"பீனிக்ஸ்" பறவையாய் வந்த தினேஷ் குமார்.. கொண்டாட்ட மேடையான சூப்பர் சிங்கர் -நடுவர்கள் தந்த சர்பிரைஸ்
சென்னை: விஜய் டிவியில் ஓளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் தினேஷ் குமார், நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷனில் இருந்து கடைசி நேரத்தில் மக்களின் வாக்குகளால் தப்பித்த நிலையில், பீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்த அசத்தினார். அவருக்கு மேடையிலேயே நடுவர்கள் இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்தனர்.
பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பலவும் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. இந்த தொலைக்காட்சியில் வந்து மக்கள் மத்தியில் பிரபலமான பலர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டு உள்ளார்கள்.

குறிப்பாக நீயா நானா, பிக் பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், கலக்கப்போவது யாரு, KPY சாம்பியன்ஸ், பிபி ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் வரும் பல நிகழ்ச்சிகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என அனைத்து வயதை சேர்ந்த ரசிகர்களும் உள்ளார்கள். இந்த போட்டி ஒரு ஆண்டு விட்டு மறு ஆண்டு பெரியவர்கள், சிறுவர்களுக்கு என மாற்றி மாற்றி நடத்தப்பட்டு வருகிறது. சீரியர், ஜூனியர் என 2 வகையான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடி பிரபலமானவர்கள் சினிமாவில் முக்கியமான பின்னணி பாடகர்களாக உயர்ந்து இருக்கிறார்கள்.
சூப்பர் சிங்கில் பாடிய செந்தில், ராஜலெட்சுமி, திவாகர், பூவையார், ஆஜித், சத்யபிரசாத், சாய் சரண், நித்யஸ்ரீ, ரக்ஷிதா, சிவாங்கி, ஸ்ரீராம், ஸ்ரீநிசா என பலர் சூப்பர் சிங்கர் மூலமாக பிரபலங்களாக பின்னணி பாடகர்களாக உயர்ந்து இருக்கின்றனர். தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீனியர்களுக்கான 9 வது சீசன் நடைபெற்று வருகிறது.

டாப் 20 பாடகர்கள் தேர்வு செய்யப்பட்டு வாரம் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு தற்போது 7 பேர் மட்டுமே மீதம் உள்ளார்கள். கர்நாடக சங்கீதம் பயின்றவர்கள், நாட்டுப்புற பாடகர்கள், சுயாதீன பாடகர்கள், சாதாரணமாக வீடுகளில் பாடும் சாமானியர்கள் என பல்வேறு தரப்பினர் இதில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்து வருகிறார்கள்.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் சூப்பர் சிங்கர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த நேற்றைய நிகழ்ச்சியில் சுயாதீன பாடகரான சந்திரன் எலிமினேட் செய்யப்பட்டார். தினேஷ் குமார் அதிக வாக்குகளை பெற்று காப்பாற்றப்பட்டார். எலிமினேஷன் வரை சென்றுவிட்டு திரும்பிய தினேஷ் அடுத்து சூப்பர் சிங்கர் மேடையில் செய்ததுதான் மேஜிக்.
மனிதன் படத்தில் வரும் "அவள் குழல் உதிா்த்திடும்" என்ற பாடலை தனது மாய குரலாள் பாடி ரசிகர்களை மட்டுமின்றி நடுவர்களை மயக்கினார். இதை பாடிய பிரதீப் குமாருக்கு இணையாக தினேஷ் பாடியதாக பலரும் வாழ்த்தினர். அருணா, பூஜா போன்ற சங்கீதத்தை நன்கு பயின்றவர்களே இதில் 3 விளக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் தினேஷ் குமாருக்கு 4 விளக்குகளை ஒளிரவிட்டனர் நடுவர்கள். அத்துடன் நடுவர்கள் உன்னிக்கிருஷ்ணனும் அனுராதா ஸ்ரீராமும் எழுந்து சென்று அவர்களை வாழ்த்தினர்.
அப்போதுதான் தினேஷ் குமாருக்கு நடுவர்கள் ஒரு சர்பிரைஸ் கொடுத்தனர். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய தினேஷுக்காக கேக் கொடுத்து சூப்பர் சிங்கர் மேடையிலேயே வாழ்த்தினர் நடுவர்களும், சக போட்டியாளர்களும். அதை தொடர்ந்து சூப்பர் ஜோனில் நம்பர் 1 இருக்கையை அவருக்கு நடுவர்கள் வழங்கினர். இதனால் தினேஷ் குமார் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். ஒவ்வொரு முறையும் எலிமினேஷன் வரை சென்று மக்களின் பேராதரவின் காரணமாக மீண்டு வந்து தனது மாயாஜால குரலின் காரணமாக நடுவர்களை ஈர்த்து வருகிறார் தினேஷ் குமார்.












Click it and Unblock the Notifications