கொத்தனார் மகன் ஜெயிச்சுட்டான்! லப்பர் பந்து இயக்குநர் உருக்கமான பதிவு.. குவியும் வாழ்த்து
சென்னை: கிராமத்து வாழ்வியல், கிரிக்கெட் மற்றும் மனித உறவுகளின் உணர்வுகளை இணைத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த லப்பர் பந்து திரைப்படம், தற்போது கேரளாவில் நடைபெற்ற 70வது பிலிம் பேர் விருதுகள் விழாவில் விருது பெற்றதன் மூலம் மீண்டும் கவனத்தின் மையமாகியுள்ளது. இந்த பெருமையை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொத்தனார் மகன்
"நான் கொத்தனார் மகன் தான்... இதுவே எனது அடையாளம்" என்ற அவரது ஒரு வரி, வெற்றியின் உச்சியிலும் தன்னுடைய வேர்களை மறக்காத மனிதராக அவரை ரசிகர்கள் முன்னிலையில் நிறுத்தியுள்ளது. சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து சினிமாவிற்கு வந்து, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றியை பெற்றவர் என்பதால், இந்த பதிவு பல இளம் படைப்பாளிகளுக்கு ஊக்கமாக பார்க்கப்படுகிறது.
விருதால் மீண்டும் பேசப்படும் லப்பர் பந்து
லப்பர் பந்து படம் வெளியான காலத்திலேயே விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இந்த திரைப்படம், கிரிக்கெட்டை மையமாக கொண்டு ஈகோ மோதலை சொல்லிய விதத்தால் தனித்துவமான படைப்பாக கருதப்பட்டது. கிராமத்து சூழல், உண்மை உணர்வுகளுடன் நகர்ந்த கதை, மனித உறவுகளின் நெருக்கடி - இவை அனைத்தும் அந்த படத்தை ரசிகர்களுடன் இணைத்தன.
காலம் கடந்த பின்னரும் அந்த படைப்பிற்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அதன் கண்டன்ட் வலிமையை வெளிப்படுத்துகிறது என்று திரை வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
தமிழரசன் பேட்டி
தமிழரசன் முன்னதாக அளித்த பேட்டிகளில், மலையாள திரைப்படமான Ayyappanum Koshiyum படத்தின் ஈகோ மோதல் கதைக்களம் தன்னை கவர்ந்ததாகவும், அதே உணர்வை கிரிக்கெட்டை மையமாக வைத்து தமிழில் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் லப்பர் பந்து உருவானதாகவும் தமிழரசன் கூறியிருந்தார்.
"இந்தியாவில் கிரிக்கெட் விளையாடாதவர்கள் யாரும் இல்லை. அதனால் அந்த விளையாட்டை மையமாக வைத்து சொன்ன கதை எல்லோருக்கும் தொடர்பு ஏற்படுத்தும்" என்ற அவரது கருத்து, படத்தின் வடிவமைப்பை விளக்கும் வகையில் இருந்தது.
கதைக்கே ஹீரோ
சினிமாவில் வாய்ப்பு கிடைத்தவுடன் பெரிய ஹீரோக்களை தேடும் பழக்கத்தில் தானில்லை என்றும், கதைக்கு பொருத்தமான நடிகரையே தேர்வு செய்வேன் என்றும் அவர் பலமுறை சொல்லி இருக்கிறார். அந்த நம்பிக்கையால்தான் ஹரிஷ் கல்யாண் நடித்த இந்த படம் உருவானதாகவும் கூறியிருந்தார்.
படம் வெளியான போது தமிழகமெங்கும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தது, படக்குழுவின் எளிமையை காட்டியது. "ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் மதுரைக்கு தனி பங்கு உண்டு" என்ற ஹரிஷ் கல்யாணின் பேச்சும் அப்போது பெரிதும் பேசப்பட்டது.
பைரசிக்கு எதிரான வருத்தம்
"நாங்கள் எவ்வளவு உழைத்தாலும் சிலர் இணையத்தில் டவுன்லோட் செய்து பார்க்கிறார்கள். மக்கள் திரையரங்கில் வந்து பார்த்தால் தான் எங்களின் உழைப்புக்கு அர்த்தம் கிடைக்கும்" என்று அவர் வெளிப்படுத்திய வருத்தமும் அப்போது கவனம் பெற்றது.
வேர்களை மறக்காத வெற்றி
தனது ட்விட்டர் பக்கத்தில் 'கொத்தனாரின் மகன்' என்று வைத்திருப்பதற்கான காரணத்தையும் அவர் எளிமையாகவே விளக்கியிருந்தார்.
"என் ஊரில் எல்லோரும் என்னை அப்படித்தான் அழைப்பார்கள். அதுதான் என் அடையாளம்" என்ற அவரது வார்த்தைகள், இன்று விருது வென்ற தருணத்திலும் அதே உணர்வுடன் மீண்டும் ஒலித்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications