ஜெயிலர் 2 ரிலீஸுக்கு வந்த சிக்கல்.. ஜனநாயகன் பட பஞ்சாயத்து.. சேலம், தர்மபுரியில் என்ன நடக்கிறது?
சென்னை: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முன்பாகவே லாப பங்கீடு தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனையால், குறிப்பிட்ட சில திரையரங்குகளில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயிலர் 2 படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால், படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது, வசூலில் யாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கிறது என்பதெல்லாம் திரையுலகில் தனியாகப் பேச வேண்டிய விஷயங்கள். இப்போது அந்தப் பங்கீடு கணக்குதான் சில மாவட்டங்களில் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
ஜெய்லர் 2 பட பிரச்சனை
படத்தின் வசூலில் விநியோகஸ்தர் தரப்புக்கு 75 சதவீதம் பங்கு வேண்டும் என்று கேட்கப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் தரப்போ, ஜனநாயகன் படத்துக்கு 65 சதவீதம் கொடுத்திருந்தாலும், ஜெயிலர் 2 படத்துக்கு அதே அளவில்தான் கொடுக்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பழசை மறக்கல.. எல்லாமே மனதில் இருக்கு! ஓபனாகவே பேசிய ரஜினிகாந்த்
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் பகுதிகளில் இந்தப் பிரச்சினை காரணமாகப் படத்தின் வெளியீட்டில் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இருப்பினும், எந்தெந்த திரையரங்குகளில் படம் வெளியாகாது என்பது குறித்த உறுதியான பட்டியல் வெளியாகவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்க்கப்படுகிறதா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜனநாயகன் படத்திலும் இதே பிரச்சனை
பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது வசூலில் தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தருக்குக் கொடுக்கப்படும் பங்கு தொடர்பாகப் பிரச்சனை ஏற்படுவது புதிதல்ல. விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டுக்கு முன்பும் இதே போன்ற விவாதம் எழுந்தது. அப்போது ஜனநாயகன் படத்துக்குத் தயாரிப்பு தரப்பு 75 முதல் 80 சதவீதம் வரை வசூல் பங்கு கேட்பதாகச் செய்திகள் வெளியாகின.
லாப பங்கீடு
திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பினர், இவ்வளவு அதிகமான பங்கைக் கொடுத்தால் திரையரங்குகளுக்கு வருமானம் குறையும் என்று கவலை தெரிவித்திருந்தனர். 50:50 அல்லது 60:40 போன்ற பங்கீட்டு முறையே நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். அதே நேரத்தில், ஜனநாயகன் படத்துக்கு 65:35 பங்கீட்டில் ஒப்புதல் கிடைத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது ஜெயிலர் 2 படத்திலும் பங்கீடு தொடர்பாகப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், ஜனநாயகன் படத்தின்போது எழுந்த விவாதம் மீண்டும் நினைவுக்கு வந்திருக்கிறது.

தியேட்டர் உரிமையாளர்களின் வருத்தம்
ஒரு படம் வெளியாகும்போது டிக்கெட் விற்பனையில் கிடைக்கும் மொத்தப் பணமும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு வருமானமாக வந்துவிடாது. வரி உள்ளிட்ட கழிவுகளுக்குப் பிறகு கிடைக்கும் தொகையில் ஒப்பந்தப்படி தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தருக்குப் பங்கு கொடுக்க வேண்டும். மீதமுள்ள தொகையில்தான் திரையரங்கின் ஊழியர்களுக்கான சம்பளம், மின்சாரக் கட்டணம், பராமரிப்புச் செலவு உள்ளிட்டவற்றைச் சமாளிக்க வேண்டும்.

பெரிய நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், வசூலில் அதிகப் பங்கு கேட்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றால் அல்லது அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்துவிட்டால், அதிகப் பங்கைக் கொடுத்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படலாம் என்பதுதான் அவர்களுடைய முக்கியமான கவலை.



Click it and Unblock the Notifications
