Kombu Seevi Review: கொம்பு சீவி படத்திற்கு ப்ளூசட்டை மாறன் கொடுத்த ரிவ்யூ! இந்த இடத்தில் தான் குறையாம்!
சென்னை: பொன்ராம் இயக்கத்தில், சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள 'கொம்புசீவி' படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம், வெளியான முதல் நாளிலேயே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஒருபக்கம் "பொன்ராம் ஸ்டைல் கிராமத்து படம்"ன்னு சொல்லும் ரசிகர்கள், இன்னொரு பக்கம் "கதை நல்லா இருந்தும் சரியா பயன்படுத்தல"ன்னு விமர்சிக்கிறாங்க. இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்திற்கு ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் சேர்ந்து சரத்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதுவே படத்துக்கு ஆரம்பத்திலேயே கொஞ்சம் எதிர்பார்ப்பை உருவாக்கியது. கூடவே துணை நடிகர்கள், கிராமத்து கேரக்டர்கள் எல்லாம் பொன்ராம் படங்களுக்கு வழக்கமான முகங்களாக இருக்கிறார்கள்.

கொம்பு சீவி படத்தின் கதை
கொம்பு சீவி பட கதை என்னன்னா, வைகை அணையை சுற்றியுள்ள சில கிராமங்களை மையமாக வைத்து நகர்கிறது. அந்தப் பகுதி மக்கள் விவசாயத்தை ஒரு வித்தியாசமான முறையில் பார்க்கிறார்கள். அணையில் தண்ணீர் இருந்தால் விவசாயம் செய்ய மாட்டார்கள். தண்ணீர் இல்லாத நேரத்தில் அந்த இடங்களை விவசாயத்துக்கு பயன்படுத்துவார்கள்.
இதற்கிடையில், அவர்களுடைய வாழ்க்கையை ஓட்ட கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபடுகிறார்கள். அந்த தொழிலில் டானாக இருப்பவர் தான் சரத்குமார். அவருடைய வலது கையாக, அம்மா அப்பா இல்லாத ஒரு இளைஞராக சண்முக பாண்டியன் வருகிறார். இருவரும் சேர்ந்து கஞ்சா கடத்தி வசதியாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். இந்த நேரத்தில் பெரிய ஒரு ஆர்டர் கிடைக்கிறது.
அந்த ஆர்டரை செய்ய ஆரம்பிக்கும்போது ஒரு உயரதிகாரியின் அழுத்தம் வருகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்குது என்பதே படத்தின் மீதிக் கதை. படத்தை முழுசா பார்த்த பிறகுதான், "இதுல இப்படி ஒரு ஆழமான கதை இருக்கே"ன்னு பலருக்கும் புரிய ஆரம்பிக்குது.
வைகை அணை கட்டப்பட்ட போது, அந்த பகுதியில் இருந்த 12 கிராமங்களை அகற்றித்தான் அணை கட்டப்பட்டிருக்கிறது. அந்த மக்கள் வாழ்வாதாரம் இழந்து, வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, கடைசியில் கஞ்சா வியாபாரத்துக்கு தள்ளப்பட்டார்கள். அந்த கோணத்தில் பார்த்தால், "இதுல அவங்க என்ன தப்பு பண்ணாங்க?"ன்னு கேள்விகளும் வருகிறது.
ஆனா, இதைத்தான் பிரபல திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறன் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் சொல்றதுபடி, இந்த விஷயத்தை படம் ரொம்ப மேம்போக்கா தொட்டுவிட்டு, அதுவே முழுக் கதையா காட்டப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதால்தான் இந்த மக்கள் இந்த தொழிலுக்கு வந்தார்கள் என்பதைக் கூட அழுத்தமா சொல்லாம விட்டுட்டாங்கன்னு அவர் சொல்லி இருக்கிறார்.
அதோடு சீரியஸான விஷயத்தை காமெடியா காட்டி, காமெடியான விஷயத்தை சீரியஸா காட்டியிருக்கிறதுதான் படத்தின் பெரிய பலவீனம் என்றும் சொல்லியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல், எந்த ஒரு கேரக்டரும் ஆழமாக எழுதப்படவில்லை என்பதும் அவரது விமர்சனத்தில் முக்கியமான பாயிண்ட். "ஸ்ட்ராங்கான கதையை இயக்குநரே தளர்த்தி விட்டார்"ன்னு அவர் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார்.
பாக்ஸ் ஆபீஸ் விஷயத்துக்கு வந்தா, 'கொம்புசீவி' முதல் நாளில் ஓரளவிற்கு வசூல் செய்திருக்கிறது. ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்த்து ஆதரவு கொடுத்தாலும், வாய் வழி விமர்சனம்தான் அடுத்த நாட்களில் வசூலை தீர்மானிக்கும் நிலைமையில் இருக்கிறது. அதிலும் நேற்று ஒரே நாள் தமிழகத்தில் மட்டும் 30 லட்சம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
ரசிகர்களின் கருத்தும் இரண்டு பக்கமாகவே இருக்கிறது. ஒரு தரப்பு, "கதை நல்லா இருக்கு, சரத்குமார் நடித்தது செம"ன்னு சொல்றாங்க. மற்றொரு தரப்பு, "இவ்வளவு நல்ல கதையை இன்னும் அழுத்தமா சொல்லியிருக்கலாம்"ன்னு ஏமாற்றம் தெரிவிக்கிறாங்க.
மொத்தத்தில், 'கொம்புசீவி' என்பது கதை இல்லாத படம் இல்லை. ஆனா, அந்த கதையை சொல்லிய விதம் எல்லாரையும் திருப்திப்படுத்தியதா என்றால், அதுக்கு பதில் இன்னும் தெளிவாக வரல. படம் ஓட ஓட தான், இது ரசிகர்களிடையே பிடிக்குமா இல்லையா என்பது முடிவு ஆகப்போகிறது.












Click it and Unblock the Notifications