' படத்தில் நடிக்கும் போது. உடை, ஹேர்ஸ்டைல், நடை எல்லாம் ஸ்டைலாக செய்திருப்பார் ரஜினி.
அமலாவின் அழகும் அப்படியே. நீச்சல் உடை வேறு. எல்லாம் முடிந்து படத்தை பார்த்த பாரதிராஜா, செல்வராஜ், ரஜினி யாருக்குமே திருப்தியில்லை. படம் வெளியானது. பெரிதாக எதிர்பார்த்து போன ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம். காரணம் முதல் மரியாதையில் கௌரவ வேடத்தில் ஒரு காட்சியில் வில்லனாக வந்து சத்யராஜ் சாவார். அடுத்து அவருக்கேற்ற கடலோரக் கவிதைகள் கொடுத்தார் பாரதிராஜா.
அப்படி 16 வயதினிலே படத்தில் பரட்டையாக வந்து ரஜினியும் செத்துப் போவார். அந்த சிறிய பாத்திரத்துக்குப் பிறகு பாரதிராஜாவோடு ரஜினி சேர்கிறார். நல்ல கதையோடு வருவார் என நம்பிய ரஜினி ரசிகர்கள் நன்றாக ஏமாந்தது நிஜம்.
அப்படியும் ரஜினி என்ற பெயரால் மதுரை, சென்னையில் நூறு நாட்கள் ஓடியது. மற்ற இடங்களில் ஓடவில்லை. ரஜினிக்கு ஏப்ரலில் குருசிஷ்யன், செப்டம்பரில் தர்மத்தின் தலைவன், அக்டோபரில் ப்ளட்ஸ்டோன் என வந்த பிறகு நவம்பரில் இந்தப் படம். இதன் தோல்வியை 'ராஜாதிராஜா' வந்து சரிக்கட்டியது.
ஒரு அட்டகாசமான வாய்ப்பை கொண்டு போய் குழிதோண்டி புதைத்து விட்டார் பாரதிராஜா. இதில் ராஜாவோடு ஊடல். இதனால் கன்னடத்திலிருந்து அம்சலேகாவை கொண்டு வந்தார். அம்சலேகா 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு' என அழகான ஒரு பாடலை கொடுத்தார்.
'ஓ..காதல் என்னை காதலிக்கவில்லை' பாட்டு அப்போது தான் கன்னடப்படமான ரணரங்கா படத்தில் போட்ட 'ஓ..மெகவே' டியூனை இதில் போட்டு நிரப்பி விட்டு போனார். அன்னை மடியில் பாட்டு சுமார். தொண்டைக்குள்ள ஒரு விக்கலெடுக்குது பாட்டெல்லாம் ரஜினி படத்தில் வராத பாடல்.
சிவாஜிக்கு முதல் மரியாதை செய்தது போல் ரஜினியின் கொடியை பறக்க விட நினைத்தார் பாரதிராஜா. ஆனால் அவர் கதை எழுதியதில்லை. தன் கெரியர் மொத்தத்துக்கே மூன்று நான்கு கதைகள் தான் எழுதி இருக்கிறார். காட்சிப்படுத்துதல் மட்டுமே அவர் ஸ்பெஷல்.
கமலுக்கு பாக்யராஜ் வந்து கை கொடுத்து 'கைதியின் டைரி' வந்தது. ரஜினிக்கு மணிவண்ணன் வந்தார். அவர் வில்லனாக நடித்தது தான் மிச்சம். 16 வயதினிலேக்கு ரஜினிக்கு பேசியது 3000 ரூபாய். அதில் 2500 மட்டும் பாரதி தந்திருக்கிறார். அந்த 500 எப்போ தருவீங்க எனக் கேட்பாராம் ரஜினி.
கொடி பறக்குது படத்துக்கு பாரதிராஜா அட்வான்ஸை எடுத்து ரஜினியிடம் கொடுக்க கோபத்தோடு ரஜினி பாரதிராஜாவின் பாக்கெட்டில் கை விடுகிறார். அதிலிருந்து இரண்டு ரூபாயை எடுத்துக் கொண்டு "இது தான் அட்வான்ஸ்...பாக்கி படம் முடிந்து பார்த்துக் கொள்ளலாம்" என்கிறார்.
பின்னாளில் பாரதிராஜா வெளிப்படையாக கால்ஷீட் கோரிக்கை வைத்தும் ரஜினி திரும்பியே பார்க்கவில்லை. அந்த 500ஐயும் கேட்பதில்லை.... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications