Dude box office: 100 கோடி கிளப்பை நோக்கி பாயும் 'டியூட்'! 6 நாட்களில் இந்தியாவில் இத்தனை கோடி வசூல்!
சென்னை: இந்தத் தீபாவளியின் பாக்ஸ் ஆபிஸ் வின்னராக மாறியிருக்கிறது நடிகர் பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' திரைப்படம். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் கொண்டாடப்படுவதுடன், வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. இதுவரை உலக அளவில் 95 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கும் நிலையில், ஆறாவது நாளான நேற்றைய வசூல் நிலவரமும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமர்ஷியல் சமூகம் சார்ந்த படைப்பு
கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் 'டியூட்' திரைப்படம், பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோவாக மூன்றாவது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். சரத்குமார் அமைச்சர் அதியமானாக முக்கிய வேடத்தில் கலக்கியிருக்கிறார். இவர்கள் தவிர்த்து பரிதாபங்கள் டிராவிட், ரோகிணி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.
கதையின் கரு
இந்தப் படம் கமர்ஷியல் ரூட்டில் சென்று, சமூகத்துக்குத் தேவையான முக்கியமான ஒரு மெசேஜை சொல்லும் ஃபார்முலாவைக் கையாண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தக் கால தலைமுறையினருக்கு ஆணவக் கொலை போன்ற விஷயத்தைப் போர் அடிக்காமல், பிரசாரத் தொனியில்லாமல் பேசியிருப்பது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
வசூல் வேட்டை
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம், வெறும் ஐந்து நாட்களில் உலக அளவில் 95 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'டியூட்' படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் பேச்சு கவனத்தை ஈர்த்தது.
விவாத பொருள்
"டியூட் படத்தோட கதை இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்தப் படத்தில் சொல்லாத விஷயத்தைச் சொல்லியிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது தமிழ்நாடு. இங்குப் பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் வழியில் வந்துதான் நாங்கள் இதை பேசியிருக்கிறோம். அதனால் இந்தப் படத்தில் பேசியிருக்கும் விஷயங்கள் தமிழ்நாட்டில் இதுவரை பேசாத கருத்துக்கள் இல்லை" என்று அழுத்தமாகப் பேசினார்.
அடுத்த தலைமுறையின் குரல்:
"எங்களுக்கு முன்பு நிறைய பேர் இதைப் பேசியிருக்கிறார்கள். அடுத்த தலைமுறையான நாங்களும் அதை பேசுவோம். ஆனால் அதை முடிந்த அளவுக்கு சினிமாவுக்கான மொழியில் எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இன்னும் பெரிய அளவில் பேச வேண்டும் என்பது எனது ஆசை. என்னுடைய அடுத்தடுத்த படைப்புகளிலும் இது மாதிரி பேசுவேன்" என்றார்.
கவின் மரணம் தந்த பாதிப்பு
ஆணவக் கொலை குறித்த ஒரு வசனம் முதலில் படத்தில் இல்லை என்ற ஒரு பகீர் தகவலை வெளியிட்டார் கீர்த்தீஸ்வரன். அப்போதுதான் கவின் படுகொலை நடந்தது. அந்தச் சமயத்தில் இது பற்றி ஒரு வசனம் வைக்க வேண்டும் என்று பிரதீப் ரங்கநாதன்தான் சொன்னார் என்ற தகவலையும் அவர் பகிர்ந்தார்.
6வது நாள் வசூல்
வசூலில் படம் அணையாத பட்டாசாக வெடிக்கிறது. இந்தியாவில் இந்தப் படம் ஆறாவது நாளான நேற்று (அக்டோபர் 22) 3.75 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதன் மொத்த வசூல் 54.05 கோடி ரூபாய் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது. விரைவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைவது உறுதியாகிவிட்டதால், நடிகர் பிரதீப் ரங்கநாதன் வரிசையாக மூன்று முறை 100 கோடி ரூபாய் வசூலித்த ஹீரோ என்ற பெருமையைப் பெறவிருக்கிறார்.
'டியூட்' திரைப்படம் வசூலில் சாதனை படைப்பதுடன், சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தையும் தூண்டியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.












Click it and Unblock the Notifications