ரூல்ஸே இளையராஜாவுக்கு இல்லையே.. ஏன் இப்படி கெட்ட பேர் வாங்கிக்கிறார்? GBU மூலம் ரூ.5 கோடி: பிரபலம்
சென்னை: தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா தரப்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், "குட் பேட் அக்லி" பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ஒருவார காலத்துக்குள் சம்பந்தப்பட்ட பாடல்களை நீக்க வேண்டும் என்றும் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "வக்கீல் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது எல்லாமே தவறான விஷயங்கள்.. பாடல்களை பயன்படுத்துவதற்கு இளையராஜாவிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியமே கிடையாது.. ஏன் அனுமதி வாங்கணும்?

தயாரிப்பாளர்தான் இசையமைப்பாளரையே நியமிக்கிறார், தயாரிப்பாளர்தான், இசையமைப்பாளருக்கு ஊதியம் தருகிறார்.. ஊதியத்தை வாங்கி கொண்டு, இசையமைத்தபிறகு, அதில் என்ன உரிமை இருக்கிறது?
பல பேரின் கூட்டு முயற்சி
மெட்டுக்களை மட்டும்தான் இளையராஜா போடுகிறார், ஆனால், ஒரு பாடல் உருவாகுவதற்கு பல பேர் தேவைப்படுகிறார்கள்.. உதாரணத்துக்கு பாடலை எழுத பாடலாசிரியர்கள் தேவை.. நோட்ஸ்களை இளையராஜா தந்தாலும், அதை வாசிப்பவர்கள் எல்லாம் வேறு வேறு நபர்கள்தான்.. வெறும் டியூன் தந்தாலும், அதை ஒலியாக கொண்டு வருவதற்கு டெக்னீஷியன்கள் தேவைப்படுகிறார்கள்..
இப்படி தனி தனி குழுவினருடன், வேறு வேறு விதங்களில்தான் பாடல் உருவாககப்படுகிறது. அதாவது, பல பேரின் உதவிகளை கொண்டுதான் இளையராஜா ஒரு பாடலை இசையமைக்கிறார்.. அதைவிட முக்கியமாக, இசையமைப்பாளர்களுக்கே தயாரிப்பாளர்தான் ஊதியம் தருகிறார். இப்படி இவர்களை எல்லாம் மீறி, தனக்கு தான் எல்லாமே என்று இளையராஜா சொல்வது ரொம்ப தப்பான விஷயம்.
தன்னுடைய பழைய பாடல்களை பயன்படுத்தியதற்காக இப்போது 5 கோடி பணம் கேட்கிறார் இளையராஜா.. அந்த
படங்களையே தயாரிப்பாளர்கள் அன்று தயாரிக்காமல் போயிருந்தால், இன்று இளையராஜா எப்படி இழப்பீடு கேட்பார்?
இசையமைப்பாளர்கள் அனுமதி
அதுமட்டுமல்ல, ஒரு தயாரிப்பாளர், தன்னுடைய பாடல் உரிமையை ஆடியோ நிறுவனம் ஒன்றுக்கு விற்றுவிட்டால், அந்த ஆடியோ நிறுவனத்துக்குதான் முழு உரிமையும் இருக்கும்.. யாருக்காவது பாடலை பயன்படுத்த உரிமை வேண்டுமானால், சம்பந்தப்பட்ட ஆடியோ நிறுவனத்திடம், அனுமதி பெறலாமே தவிர, இசையமைப்பாளர்களிடம் பெறமாட்டார்கள்.
அன்று உச்சத்தில இருந்தபோதே, இளையராஜா தன்னுடைய பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் பெற்றுக் கொண்டு, அதை வேறொரு ஆடியோ நிறுவனங்களுக்கு விற்றுவிட்டார்.. அப்படி விற்றுவிட்ட பிறகும் இழப்பீடு கோருகிறார் இளையராஜா..
ஆடியோ நிறுவனங்கள்
குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட 3 பாடல்களுமே, வேறு வேறு ஆடியோ நிறுவனங்களிடம் உள்ளதாக தெரிகிறது. அந்த 3 நிறுவனங்களிடமும், பணம் தந்துதான் அனுமதியை பெற்றிருக்கிறார்கள். அந்த 3 படங்களின் தயாரிப்பாளர்களிடமும் என்.ஓ.சி,. வாங்கியிருக்க வேண்டும். அஜித்தை வைத்து படம் எடுக்கும்போது, இந்த நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.. கூலி வாங்கிட்டு பணிபுரிந்தபோதே, இசையமைப்பாளர்களின் உரிமை முடிந்துவிடுகிறது..
இசையமைப்பாளர் தேவா சமீபத்திய பேட்டியில், "என் பாடல்கள் 2 K கிட்ஸ் பயன்படுத்துவது ரொம்ப பெருமையாக இருக்கிறது.. என்னுடைய பாடல்களை பயன்படுத்தினால், ராயல்டி கேட்க மாட்டேன்" என்றார்.. ஒரு கலைஞர் என்றால் இப்படிதான் இருக்கணும்.
கருவறையில் முருகன் சிலை
உதாரணத்துக்கு, கோயில் கருவறையில் வைப்பதற்காக, முருகன் சிலையை செய்யுமாறு கோயில் நிர்வாகம் உத்தரவிடுகிறது. உடனே ஒரு சிற்பி, முருகன் சிலையை வடிவமைத்து கோயில் கருவறையில் கொண்டுவந்து வைத்துவிடுகிறார். அதற்கு பிறகு அந்த முருகன் சிலை பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் சொந்தமாகிவிடும். அதற்காக நான்தான் முருகனை வடிவமாக்கினேன், முருகனே நான்தான் என்று சிற்பி சொல்ல முடியாது.
இதுவரை எத்தனையோ இசையமைப்பாளர்கள், எத்தனையோ பாடல்களை இசையமைத்துள்ளனர். ஆனால், யாருமே இப்படி பிரச்சனை செய்ததில்லை . இவ்வளவு பெரிய சாதனையாளர், அதிலும் மூத்த இசையமைப்பாளர், நான் நான் நான் என்று பேசி ஏன் இப்படி கெட்ட பெயரை சம்பாதித்து கொள்கிறாரோ தெரியவில்லை" என்கிறார்.












Click it and Unblock the Notifications