இதெல்லாம் ஒரு ரோலா?” 6 மாசம் ஷூட்டிங்.. இயக்குனர் முன்பே ஓம் படத்தை கலாய்த்த மம்மூட்டி.. உள்குத்தா?
சென்னை: ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு மம்மூட்டி வந்தால், அவருடைய பேச்சை கேட்பதற்கே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அப்படித்தான் தனுஷின் 'ஓம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் மம்மூட்டி பேசிய சில விஷயங்கள் இப்போது இணையத்தில் கவனம் பெற்றிருக்கின்றன. ஆனால் அவர் படத்தை பற்றி கொடுத்த பில்டப் தான் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, தனது கதாபாத்திரத்தைப் பற்றி அவர் சொன்ன விதத்தை கேட்டால், படத்தில் அவருக்கு உண்மையிலேயே என்ன வேலை கொடுத்திருக்கிறார்கள் என்று நமக்கே கேட்க தோன்றுகிறது.

நடிகர் மம்மூட்டி பேச்சு
அதாவது ஓம் படத்தில் பிரமோஷனில் மம்மூட்டி பேசும்போது, "இந்த படத்தில் எனக்கு ஒரு ஜோடி இருக்கிறது. நான் கூட வந்ததும் சந்தோஷமாக பேசிட்டு இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அந்த அம்மாவையே காணோம். என்னுடைய கைஆட்கள் இருக்கிறார்கள். திரு, கணேசா, தண்டபாணி என்று அவர்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருப்பதுதான் என் வேலை. அவங்க எல்லாரும் இந்த பிரமோஷனுக்கு வந்து இருக்காங்க.
திருவை வண்டியை எடுக்க சொல்வது, கணேசாவை ஒருவனை அடிக்க அனுப்புவது என இதைத்தான் ஆறு மாதமாக செய்துகொண்டிருந்தேன். இதெல்லாம் ஒரு ரோலா, கேரக்டரா?" என்று மம்மூட்டி மேடையில் பேசியிருக்கிறார். அதிலும் அவர் சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் முகத்தில் சீரியஸான பாவனையுடன் சொல்லிவிட்டு, கடைசியில் இது தமாஷ்தான் ஜாலியாகத்தான் சொன்னேன் ஆனா படம் சீரியஸா இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் பேசியதை மட்டும் தனியாக எடுத்துப் பார்த்தால், இந்த படத்தில் மம்மூட்டிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வரத்தான் செய்கிறது.
45 நாள் ஷூட்டிங்
மம்மூட்டி பேசியதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் படப்பிடிப்பு அனுபவம். ஆரம்பத்தில் தனக்கு 40 முதல் 45 நாட்கள் வரைதான் படப்பிடிப்பு இருக்கும் என்று கூறியதாகவும், ஆனால் படம் முடிவதற்கு ஆறு மாதங்கள் ஆகிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். சென்னையில் தனக்கு வீடு இருந்ததால் தினமும் படப்பிடிப்புக்கு சென்று வந்ததாகவும், இரவு 3 மணி வரைகூட படப்பிடிப்பு நடந்ததாகவும் பேசி இருந்தார்.
இயக்குநரிடம் ஏன் இவ்வளவு இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடத்துகிறீர்கள் என்று கேட்டால், கடத்தல்காரனின் கதை என்பதால் இரவில்தான் படமாக்க வேண்டும் என்று சொல்வாராம். இதைச் சொல்லும்போதே மம்மூட்டியின் நகைச்சுவையான ரியாக்ஷன் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி அவர் சொன்ன ஒரு விஷயம்தான் இப்போது அதிகமாகப் பேசப்படுகிறது. காலையிலிருந்து தனது ஆட்களை கூப்பிட்டு ஏதாவது ஒரு வேலையை சொல்லிக்கொண்டே இருப்பதுதான் கதாபாத்திரத்தின் வேலை என்றால், இவ்வளவு பெரிய நடிகரை அழைத்து இதைத்தான் செய்ய வைத்தார்களா என்ற கேள்வி எழுகிறது.
ரசிகர்கள் கேட்கும் கேள்வி
மம்மூட்டி சாதாரண நடிகர் கிடையாது. மலையாளத்தில் பல தலைமுறை ரசிகர்களை கொண்டவர். சமீப காலமாகவே கதாபாத்திரங்களுக்காகத் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார். பிரம்மயுகம்,
கண்ணூர் ஸ்குவாட் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நடிகரை தனுஷ் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள் என்றதும் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அதுவும் தனுஷ், மம்மூட்டி இருவரும் ஒரே படத்தில் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே இந்த கூட்டணி எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். படத்தின் ட்ரெய்லரிலும் மம்மூட்டியின் தோற்றம் கவனம் பெற்றது. ஆனால் இப்போது புரமோஷன் மேடையில் அவர் சொன்ன விஷயங்களைப் பார்த்ததும், அவருடைய கதாபாத்திரத்துக்கு போதுமான முக்கியத்துவம் இருக்கிறதா என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது.
ஓம் டிரைலரில் விவாதம்
ஏற்கனவே ட்ரைலரில் தனுஷ் பெயர் பக்கத்தில் மம்மூட்டி பெயர் வரவில்லை என்ற விவாதமும் போய்க் கொண்டிருக்கிறது. நீங்களே பார்த்தால் அதில் ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கலாம், இதற்கு முன்பு ஜில்லா படத்தில் நடிகர் விஜய்யுடன் மோகன்லால் நடித்திருந்தார், அப்போது இருவர் பெயரையும் பக்கத்தில் பக்கத்தில் டிரைலரில் போடப்பட்டிருந்தது. ஆனால் ஓம் படத்தில் தனுஷுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு பாதி ட்ரைலர் கடந்த பிறகு தான் மம்மூட்டி பெயர் வருகிறது. அது அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்தது. இதை வைத்து முதல் நாளே பஞ்சாயத்து தொடங்கி விட்டார்கள். இப்போ மம்மூட்டியும் தனது ஆதங்கத்தை கொட்டி விட்டார்.
அவர் சொன்னதை வைத்தே படத்தில் அவருக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் குறைவு என்று முடிவு செய்துவிட முடியாது. சில கதாபாத்திரங்கள் திரையில் அதிக நேரம் வராவிட்டாலும், கதையின் போக்கையே மாற்றக்கூடியதாக இருக்கும். அதேபோல் ஒரு நடிகர் தனது கதாபாத்திரத்தை காமெடியாக சொல்லி ரசிகர்களைச் சிரிக்க வைப்பதும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் வழக்கமான விஷயம்தான். ஆனாலும் மம்மூட்டி போன்ற ஒரு நடிகரின் வாயிலிருந்து 'இதெல்லாம் ஒரு கேரக்டரா?' என்று வரும்போது ரசிகர்கள் அதை பற்றி பேசாமல் இருப்பார்களா?
ரசிகர்கள் கருத்து
தன்னுடைய பேச்சின் முடிவில் மம்மூட்டி ஒரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியிருக்கிறார். தான் சொல்வதெல்லாம் தமாஷ்தான் என்றும், ஆனால் படம் மிகவும் சீரியஸான கதை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைத் திரைப்படத்தை பார்க்கும்போது அது இன்னும் நெருக்கமாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இப்போது மம்மூட்டி பேசியதை பார்த்து ரசிகர்கள் இரண்டு விதமாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். சிலர், இவ்வளவு பெரிய நடிகரை அழைத்து அடியாட்களை கூப்பிடும் வேலையை மட்டும்தான் கொடுத்தார்களா? என்று கேட்கிறார்கள். இன்னொரு பக்கம், மம்மூட்டி வழக்கம்போல காமெடியாக தனது கதாபாத்திரத்தை பற்றிப் பேசியிருக்கிறார், படத்தை பார்த்த பிறகுதான் அதன் முக்கியத்துவம் தெரியும் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். மம்மூட்டி மேடையில் பேசிய இந்தக் குட்டி கலாய், 'ஓம்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை விட அவருடைய கதாபாத்திரம் பற்றிய ஆர்வத்தையே இப்போது அதிகப்படுத்தியிருக்கிறது. படம் வெளியான பிறகு, 'மம்மூட்டி சொன்னது உண்மையா, இல்லை நம்மை ஏமாற்றிய நகைச்சுவையா?' என்பதைப் பார்க்கத்தான் வேண்டும்.


Click it and Unblock the Notifications
