ஜெயிலர் 2 டிரெய்லரில் இப்படி ஒரு ஒற்றுமையா? Breaking Bad மீது நெல்சனுக்கு இருக்கும் காதல்! பிரிக்க முடியாது போல
சென்னை: ஒரு படத்தின் டிரெய்லரை முதல் முறை பார்க்கும்போது நமக்கு முதலில் கண்ணில் படுவது ஹீரோவின் மாஸ் காட்சிகள்தான். அதுவும் ரஜினிகாந்த் படம் என்றால் கேட்கவே வேண்டாம். பின்னணி இசை, வசனம், ஆக்ஷன், ரஜினியின் தோற்றம் என ஒவ்வொரு காட்சியையும் தனித்தனியாக ரசித்துக் கொண்டிருப்போம். ஆனால் ஜெயிலர் 2 டிரெய்லரை கொஞ்சம் நிதானமாக திரும்பிப் பார்த்தால், இன்னொரு விஷயம் கண்ணில் படுகிறது. குறிப்பாக சில கதாபாத்திரங்களின் தோற்றம், காட்சியமைப்பு, சூழ்நிலை, சில ஆக்ஷன் தருணங்கள் என ஆங்காங்கே Breaking Bad சாயல் இருப்பது போலவே தெரிகிறது.
நெல்சனுக்கும் Breaking Bad-க்கும் இருக்கும் காதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை போல! நெல்சனின் படங்களைப் பார்த்தவர்களுக்கு இந்த விஷயம் புதிது கிடையாது. Breaking Bad தொடரை நெல்சன் ரசிப்பவர் என்பதும், அந்தத் தொடரின் கதாபாத்திரங்கள், காட்சிகள் மற்றும் அதன் உலகத்திலிருந்து பல்வேறு விதங்களில் அவர் தனது படங்களில் தாக்கத்தை எடுத்துக்கொண்டிருப்பதும் ஏற்கனவே பலமுறை பேசப்பட்ட விஷயம்தான். ஜெயிலர் வெளியான நேரத்திலேயே கூட முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தை Breaking Bad மற்றும் Better Call Saul கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் பேசியிருந்தார்கள்.

நெல்சன் ஸ்டைல்
இப்போது ஜெயிலர் 2 டிரெய்லரைப் பார்க்கும்போதும் அந்த சாயல் சில இடங்களில் மீண்டும் நம்மைத் தேடி வருகிறது. அதாவது டிரெய்லரில் வரும் சில கதாபாத்திரங்களின் தோற்றத்தை மட்டும் எடுத்துக்கொண்டாலும், Breaking Bad தொடரில் நாம் ஏற்கனவே பார்த்த உலகம் நினைவுக்கு வருகிறது. குறிப்பிட்ட சில காட்சிகளில் இருக்கும் உடை, தோற்றம், முகபாவனை, கதாபாத்திரங்களின் அமைப்பு என அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும்போது, "இது நெல்சனின் வழக்கமான சினிமா குறிப்பு தானா?" என்று நம்மை யோசிக்க வைக்கிறது.

ஒப்பீடு
அதேபோல திடீரென வெடிக்கும் வன்முறை, துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், வித்தியாசமான இடங்களில் நடக்கும் மோதல்கள் என டிரெய்லரில் இருக்கும் சில தருணங்களும் Breaking Bad உலகத்தை நினைவுபடுத்துகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நெல்சன் ஏற்கனவே தனது படங்களில் இப்படியான குறிப்புகளை வைப்பதில் ஆர்வம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஒற்றுமையையும் பார்த்துவிட்டு "காப்பி" என்று சொல்லிவிட முடியாது.
ஒரு இயக்குநர் தனக்கு பிடித்த ஒரு படைப்பிலிருந்து ஒரு காட்சி மொழியையோ, ஒரு கதாபாத்திரத்தின் தன்மையையோ, ஒரு குறிப்பிட்ட தருணத்தையோ எடுத்துக்கொண்டு அதை தன்னுடைய கதைக்குள் வேறு விதமாக பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் ஜெயிலர் 2 டிரெய்லரில் இருப்பது வெறும் தற்செயலான ஒற்றுமையா அல்லது நெல்சன் வேண்டுமென்றே வைத்திருக்கும் குறிப்புகளா என்பது படம் வெளியான பிறகுதான் இன்னும் தெளிவாகும்.

ஜெயிலர் 2 ட்ரெய்லர்
ஆனால் இந்த முறை அவர் விளையாடும் களம் கொஞ்சம் பெரிதாக இருக்கிறது. முதல் ஜெயிலர் படத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக இருந்த முத்துவேல் பாண்டியன், குடும்பத்துக்காக அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பது போல தெரிந்தாலும், சூழ்நிலை அவரை மீண்டும் தனது பழைய உலகத்துக்குள் இழுத்துச் செல்லும். இரண்டாம் பாகத்தின் டிரெய்லரோ அதைவிட மிகப்பெரிய அளவிலான கிரிமினனல் உலகத்தையும், சிலை கடத்தல் பின்னணியையும், பலம் வாய்ந்த எதிரிகளையும் காட்டுகிறது.
இந்த முறை ரஜினியுடன் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சூரஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட புதிய முகங்களும் இருக்கிறார்கள். அதோடு மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட முதல் பாகத்தின் சிறப்பு தோற்றங்களின் தொடர்ச்சியும் இருக்கிறது. டிரெய்லரில் ஹிருத்திக் ரோஷன் இருக்கிறாரா என்ற கேள்வியையும் ஒரு நிழல் காட்சி கிளப்பியுள்ளது.
புதிய முயற்சி
இதையெல்லாம் சேர்த்து பார்க்கும்போது ஜெயிலர் 2 வெறும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மட்டும் இருக்காது என்பது புரிகிறது. அதிலும் நெல்சன் ஒரு விஷயத்தை தெளிவாகவே செய்திருக்கிறார். முதல் ஜெயிலர் படத்தில் இருந்த மாஸ், நகைச்சுவை, வன்முறை, ஸ்டைல் ஆகியவற்றை அப்படியே வைத்துக்கொண்டு, இந்த முறை கிரிமினல் உலகத்தையும் கதாபாத்திரங்களையும் இன்னும் பெரிதாக்கியிருக்கிறார். ஆனால் அதற்குள்ளேயே Breaking Bad நினைவுக்கு வர வைக்கும் சில காட்சிகளையும் வைத்திருக்கிறார் என்பதுதான் இப்போது கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயம்.




Click it and Unblock the Notifications
