சீன் பட நடிகருக்கு மறக்க முடியாத செயலை செய்த ஹிப் ஹாப் ஆதி.. இன்ஸ்டா பிரபலம் உருக்கம்
சென்னை: சூர்யா நடித்த சீன் படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். குறிப்பாக இன்ஸ்டா பிரபலமான மதியழகன் நடிப்பு படத்தை பார்த்த பலருக்கும் பிடித்திருந்தது. படத்தின் ஆரம்பத்தில் இவரை பார்த்தது இவர் வில்லனாக இருப்பாரோ? என்று எண்ணம் வரலாம். ஆனால் கதை நகர நகர அவருடைய கேரக்டரும், நடிப்பும் ரசிகர்களிடம் நெருக்கம் ஆகிவிட்டது. சில இடங்களில் சிரிக்க வைத்தவர் சில காட்சிகளில் உணர்வு பூர்வமாகவும் நடித்திருந்தார்.
இந்த படத்தில் சமூக வலைத்தள பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள், அவர்களில் ஒருவர் தான் மதியழகன். படத்தில் இவருடைய காட்சிகள் வந்த போது ரசிகர்கள் ரசித்ததை போலவே அவருடைய நடிப்பை பார்த்து அவருக்கு பிடித்தமான ஹீரோவான ஹிப் ஹாப் ஆதியும் பாராட்டி இருக்கிறார். அதுவும் நேரில் சந்தித்து பாராட்டி இருப்பது தான் இப்போது மதியழகனுக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறி இருக்கிறது.

மதியழகன் இன்ஸ்ட்டா பதிவு
மதியழகன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "வாழ்க்கையில் நல்லதோ, கெட்டதோ எதுவாக நடந்தாலும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும் என்று நினைத்திருந்தேன், இப்போது அந்த வாழ்க்கை பயணத்தில் எதிர்பாராத விதமாக சில நல்ல மனிதர்களையும் சந்திக்க வைத்திருக்கிறது. நடிகை பவிஷா, இயக்குனர் ஜித்து மாதவன், சூர்யா அண்ணன் ஆகியோருடன் தன்னை இணைத்து காட்டியதற்கு நன்றி. பல ஆண்டுகளாக உழைத்ததற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் போல இந்த படமும், கதாபாத்திரமும் அமைந்திருக்கிறது" என்று நெகிழ்ந்திருக்கிறார் .
அதோடு ஹிப் ஹாப் ஆதியை சந்தித்து அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறார். "எதிர்பாராத விதமாக ஆதி என்னை சந்திக்க வைத்ததோடு, படத்தை பார்த்து விட்டு எனது வாழ்க்கை பயணத்தை பற்றி கேட்டுக்கொண்டார். தன்னுடைய நேரத்தை ஒதுக்கி என்னுடன் பேசியதற்கும், அன்பு காட்டியதற்கும் நன்றி" என அந்த பதிவில் மதியழகன் சொல்லி இருக்கிறார்.

சந்தோஷத்தில் ஹிப் ஹாப் ஆதி
மதியழகனை நேரில் சந்தித்த ஹிப்ஹாப் ஆதி, "சீன் படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து தான் மிகவும் சந்தோஷம் அடைந்ததாக" கூறியிருக்கிறார். குறிப்பாக மதியழகன் திரையில் வரும் ஒவ்வொரு முறையும் தான் எழுந்து நின்று, "இவன் என்னுடைய ஃபேன்" என்று பெருமையாக சொல்லி கத்தி கொண்டு இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அப்போது அருகில் இருந்த அவருடைய மனைவி, "சூர்யா ரசிகர்கள் உங்களை ஏதாவது சொல்லிவிட போகிறார்கள் உட்காருங்கள்" என்று கிண்டல் செய்ததாகவும் ஆதி சிரித்தபடியே கூறியிருக்கிறார்.
ரசிகராக மகிழ்ச்சி
ஆனால் மனைவி சொன்னதை எல்லாம் கண்டுகொள்ளாமல் மதியழகனின் நடிப்பை ரசித்ததாகவும், அவர் மிகவும் நன்றாக நடித்ததாகவும் பாராட்டி இருக்கிறார். தனக்கு பிடித்தமான ஹீரோவிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைக்கும் என்று மதியழகனே எதிர்பார்த்து இருக்க மாட்டார். அதிலும் தன்னுடைய காட்சிகள் வந்த போது எழுந்து நின்று ரசித்ததாக ஆதி சொன்னது அவருக்கு இன்னும் பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். சீன் படத்தில் மதியழகன் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், அவருடைய ஃபேவரைட் ஹீரோவே இப்படி மனம் திறந்து பாராட்டி இருப்பது தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.



Click it and Unblock the Notifications
