நியூஸ் ரீடர் யாரது? டிவி ஆங்கர்கள் போட்டோ எப்படி? தீயாய் பரவும் வீடியோ.. திகைப்பூட்டும் ஏஐ டெக்னாலஜி
சென்னை: AI குரல் குளோனிங் பயன்படுத்தி செய்யும் ஆள்மாறாட்ட மோசடி குறித்து சைபர் கிரைம் காவல்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளது.. சைபர் மோசடி செய்பவர், ஏஐ தொழில்நுட்பத்தை, குரல் குளோனிங்கை பயன்படுத்தி மோசடி செய்வதால் கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.. இந்நிலையில், ஏஐ வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வரும்நிலையில், இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
AI என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி கொண்டிருக்கிறது.. இந்த சாப்ட்வேர் மூலம், மனிதனை போலவே, மாற்று உருவத்தை உருவாக்கிட முடியும்.. இதனை பயன்படுத்தித்தான், போலியான நபர்களை உருவாக்கி, பல்வேறு மோசடி சம்பவங்களை, மர்ம நபர்கள் அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்.

டீப்பேக் தொழில்நுட்பம், உண்மையான ஆடியோ, வீடியோ அல்லது போட்டோக்களை போல, போலியான ஆடியோ, வீடியோ, போட்டோக்களை உருவாக்க உபயோகிக்கப்படுகிறது.. முதன்முதலில், இந்த தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நோக்கத்துக்காக, சினிமா தயாரிப்பாளர்களால் தடையின்றி நடிகர்களை காட்சிகளில் ஒருங்கிணைக்கவும் அல்லது வரலாற்று நபர்களைப்போல சித்தரிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
ஏஐ தொழில்நுட்ப மோசடி
ஆனால், தொழில்நுட்பம் பெருகியதுமே, சில சமூகவிரோதிகள் இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த துவங்கிவிட்டனர்.. AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ அழைப்பு மோசடியையும் அரங்கேற்றுகிறார்கள். எப்படி தெரியுமா?
ஆன்லைனிலிருந்து ஒரு குறிப்பிட்ட நபரின் வீடியோ பதிவு போன்றவற்றின் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் குரல் மாதிரியை மோசடி கும்பல் எடுத்துக் கொள்கிறது. பின்பு அந்த குரல் மாதிரியை ஏஐ தொழில்நுட்பம் மூலம் குளோனிங் செய்து, அவருக்கு தெரிந்த நபரை (உறவினர் அல்லது நண்பர்) அழைத்து பேசுகின்றனர்.
உடனடி உதவி தேவைப்படும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக சொல்லி, அழுது கொண்டோ அல்லது கெஞ்சும் தொனியிலோ பேசி மறுமுனையில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள்.
பிறகு UPI போன்ற முறைகளை பயன்படுத்தி உடனடியாக பணத்தை அனுப்புமாறு மோசடி செய்பவர் கேட்கிறார். உதவி கேட்பவரின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் இவரும் பணத்தை அனுப்பி வைக்கிறார். பணப்பரிமாற்றம் முடிந்த பிறகு, பாதிக்கப்பட்டவர் பணம் கேட்ட தங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரின் எண்ணைத் தொடர்பு கொள்ள முயலும்போது தான் ஏமாற்றப்பட்டதை உணருகிறார்.
மிரட்டிப்பணம் - மோசடி
கெஞ்சி கூத்தாடி பணம் பறிப்பது போல, ஏஐ மூலம் படத்தை உருவாக்கி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
ஏஐ மூலம் ஆபாச வீடியோவை டவுன்லோடு செய்து, அதில் பெண்ணின் முகத்தையும், தன்னுடைய முகத்தையும் மாற்றியமைத்து, போலி ஆபாச வீடியோவாக உருவாக்கி, இதனை வைத்து மிரட்டி, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் உறவு வைத்து கொள்வது, அல்லது வீடியோவை காட்டி அப்பெண்ணிடம் பணம் பறித்து கொள்வது என கொடுமைகள் நீள்கின்றன.
புகார் தரவேண்டிய எண்கள்
இப்படி ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடப்பதால்தான், முன்பின் தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்டவர்கள், 1930 என்ற கட்டணமில்லா எண்ணுக்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற ஆன்லைன் முகவரிக்கோ புகார் பதியலாம் என்று ஏற்கனவே பலமுறை சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டிருந்தனர்.
எனினும், போலியாக உருவாக்கப்படும் ஏஐ-யின் அத்துமீறல், தனிநபர் வாழ்க்கைவரை உள்ளே புகுந்து சிதைத்து கொண்டிருக்கிறது.. கடந்த வருடம் மட்டும், கிட்டத்தட்ட ரூ.22,812 கோடியை சைபர் கிரைமில் அப்பாவி மக்கள் இழந்துள்ளதாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது.
செய்தி வாசிப்பாளர்கள்
இந்நிலையில், மற்றொரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. தமிழ் செய்தி வாசிப்பாளர்கள், ஆபாச வார்த்தைகள் பேசுவது போல சித்தரித்து, மர்ம நபர்கள் வீடியோக்களை பதிவேற்றியிருப்பதாக கூறப்படுவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் செய்தி வாசிப்பாளர்கள், ஆபாச வார்த்தைகளில் பேசுவது போல வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறதாம்.. இந்த வீடியோவில் சில உண்மையான செய்தி வாசிப்பாளர்களின் போட்டோவும் இருக்கிறதாம். ஆனால், வீடியோ முழுதும் ஆபாச வார்த்தைகளை, செயற்கை நுண்ணறிவுடன் இணைத்து, எடிட் செய்யப்பட்டுள்ளது..
உண்மையான போட்டோக்கள்
காமெடிக்காக இப்படியான வீடியோக்கள் தயாரிக்கப்பட்டாலும், ஆபாச வார்த்தைகள் அளவுக்கு அதிகமாக உள்ளதால், குழந்தைகளிடம் இது தவறான எண்ணங்களை ஏற்படுத்தும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்..
ஒருசிலரின் உண்மையான போட்டோக்களை வைத்து வீடியோ பரவி வருவதால், இதனை, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என்றும், ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications