விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என பன்முகத் திறமையுடன் வலம் வரும் இளவரசு, சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கருத்துகள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. குறிப்பாக சுந்தர்.சி, விஜய் மற்றும் அரசியல் குறித்த அவரது வெளிப்படையான கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளன.

அமிதாப் மாமா கேரக்டர் எப்படி பிறந்தது?
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற "கலகலப்பு" படத்தில் இளவரசு நடித்த "அமிதாப் மாமா" கேரக்டர் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
அந்த கேரக்டர் பற்றி பேசிய இளவரசு, "முதலில் எனக்கு அந்த கேரக்டர் பற்றியே சொல்லவில்லை. ஒரு லேடி கேரக்டர் போடணும் என்று ஷூட்டிங் நாளே சொன்னார்கள். ஆனால் அடுத்த நாள் எனக்கு வேறொரு படப்பிடிப்பு இருந்ததால் மீசையை எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டேன்.
உடனே சுந்தர்.சி ஒரு ஐடியா சொன்னார். 'தலைநகரம்' படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கேரக்டருக்காக பயன்படுத்திய காஸ்ட்யூமை எடுத்து வந்து எனக்கு போட்டார்கள். நான் முழுக்க கெட்டப்பில் வந்து நின்றதும் நடிகர் சிவா, ஸ்கிரிப்டில் இல்லாதபடி 'யாரு இது... அமிதாப் மாமாவா?' என்று கேட்டார்.
அந்த ஒரு வசனம் எல்லோருக்கும் பிடித்துப் போனதால் படத்திலேயே வைத்தோம். பின்னர் அந்த கேரக்டரின் அடையாளமாகவே அது மாறிவிட்டது" என்று சிரித்தபடி நினைவுகூர்ந்தார்.
சுந்தர்.சி அரசியல் என்ட்ரி
பேட்டியின் போது சுந்தர்.சி அரசியலுக்கு வந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, இளவரசு மிகவும் வெளிப்படையாக பதில் அளித்தார்.
"சுந்தர்.சி அரசியலுக்கு வந்தது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அரசியலுக்கு வருபவர்கள் புகழுக்காகவோ, அதிகாரத்திற்காகவோ வருவார்கள். சினிமாவில் இருந்து வந்து மக்களுக்கு நல்லது செய்யப் போகிறேன் என்று சொல்வதை நான் எளிதில் நம்ப மாட்டேன்.
சுந்தர்.சி ஏன் அரசியலுக்கு வந்தார் என்பது அவருக்குத்தான் தெரியும். ஆனால் நான் பார்த்த சுந்தர்.சி அப்படிப்பட்டவர் இல்லை. அதனால்தான் ஆச்சரியமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

விஜய்யையும் குறிப்பிட்ட இளவரசு
அதே பேட்டியில் விஜய் குறித்து பேசிய இளவரசு, "விஜய்க்கு ஏற்கனவே மிகப்பெரிய மரியாதை இருந்தது. அரசியலுக்கு வந்த பிறகு அவர் சந்தித்த விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை.
அதிகாரம் கிடைப்பது ஒரு விஷயம். ஆனால் அந்த அதிகாரத்தை அடையும் வரை எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை விமர்சனங்கள், எத்தனை குற்றச்சாட்டுகள் வரும் என்பதை பார்க்கும்போது அரசியல் என்பது சாதாரண விஷயம் இல்லை.
அரசியலுக்கு வந்தால் குடும்பத்தைப் பற்றியும் பேசுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிப்பார்கள். அதை தாங்கிக் கொள்ளும் மனநிலை வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அப்பாவைப் பார்த்து பயம்
அரசியல் மீது தனக்கு ஏன் ஆர்வம் இல்லை என்பதையும் இளவரசு விளக்கியுள்ளார். "என் அப்பா அரசியலில் இருந்தவர். ஆரம்பத்தில் பேராசிரியராக இருந்தவர். பிறகு அரசியலுக்கு வந்தார். அவர் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை பார்த்த பிறகுதான் எனக்கு அரசியல் மீது ஒரு பயம் வந்தது.
அவர் ஆரம்பத்திலேயே தனது தொழிலில் இருந்திருந்தால் இன்னும் அமைதியாக வாழ்ந்திருப்பார் என்று பலமுறை தோன்றியுள்ளது. அதனால்தான் அரசியல் எனக்கு வேண்டாம் என்று முடிவு செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
சினிமாவில் அரசியல்
சினிமா துறையில் இருக்கும் போட்டி மற்றும் பொறாமைகள் குறித்தும் அவர் பேசியுள்ளார். "சினிமாவில் அரசியல் மாதிரி பிரச்சனைகள் இருக்கின்றன என்று சொல்வதை நான் நம்ப மாட்டேன். எந்த துறையில் இருந்தாலும் போட்டி இருக்கும். பொறாமை இருக்கும். கருத்து வேறுபாடுகள் இருக்கும்.
சினிமாவிலும் அது இருக்கிறது. ஆனால் அதை மிகைப்படுத்தி பேசுகிறார்கள். நம்ம வேலை பார்த்துட்டு நம்ம பாதையில் போயிட்டே இருந்தா யாராலும் எதுவும் செய்ய முடியாது" என்று கூறியுள்ளார்.
நடிகராக மட்டும் அல்ல
இளவரசு இன்று சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்பட்டாலும், அவரது சினிமா பயணம் அதைவிட பெரியது.
புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி. கண்ணனிடம் உதவியாளராக பணியாற்றிய அவர், பின்னர் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். "தம்பி பொண்டாட்டி", "முந்தானை முடிச்சு" உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அதேபோல் "கலகலப்பு", "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "ஜில்லா", "வேலைக்காரன்", "டாக்டர்", "லவ்வர்"முத்துக்கு முத்தாக உள்ளிட்ட பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
வைரலாகும் இளவரசுவின் பேச்சு
ஒருபுறம் "அமிதாப் மாமா" கேரக்டரின் பின்னணி கதை ரசிகர்களை சிரிக்க வைத்திருக்க, மறுபுறம் சுந்தர்.சி மற்றும் விஜய் அரசியல் குறித்து இளவரசு பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
நகைச்சுவையான அனுபவங்களையும், வாழ்க்கையில் கற்ற பாடங்களையும் ஒரே பேட்டியில் பகிர்ந்த இளவரசுவின் இந்த உரையாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications