அதிமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் வருவாங்கன்னு சொன்னேனா? எப்போ?செங்கோட்டையன் கேள்வி
ஈரோடு: அதிமுகவில் இருந்து 15 பேர் வருவார்கள் என்றுதான் சொன்னேன், 15 எம்எல்ஏக்கள் என நான் சொல்லவில்லை. அந்த 15 பேர் யாரென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோட்டில் அமைச்சர் விஜய் பாலாஜியுடன் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர், அதிமுகவில் இருந்து 15 பேர் வருவார்கள் என்றுதான் நான் சொன்னேன். எம்எல்ஏக்கள் என நான் சொல்லவே இல்லை. நீங்களாகவே கற்பனை செய்து கொண்டால் எப்படி? அந்த 15 பேர் யாரென்பது பொறுத்திருந்து பாருங்கள்.

அதிமுக பொதுக் குழுவை கூட்ட சொல்கிறார்கள். கடந்த முறை ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசி அடித்தார்கள். அந்த கதையெல்லாம் உங்களுக்கு தெரியும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையை முழு நேர கடையாக மாற்றி வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், இன்று அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. ஒரு நாளைக்கு வட்டி மட்டுமே 347 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும், பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
பெண்கள் அத்தனை பேரும் இன்றைக்குப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய முடிகிறது. அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்தால், அந்தக் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், குழந்தைகளுக்காக 'பேபி கிட்ஸ்' (குழந்தை நலப் பெட்டகம்) வழங்குகிறார்கள். ஒரு அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு இதுவே சான்று.
அதுமட்டுமல்ல, பெண் குழந்தைகள் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு வரலாற்றில் முதன்முதலாக முதல்வர் விஜய் கொண்டு வரவிருக்கிறார்.
இப்போது தேர்தல் முடிந்து ஏறத்தாழ நாலைந்து மாதங்கள் ஆகிவிட்டன. எல்லாரும் கேட்பார்கள், 'நாலு மாசத்தில் என்ன நடந்துவிட்டது?' என்று. இன்றைக்குப் பலரால் தேர்தல் களத்தில் நிற்கக் கூட முடியவில்லை, இதுதான் நிஜமான நிலைமை.
"தேர்தலில் நான் வருவேன், நீ வருவாய்" என்று சொல்லிய நிலையில் கடைசியில் ஒருத்தரும் வரவில்லை. நம்முடைய தாராபுரம் தொகுதி சாதாரணமானது அல்ல. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
நான் அப்போதே சொன்னேன், "நீங்கள் வந்துவிட்டுப் போனாலே போதும், நாம் ஜெயித்தாச்சு என வைத்துக் கொள்ளுங்கள்" என்று! ஏனென்றால் அவர் முகத்தைக் காட்டினால் போதும், மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள்.
ஒரு நேர்த்தியான, தூய்மையான ஆட்சி நடக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். உங்களுக்குச் சேர வேண்டிய உரிமைகள் எதுவாக இருந்தாலும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.
எல்லாவற்றையும் ஆன்லைனில் விண்ணப்பியுங்கள். ஆன்லைனில் பதிவு செய்து 15 நாட்களுக்குள் உங்களுக்குப் பதில் வரவில்லை என்றால், 'ஏன் பதில் அளிக்கவில்லை?' என்று அந்த அதிகாரியிடம் நாங்கள் கேள்வி கேட்போம்.
இந்த வேலை முடியுமா, முடியாதா என்ற பதிலை அவர்கள் எழுத்துப்பூர்வமாக அனுப்ப வேண்டும். அதில் 'எங்களுக்குக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை' என்று வந்தால், அதை உடனடியாக என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். அது உடனடியாகத் தீர்த்து வைக்கப்படும்.
நிதி நெருக்கடி இருக்கிறது என்று சொல்கிற இந்தச் சூழ்நிலையில் கூட, சூப்பர் எல் நினோ - வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளம் வரும் என்று எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் சந்திக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்குப் பின் விஜய்யைப் போல ஒருவரை நான் பார்த்ததில்லை. நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை அக்கட்சியில் இருந்து நீக்கினார்.
அங்கிருந்து வந்ததால்தான், இன்று மக்கள் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது, வருவாய் துறை அமைச்சராக உள்ளேன். இல்லாவிட்டால் சட்டசபையில் அவர்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் நின்று நான் பார்த்துக் கொண்டிருக்க நேரிட்டிருக்கும். இன்று யானை தேய்ந்து கட்டெறும்பான கதை தான் அதிமுக.
மிக விரைவில் 15 பேர் அங்கிருந்து வெளியே வர இருக்கிறார்கள். நேற்று கூட அவர்கள் கூட்டம் போட்டுப் பேசிக் கொண்டுள்ளனர். இன்றைக்குச் சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற மக்கள் நல நிகழ்ச்சிகளை நான் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறேன். மேலும், ஆந்திராவிடம் இருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்கக் கோரி, ஆந்திர முதல்வரை விஜய் நேரில் சந்திக்க உள்ளார். நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும்!" இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
