DD Next Level: சந்தானத்துக்கு ஆதரவு.. பவன் கல்யாண் தமிழகத்துக்கு வந்தால்! இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் இன்று மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "கோவிந்தா கோவிந்தா" பாடல் இந்துக்களின் மனதை கஷ்டப்படுத்துகிறது என்று சிலர் புகார் கொடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் சந்தானத்திற்கு சப்போர்ட் செய்து இந்து மக்கள் கட்சியினர் பெருமாள் வேஷத்தில் வந்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் ஆர்யாவின் தயாரிப்பில் இன்று வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இன்று நடிகர் சூரி நடிகர் யோகி பாபு மற்றும் நடிகர் சந்தானம் என மூன்று பேரும் கதாநாயகர்களாக நடித்த மூன்று திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் அதில் யார் படம் மக்களை கவரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

சர்ச்சை பாடல்
அதே நேரத்தில் டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சில சர்ச்சைகளையும் சந்தித்து இருக்கிறது. அதாவது இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "ஸ்ரீநிவாசா கோவிந்தா.. ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா" என்று பாடல் திருப்பதி பெருமாளை கிண்டல் செய்யும் வகையில் இருக்கிறது என்று சிலர் புகார் கொடுத்து இருக்கிறார்கள். அதோடு இந்த திரைப்படம் தமிழகத்தில் வெளியானால் தமிழக மக்கள் திருப்பதி பெருமாள் கோவிலுக்குள் வரக்கூடாது என்றெல்லாம் சிலர் பேசி இருந்தனர்.
சந்தானத்திற்கு ஆதரவு
அதோடு நடிகர் சந்தானம் உட்பட இந்த பட குழுவினர்கள் மக்களிடம் பயங்கர மன்னிப்பு கேட்க வேண்டும், அதற்கு தவறும் பட்சத்தில் 100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றெல்லாம் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற கோவிந்தா பாடல் நீக்கப்பட்டு இன்று வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சந்தானத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் பெருமாள் வேடமணிந்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.
பெருமாள் வேஷம்
பெருமாளை தரிசிக்க திருப்பதிக்கு தமிழர்கள் வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று பவன் கல்யாண் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மக்கள் கட்சி சார்பில் பவன் கல்யாண் தமிழகத்திற்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே கோவிந்தா பாடல் சர்ச்சை ஆன சமயத்தில் இது குறித்து சந்தானம் விளக்கம் கொடுத்திருந்தார்.

சந்தானம் விளக்கம்
சர்ச்சை குறித்து சந்தானம் பேசுகையில், "நான் வருஷா வருஷம் ஒரு படம் ரிலீஸ் ஆகும்போது திருப்பதிக்கு தான் செல்வேன். இந்த முறையும் போனேன். நான் பெருமாளுடைய பக்தன். அவருடைய பாட்டு முதலில் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதற்காகத்தான் அந்த பாடலை வைத்திருந்தேன். வேறு எதற்காகவும் இல்லை. நான் கடவுள் நம்பிக்கை உடையவன். அதனால் நான் கடவுளை கிண்டல் செய்ய மாட்டேன் என்பது எல்லாருக்குமே தெரியும். அந்த பாடல் என்னுடைய மனதிருப்திக்காக வைத்தது. அதுவும் சரியான முறையில் தான் அந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறோம் என்று விளக்கம் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications