“நிம்மதியா தூங்க கூட முடியல” மனதில் இந்த வலி இருக்கிறது.. மேடையிலேயே கண் கலங்கிய நடிகை பூமிகா
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பூமிகா, இன்று கதையின் முக்கியமான கேரக்டரில் மட்டுமே நடித்து வருகிறார். காதல் கதாநாயகி, குடும்ப பாங்கான வேடங்கள், அதன்பிறகு குணச்சித்திர பாத்திரங்கள் என தனது திரை பயணத்தை பல கட்டங்களாக மாற்றி அமைத்தவர் பூமிகா.
இப்போது அவர் நடித்துள்ள 'யுபோரியா' திரைப்படம் வெளியான நிலையில், அந்தப் படத்தின் படவிழாவில் நடந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தில் விழாவில் கண் கலங்க அவர் பேசியதுதான் பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

ஐதராபாத்தில் நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன்நிகழ்ச்சியில் மேடையில் பேசும் போது, பூமிகா தன்னுடைய மனநிலையை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டார். இந்த படத்தில் நடிக்கத் தொடங்கிய நாளிலிருந்து மனதில் ஒரு சுமை இருந்து வந்ததாகவும், இரவுகளில் சரியாக தூக்கம் வராமல் தவித்ததாகவும் அவர் வெளிப்படையாக பகிர்ந்தார்.
ஒரு நடிகையாக பல வித்தியாசமான கதைகளில் நடித்திருந்தாலும், இந்த படம் தன்னை மனதளவில் மிகவும் பாதித்ததாக அவர் கூறினார். 'யுபோரியா' திரைப்படம், சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்முறைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சமூகப் பிரச்சனை அடிப்படையிலான படம். உண்மை சம்பவங்களை தழுவி கதையை வடிவமைத்துள்ளதாக கூறப்படும் இந்த படம், பார்வையாளர்களை வெறும் பொழுதுபோக்குக்காக அல்லாமல், சிந்திக்க வைக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதையின் தாக்கம் நடிகர்களின் மனதையும் ஆழமாகத் தொட்டுள்ளது என்பதையே பூமிகாவின் உருக்கமான பேச்சு வெளிப்படுத்தியது. இந்த படத்தை இயக்கியுள்ளவர் குணசேகர். உண்மை சம்பவங்களை தைரியமாக திரைக்குக் கொண்டு வரும் இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் அவர், இந்தப் படத்தின் மூலம் சமூகத்தில் இருக்கும் மறைக்கப்பட்ட வலிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர முயற்சித்துள்ளார்.

பூமிகாவுடன் இணைந்து சாரா அர்ஜூன், பிருத்வி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, குழந்தை நட்சத்திரமான சாரா அர்ஜூனின் கேரக்டர், கதையின் ஆழத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒரு காலத்தில் ரோஜா கூட்டம்', 'பத்ரி' போன்ற படங்களின் மூலம் இளம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பூமிகா, திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்திருந்தார். அதன் பிறகு மீண்டும் திரையுலகுக்கு திரும்பிய அவர், கதாநாயகி மையப்படங்களை விட, கதைக்கு முக்கியமான பாத்திரங்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.
மொத்தத்தில், 'யுபோரியா' என்பது பூமிகாவின் திரைப் பயணத்தில் இன்னொரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. கமர்ஷியல் படங்களுக்கிடையே, சமூகத்தை நேரடியாக கேள்வி கேட்கும் இப்படம், ரசிகர்களை கலக்கவும், சிந்திக்கவும் வைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது. மேடையில் பூமிகா கண் கலங்கிய சம்பவம், இந்த படம் ஒரு நடிகைக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்கும் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை முன்கூட்டியே சொல்லாமல் சொல்லும் ஒரு சின்ன சாட்சி போலவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications