நான் பிழைக்க மாட்டேன்.. கடைசியாக மதன் பாப் சொன்ன வார்த்தை.. கலங்க வைக்குது!
சென்னை: சாவேனா, பிழைப்பேனா என்று தெரியாது என மருத்துவர்கள் கூறிய போது, மீண்டும் பிழைத்து வந்ததை வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று மறைந்த நடிகர் மதன் பாப் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் 71 வயதில் காலமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளிலும் 200க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். நகைச்சுவை மட்டுமல்லாமல் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர். தேவர் மகன், பெண்ணின் மனதை தொட்டு, சதிலீலாவதி, தெனாலி, ஃபிரண்ட்ஸ் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளனர்.

இவரின் தனித்துவமான சிரிப்பு இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதேபோல் சன் டிவியில் "அசத்தப் போவது யாரு" என்ற நிகழ்ச்சியின் மூலமாக மதன் பாப் தனது புதிய பரிமாணத்தை வெளிக்காட்டினார். இவரின் மிமிக்ரி திறமை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த நிலையில் கேன்சருக்காக சிகிச்சை பெற்று வந்த மதன் பாப், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதன் பாப் அளித்த பழைய பேட்டி ஒன்று சோசியல் மீடியாவில் ரசிகர்களால் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் மதன் பாப் பேசுகையில், ஒரு 3-4 மாதங்களுக்கு முன்பாக சாகக்கிடந்தேன்.. நான் பிழைப்பேனா, மாட்டேனா என்பதையே 6 மாதத்திற்குப் பின்பே சொல்ல முடியும் என்றார்கள்..
ஆனால் இந்த 6 மாதத்திற்குள் எப்படியோ பிழைத்து வந்துவிட்டேன்.. இதுதான் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத விஷயம்.. ரொம்ப ஆச்சரியமான விஷயமும் இதுதான் என்று தெரிவித்துள்ளார். கேன்சரால் பாதிக்கப்பட்ட மதன் பாப், நீண்ட காலமாக அதற்கான சிகிச்சைகளைப் பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் அதற்கு தீவிர சிகிச்சை எடுத்திருந்த போது, மருத்துவர்கள் அப்படியான வார்த்தைகளை கூறி இருக்கின்றனர்.
மதன் பாப்-ன் ஒரிஜினல் பெயர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி. வானமே எல்லை படத்தில் நடித்த போது, இயக்குநர் பாலச்சந்தர் அவரின் பெயரை மதன் பாப் என்று மாற்றினார். தனது சினிமா வாழ்க்கையை இசையமைப்பாளராகத் தொடங்கிய மதன் பாப், அதன்பின் நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், ஸ்டான்ப் அப் காமெடியன், மிமிக்ரி என்று பன்முகக் கலைஞராக மாறினார். அழியா சிரிப்புக்கு சொந்தக்காரரான மதன் பாப்-க்கு ரசிகர்கள் பலரும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications