ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ வசூல் எவ்வளவு? கதை இதுதானா? முதல் படத்திலேயே ஜெயித்தாரா விஜய் மகன்?
சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகும் முன்பே ஜேசன் சஞ்சய் இயக்குநராக எப்படி வேலை செய்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் மகன் என்ற அடையாளம் மட்டுமல்லாமல், அவர் தேர்வு செய்திருக்கும் கதையும் ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்ததுதான். இப்போது இந்த படத்தில் 2 நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது.
சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜு சுந்தரம், சிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ஹெய்ஸ்ட், ஆக்ஷன், நகைச்சுவை என பல விஷயங்களை ஒன்றாகச் சேர்த்து சொல்ல முயற்சிக்கிறது. படம் வெளியாகி 2 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில், இப்போது 'சிக்மா'வின் வசூல் எப்படி இருக்கிறது, படத்தைப் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

முதல் நாளில் ரூ.2.35 கோடி
இந்தியாவில் முதல் நாளில் 'சிக்மா' சுமார் ரூ.2.35 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்திய மொத்த வசூல் சுமார் ரூ.2.70 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் தமிழ் ரிலீஸ் மட்டும் சுமார் ரூ.1.50 கோடி நிகர வசூல் செய்ததாகவும், தெலுங்கு ரிலீஸ் சுமார் ரூ.85 லட்சம் வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளில் இந்திய அளவில் 1,813 காட்சிகள் திரையிடப்பட்டதாகவும், ஒட்டுமொத்த பார்வையாளர்கள் விகிதம் 31.1 சதவீதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது
2வது நாளில் நிலவரம்
முதல் நாளைத் தொடர்ந்து 2வது நாளில் வசூல் கொஞ்சம் குறைந்திருக்கிறது. அக்டோபர் 3-ம் தேதி 'சிக்மா' சுமார் ரூ.1.50 கோடி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. அந்த கணக்கை வைத்து பார்த்தால், முதல் 2 நாட்களில் இந்திய நிகர வசூல் சுமார் ரூ.3.85 கோடி அளவுக்கு வந்திருக்கலாம். ஆனால் இது இன்னும் இறுதி அதிகாரப்பூர்வ வசூல் கிடையாது.
வேறு சில சோர்ஸ்களில் சனிக்கிழமை வசூல் வேறுபட்ட அளவில் குறிப்பிடப்பட்டுள்ளதால், இறுதி வசூல் நிலவரத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதனால் இப்போதைக்கு 'சிக்மா' மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் முதல் படத்துக்கான தொடக்க வசூல் முற்றிலும் மோசம் என்றும் சொல்ல முடியாத நிலைதான் இருக்கிறது.
படம் எப்படி இருக்கு?
'சிக்மா'வின் கதை பணத்தை சுற்றியே நகர்கிறது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூ.500 கோடி மதிப்பிலான மாஃபியா பணத்தை கைப்பற்றும் முயற்சி, அதற்குள் வரும் திருப்பங்கள், ஹெய்ஸ்ட் திட்டம் என படம் செல்கிறது. சந்தீப் கிஷன் இதில் குரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் அவர், தன்னுடைய குடும்பத்துக்குச் சொந்தமான சொத்தை மீட்க வேண்டிய சூழ்நிலையில் ஒரு பெரிய கொள்ளைத் திட்டத்துக்குள் செல்கிறார். அங்கிருந்து பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.
படத்தின் ஆக்ஷன் காட்சிகள், தொழில்நுட்ப வேலைகள் மற்றும் சந்தீப் கிஷனின் நடிப்புக்கு ஓரளவு பாராட்டு கிடைத்திருக்கிறது. குறிப்பாக சில சண்டைக் காட்சிகளும், தமன் அமைத்திருக்கும் பின்னணி இசையும் படத்துக்கு வேகம் கொடுப்பதாக ரசிகர்களில் ஒரு பகுதியினர் கூறியிருக்கிறார்கள். சமூக வலைதள விமர்சனங்களிலும் சிலர் படத்தை பொழுதுபோக்கான அனுபவமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ரசிகர்கள் கருத்து
ஆனால் படத்துக்கு எதிரான விமர்சனங்களும் இருக்கின்றன. கதை அடிப்படையில் நல்ல வாய்ப்பு இருந்தும், திரைக்கதையில் புதிதாக எதுவும் இல்லாதது படத்தின் பெரிய குறையாக இருப்பதாக சிலர் கூறியிருக்கிறார்கள். குறிப்பாக ஹெய்ஸ்ட் படங்களிலேயே பார்த்துப் பழகிய பல விஷயங்களை மீண்டும் பயன்படுத்தியிருப்பதால், படத்தின் பரபரப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்ற விமர்சனமும் வந்திருக்கிறது.
படம் முழுமையாக சொதப்பிவிட்டது என்று சொல்ல முடியாது, ஒரு அறிமுக இயக்குநரின் படமாகப் பார்க்கும்போது சில விஷயங்கள் நன்றாகவே வேலை செய்திருக்கிறது. ஜேசன் சஞ்சயைப் பொறுத்தவரை, இந்தப் படத்தில் அவருடைய முயற்சி முழுமையாக நிராகரிக்கப்படவில்லை என்பதுதான் இப்போதைய விமர்சனங்களிலிருந்து தெரிகிறது. அதே நேரத்தில், விஜய்யின் மகன் என்ற எதிர்பார்ப்புக்கு இணையாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார் என்றும் சொல்ல முடியவில்லை.


Click it and Unblock the Notifications
