நடிகர் விவேக் பிரசன்னாவின் சகோதரர் யார் தெரியுமா? 100க்கும் மேற்பட்ட ஹிட் படங்களுக்கு பாடல் எழுதியவர்! நெகிழ்ச்சி கதை
சென்னை: நடிகர் விவேக் பிரசன்னா தமிழ் சினிமாவில் சமீபகாலமாக குணச்சித்திர நடிகர்களில் தனக்கென ஒரு இடத்தை உறுதியாக பிடித்திருக்கிறார். பெரிய ஹீரோ அல்ல... ஆனால் படம் முடிந்த பிறகு மனதில் நிற்கும் முகங்களில் இவரும் ஒருவர் என்று பலரும் சொல்லும் அளவுக்கு அவர் வளர்ந்திருக்கிறார். இந்த நிலையில் விவேக் பிரசன்னா தன்னுடைய சகோதரர் கவிஞர் கார்த்திக் நேதா பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது

சிறிய ஆரம்பம் பெரிய அடையாளம்
விவேக் பிரசன்னா நண்பனாக வந்தாலும் இயல்பாக இருக்கிறார், வில்லனாக வந்தாலும் நம்ப வைத்துவிடுகிறார் - இந்த இரண்டையும் சமநிலையாக கையாளும் திறமையே அவரை வேறுபடுத்துகிறது. சேலம் பக்கம் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் விவேக் பிரசன்னா. வீட்டில் எல்லாருக்கும் நல்ல கல்வி பின்னணி இருந்தாலும், இவருக்கு சினிமாவே பிடித்த துறை. அதனால் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து, முதலில் ஒளிப்பதிவாளராக தான் பயணம் தொடங்கினார்.
சில படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, குறும்படங்கள் மூலம் கேமிரா முன்பும் முகம் காட்ட ஆரம்பித்தார். அந்த அனுபவம் தான் அவரை மெதுவாக நடிப்புக்கு இழுத்துச் சென்றது.
ஒரு சிறிய ரோலில் நடித்தபோது, விஜய் சேதுபதி அவரைப் பார்த்து "இந்த மாதிரி நடிகரை வேஸ்ட் பண்ணாதீங்க" என்று சொன்னது அவருடைய வாழ்க்கையை மாற்றிய முக்கிய தருணமாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு அவர் முழுக்க முழுக்க நடிகராக மாறினார்.
மின்னும் திறமை
விவேக் பிரசன்னா ஆரம்பத்தில் நடித்த பல படங்களில் அவர் வில்லன் அல்லது நெகட்டிவ் சாயல் கொண்ட கேரக்டர்களில்தான் அதிகமாக நடித்து வந்தார். 'சேதுபதி', 'விக்ரம் வேதா', 'மாநகரம்' போன்ற படங்களில் அவர் நடித்த ரோல்கள் ரசிகர்களுக்கு நினைவில் நின்றவை.
ஆனா அவரை முழுக்க மாற்றிய படம் 'மேயாத மான்'. அந்த படத்தில் வினோத் என்ற கதாபாத்திரத்தில் வந்த அவர், ரவுடி மாதிரி கத்திக்கொண்டு ஓடுறவனாக இல்லாமல், ஒரு செகண்ட் ஹீரோ மாதிரி மாறி ரசிகர்களை கவர்ந்தார்.
அதற்குப் பிறகு 'சூரரைப் போற்று' போன்ற படங்களில் நண்பனாக வந்ததும், "இந்த ஆளால் எல்லாம் நடிக்க முடியும்" என்ற நம்பிக்கை இயக்குனர்களுக்கு வந்தது. அதற்காக உடல் எடையை குறைத்தது கூட அவருடைய அர்ப்பணிப்பை காட்டுகிறது. இப்போது பார்த்தால், காமெடி, குணச்சித்திரம், சீரியஸ் ரோல் - எதையும் எளிதாக செய்து விடும் நடிகராக மாறியிருக்கிறார்.
விவேக் பிரசன்னா பேட்டி
சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது சகோதரர் குறித்து பேசும்போது, விவேக் பிரசன்னா சொன்ன விஷயங்கள் ரொம்ப பேரை கவர்ந்தது. அந்த சகோதரர் வேறு யாருமில்லை, தமிழ் சினிமாவில் கவிதை மாதிரி பாடல்கள் எழுதும் கார்த்திக் நேதா தான்.
"நான் நடிச்ச படம் பார்த்து, உனக்கு இப்படி எல்லாம் நடிக்க தெரியுமா என்று அவன் கேட்பான்" என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் விவேக் பிரசன்னா. சின்ன வயசுல இருவரும் அடிக்கடி சண்டை போட்டிருக்கிறார்களாம். ஆனா இப்போ அந்த சண்டை எல்லாம் போயிட்டு, நல்ல நண்பர்களாக மாறி இருக்கிறார்கள்.
இருவரும் சேர்ந்து படம் பார்த்து, அந்த படத்தில் என்ன நல்லது, என்ன குறை என்று மணிக்கணக்கில் பேசுவார்களாம். "அண்ணன்-தம்பி என்று சொல்லுவதை விட நாங்க நண்பர்கள்" என்று அவர் சொன்னது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
கார்த்திக் நேதா பாடல்கள்
கார்த்திக் நேதா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்திருக்கும் பாடலாசிரியர். அவர் எழுதும் வரிகள் சாதாரணமா இருக்காது... கேட்கும் போது நேரா மனசுக்கு போய்ச் சேர்ந்துவிடும். அவர் எழுதிய சில பிரபல பாடல்கள், 96 -காதலே காதலே, தக் லைஃப் - அஞ்சு வண்ண பூவே, நெடுஞ்சாலை- இம்சை ராணி வா முறுக்கிட்டு, நெற்றிக்கண்- இதுவும் கடந்து போகும் போன்ற மனதை வருடும் பல பாடல்கள் எல்லாம் எளிய வார்த்தைகளில் ஆழமான உணர்ச்சியை சொல்லும் வகையில் இருக்கும். அதுதான் அவருடைய ஸ்ட்ரெங்க்த்.
இவர் சினிமாவுக்கு பாடல் எழுத தொடங்கி 20 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதில் 100 படங்களுக்கு மேலாக இவர் பாடல்கள் எழுதி இருக்கிறாராம். கவிஞராக ஆரம்பித்து, பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக வந்த அவர், இன்று பல முக்கிய படங்களில் வேலை பார்த்து வருகிறார்.
ஒரே வீட்டில் இரு கலைஞர்கள்
ஒருவர் நடிப்பில்... மற்றொருவர் வார்த்தைகளில்... இருவரும் கலை உலகில் தான் பயணம் செய்கிறார்கள். விவேக் பிரசன்னா திரையில் உணர்ச்சியை காட்டுகிறார். கார்த்திக் நேதா அதை வார்த்தைகளால் எழுதுகிறார்.
இந்த இரண்டு விஷயத்திலும் இருக்கும் இயல்பு தான் அவர்களை ரசிகர்களுக்கு நெருக்கமாக்குகிறது. இன்று தமிழ் சினிமாவில் "இந்த ஆள் வந்தா அந்த சீன் நிச்சயம் நல்லா இருக்கும்" என்று நம்பிக்கை கொடுக்கிற நடிகராக விவேக் பிரசன்னா மாறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications