Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல்
சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜூன் கடந்த சில ஆண்டுகளாக குணச்சித்திர கதாபாத்திரங்கள், வில்லன் வேடங்கள் மற்றும் சிறப்பு தோட்டங்களில் ரசிகர்களை சந்தித்து வந்த நிலையில், மீண்டும் முழு நீள ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கிய திரைப்படம்தான் 'பிளாஸ்ட்'. திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம் தற்போது ஓடிடி வெளியீட்டுக்காகவும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் கடந்த மே 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அர்ஜூனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், ஜான் கொக்கேன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரமாண்ட தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்ற ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

குடும்ப ஆக்ஷன் டிராமா
பொதுவாக அர்ஜூன் படங்கள் என்றாலே தேசபக்தி, போலீஸ் விசாரணை அல்லது அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்கும். ஆனால் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதையும் தாண்டி குடும்ப உறவுகளையும் ஆக்ஷனையும் இணைத்து உருவாக்கப்பட்டிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற ஒரு குடும்பம் எதிர்பாராத சூழ்நிலையில் எதிரிகளை எப்படி சமாளிக்கிறது என்பதுதான் படத்தின் மையக்கரு. அதிரடி காட்சிகள் மட்டுமல்லாமல் குடும்ப பாசம், உணர்ச்சி, தந்தை - மகள் உறவு போன்ற அம்சங்களும் படத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன.
ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய அர்ஜூன்
63 வயதை கடந்தும் அர்ஜூன் ஆக்ஷன் காட்சிகளில் காட்டிய வேகம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மற்றும் இடைவேளைக்கு முன் வரும் ஆக்ஷன் சீக்வென்ஸ்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.
பலர், "இது பழைய அர்ஜூனை மீண்டும் திரையில் பார்த்த உணர்வை கொடுத்தது" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 'கேஜிஎஃப்' இசையமைப்பாளரின் மாஸ் பின்னணி இசை படத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் இசை. 'கேஜிஎஃப்', 'சலார்' போன்ற படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர், இந்த படத்திற்கும் பின்னணி இசையமைத்துள்ளார்.
குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அவரது இசை ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்ததாக பல விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் படத்தின் BGM வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
வசூலில் பெரிய சாதனை
சுமார் ரூ.18 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது முதலீட்டை பல மடங்கு திரும்பப் பெற்றிருப்பதால், இந்த ஆண்டின் லாபகரமான தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக 'பிளாஸ்ட்' மாறியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஓடிடி ரிலீஸ் எப்போது?
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், தற்போது ஓடிடி ரசிகர்களும் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதன்படி, வரும் ஜூன் 25-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'பிளாஸ்ட்' வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

ஓடிடியில் இன்னொரு ரவுண்டு அடிக்குமா?
சமீப காலங்களில் திரையரங்குகளில் வெற்றி பெற்ற பல படங்கள் ஓடிடியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. அந்த பட்டியலில் 'பிளாஸ்ட்' படமும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திரையரங்குகளில் பார்க்க தவறவிட்ட ரசிகர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே பார்த்தவர்களும் மீண்டும் இந்த ஆக்ஷன் அனுபவத்தை வீட்டிலிருந்தே ரசிக்க காத்திருக்கின்றனர்.
அர்ஜூனின் கம்பேக் ஆக்ஷன் ஹிட்டாக பார்க்கப்படும் 'பிளாஸ்ட்', திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடியிலும் அதே வெடிப்பை ஏற்படுத்துமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications