அந்தா போற எறும்பை பாரு! சிம்பிள் டெஸ்ட் வைத்த பாரதிராஜா! பாஸான மதுரைக்காரர்! யார் அவர்?
சென்னை: திண்ணைல இருந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆனா எப்படி இருக்கும், அப்படித்தான் மதுரையிலிருந்து ஒருவர் நடிகரானது? அவர் யார், இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திண்ணைல இருந்தவனுக்கு திடுக்குன்னு கல்யாணம் ஆனா எப்படி இருக்கும்?.. அப்படித்தான் அந்த நடிகரின் வாழ்க்கையும் ஆனது. தான் பாட்டுக்கு தான் உண்டு, தன் வளையல் கடை உண்டு என இருந்தவரை விதி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பாரதிராஜாவை சந்திக்க வைத்தது.

உடனே தன் ஹோட்டல் அறைக்கு அவரை அழைத்தார் பாரதிராஜா. பெரிதாக பாண்டியனுக்கு டெஸ்ட் எதுவும் வைத்து விடவில்லை. "ஒரு எறும்பு ஊர்ந்து போயிட்டிருக்கு. அதை எப்படி பார்ப்பாய்..பார்"...அவரும் எறும்பு போவதைப் பார்க்க... 'மண்வாசனை' வீரண்ணாவாக தேர்வானார் பாண்டியன்.

பாண்டியனின் தோற்றம் மாடர்னாகவும் இருக்காது. அதே நேரம் கிராமத்தானாகவும் தெரிய மாட்டார். அந்த இடைப்பட்ட தோற்றம் தான் அவரை ரசிக்க காரணமாக இருந்தது. மயிலாடுதுறையில் அவரிடமும், பாரதிராஜாவிடம் ஒரு திருமணத்தில் நேரிட்டு பார்த்து ஆட்டோகிராப் வாங்கியிருக்கிறேன். நல்ல வெளுத்த நிறம். மீசை மட்டும் செம்பட்டைக்கலரில் இருந்ததை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
ரேவதி என்கிற குள்ளக்கத்திரிக்காய்க்கு ஏற்ற ஜோடியாக பாண்டியன் மண்வாசனையில் பொருந்தினார். அதனாலேயே அப்படம் பெரும் வெற்றியை பெற்றது. அவர் கோபத்தோடு பேசும் போது அவரது உணர்ச்சிகள் வெளிப்பட்டன.

வீரண்ணா என்கிற கட்டிளங்காளையை பாண்டியனிடம் அட்டகாசமாக கொண்டு வந்திருந்தார் பாரதிராஜா. பாரதிராஜாவிடம் யாரோ கமல், ஸ்ரீதேவியை வைத்து வெற்றி பெற்றவர்னு உசுப்பேத்திவிட தொடர்ந்து புதுமுகங்களை வைத்து வென்று காட்டுகிறேன் என அறிமுகப்படுத்தியவர்.
எனக்குத் தெரிந்து பாரதிராஜாவின் அறிமுகங்களில் ரவி, சுதாகர், ராஜா, தீபன், பாக்யராஜ், மனோஜ், பாபு, கார்த்திக் இவர்களில் பாண்டியன் தான் வீரமான நடிகர் எனச் சொல்லலாம். பாக்கி எல்லோருமே ஸாஃப்ட் ரோல் செய்பவர்களாக மாறிப் போனார்கள்.

மண்வாசனைக்குப் பிறகு அவரை 'நான் பாடும் பாடல்', 'ஆண்பாவம்', 'முதல் வசந்தம்', 'வாழ்க்கை'.. வாழ்க்கை படத்தில் சிவாஜி கருப்பு வெள்ளையில் செய்த ரோலை சிவாஜியிடமே கலரில் நடித்தவர் பாண்டியன். பாண்டியன் மார்க்கெட் சடாரென இறங்கியது. முதல் வசந்தம் படமெடுக்கும் போது க்ளைமேக்ஸ் பாண்டியன் அதிரடி சண்டையில் தூள் கிளப்புவதாக கதை.
சத்யராஜ் நடித்த குங்குமப்பொட்டு கவுண்டர் வில்லன். அப்போது பாண்டியன் மார்க்கெட் டல்லாகி, சத்யராஜ் மார்க்கெட் சூடு பிடிக்க சத்யராஜின் மேல் க்ளைமேக்ஸை வைக்க படம் சூப்பர் ஹிட்டானது.
அதோடு போனவர் தான் பாண்டியன். ரஜினி, விஜய்காந்த், கார்த்திக் படங்களில் இரண்டாம் ஹீரோவாக மாறிப் போனார். நாயகனாக்கிய பாரதிராஜாவே அவரை வில்லனாக்கி, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக்கி அவரின் புகழும் மங்கியது.
பாண்டியன் என்கிற நடிகரை தமிழ்த்திரை ஒதுக்கியே வைத்து விட்டது எதிர்பார்த்தது தான். நடிக்க வந்து விட்டாலும் அந்த தொழிலுக்காக மேலும் மேலும் தன்னை வளர்த்துக் கொள்ள முயலவேயில்லை பாண்டியன். நடிப்பிலும் சுட்டுப் போட்டாலும் வராத முகபாவம்.

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு, ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில், குயிலே குயிலே, மச்சான வச்சுக்கடி, கஸ்தூரி மானே கல்யாண தேனே, பொன்னி நதி என சில தேர்ந்த, அழகான பாடல்களில் பாண்டியனை பார்க்கலாம்.
சினிமாவில் சாத்தான்களில் ஒன்றான குடியும் அவரை பிடிக்க ஒருநாள் கல்லீரல் பாதிப்பில் இந்த மண்ணை விட்டு மறைந்தார். அந்த 'மண் வாசனை' அவருக்கு பிடித்து விட்டது போல... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications