சண்டை இல்லை.. வில்லன் இல்லை.. ஆனால் கண் கலங்க வைக்கும் படம்! சின்ன சின்ன ஆசை எப்படி இருக்கு?
சென்னை: ஒரு படம் ஹிட் ஆகணும்னா சண்டை இருக்கனும், ஹீரோவை மாஸாக காட்டணும், கிளைமேக்ஸில் வில்லனை அடிச்சு தூக்கணும் என்று ஒரு ஃபார்முலா இருக்கிறது. ஆனால் அந்த பார்முலா எல்லாத்தையும் உடைத்துக்கொண்டு அமைதியாக வந்து மனதை நனைத்து செல்கிறது சின்ன சின்ன ஆசை 2 மணி நேரம் முழுக்க யாரும் சண்டை போட மாட்டாங்க, ஆனால் படம் முடியும் போது நம்ம மனசுக்குள்ள ஏதோ ஒரு வெற்றிடம் நிரம்பிய மாதிரி ஒரு உணர்வு வரும் அதுதான் இந்த படத்தின் பலம்.

சின்ன சின்ன ஆசை கதை
52 வயதான லீலா ( மதுபாலா) குடும்பத்தோடு காசிக்கு சுற்றுலாப் போகிறார். ஆனால் அங்கே ஒரு நாள் மட்டும் யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் தனக்காக வாழ வேண்டும் என்று முடிவு செய்கிறார். அந்த ஒரு முடிவு தான் அவருடைய வாழ்க்கையே மாற்றுகிறது. அதே நேரத்தில் அவரது பர்ஸ் செல்போன் எல்லாம் திருட்டு போய் விடுகிறது. மொழி தெரியாத ஊரில் யாரும் உதவவில்லை. திரும்ப தன்னுடைய டூர் குழுவை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியாமல் தவிக்கும் போது அவருக்கு உதவியாக வருகிறார் மாதவன் மாஸ்டர் (இந்திரன்ஸ்)
பல பெண்களின் முகம்
அதற்குப் பிறகு ஒரு நாள் முழுக்க இருவரும் வாரணாசி நகரத்தை சுற்றும் பயணம் தான் இந்த படம். ஆனால் இது வெறும் பயணம் இல்லை ஒரு பெண்ணின் மனதிற்குள் நடக்கும் பயணம். இந்த படத்தில் வரும் லீலா ஒரே ஒரு கேரக்டர் இல்லை வீட்டுக்காக வாழ்ந்த தன்னுடைய ஆசைகளை எல்லாம் பூட்டி வைத்து வாழ்ந்த ஆயிரக்கணக்கான பெண்களின் பிரதிநிதி. எனக்காக நான் எப்ப வாழ்ந்தேன்? என்று கேள்வி கேட்க கூட நேரம் கிடைக்காத பெண்களின் கதையை இந்த படம் மிகவும் இயல்பாக சொல்கிறது.
ஒரு பெண்ணின் கதை
ஒரு நாள் மட்டும் தன்னுடைய விருப்பப்படி வாழ வேண்டும் என்பதற்கே குற்ற உணர்ச்சி கொடுக்கிற ஒரு பெண்ணின் மனநிலையை படம் மிகவும் நுட்பமாக பதிவு செய்கிறது. இந்த படத்தில் காதல் இருக்கிறது. ஆனால் வழக்கமான சினிமா காதல் இல்லை லீலாவை புரிந்து கொள்ளும் ஒரே ஒரு மனிதராக மாதவன் மாஸ்டர் இருக்கிறார். அவளை மாற்ற முயற்சிக்கவில்லை, அவளை கேள்வி கேட்கவில்லை. அவள் மனசை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். அதனால் படம் முடியும் போது இவர்களுடைய உறவு காதலா? நட்பா? என்ற கேள்வியை விட இப்படி ஒரு மனிதர் நிஜ வாழ்க்கையில் இருந்தால் போதும் என்று நினைக்க வைத்து விடுகிறது.
படத்தில் பலம்
படத்தின் பல காட்சிகள் மனதை தொட்டு விடுகின்றன. மனைவியின் அஸ்தியை கங்கையில் கரைக்க வரும் கணவர் பேசும் வசனம் மிகவும் ஆழமானது. குழந்தை எப்படி இருக்கிறது என்று மட்டும் கேட்டேன்... நீ எப்படி இருக்க என்று ஒருநாள் கேட்கவில்லை இந்த ஒரு வரியே திருமண வாழ்க்கையில் பல பெண்கள் சந்திக்கும் புறக்கணிப்பை படம் சொல்லி விடுகிறது.
அதேபோல தீபம் விற்க்கும் சிறுமி காசு வேண்டாம் தீபம் வாங்கிக்கோ என்று சுயமரியாதையோடு பேசும் காட்சியும் அழகாக இருக்கிறது. இதுதான் படத்தின் உச்சம். சிறுவயதில் இருந்து நடனமாட ஆசைப்பட்ட லீலாவுக்கு வாழ்க்கை அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை ஆனால் காசியில் இரவில் முதல் முறையாக அவர் நடனமாடி சிறிய தொகை சம்பாதிக்கிறார். அந்த பணத்தை மாதவன் மாஸ்டரிடம் கொடுத்து இது என்னுடைய முதல் சம்பளம் நீங்க வச்சுக்கோங்க என்று சொல்லும் காட்சி பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
அதுபோல லீலாவாக நடித்த மதுபாலா முழு படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். எந்த இடத்தில் நடிக்கிறார் என்று தோன்றாது. மாதவன் மாஸ்டர் ஆக வரும் இந்திரன்ஸ் மிக இயல்பாக நடித்திருக்கிறார். இரண்டு பேருடைய உரையாடல்கள் தான் படத்தின் உயிர். அது போல் ஜாபர் சாதிக் வரும் காட்சிகளும் கதைக்கு திருப்புமுனையில் ஏற்படுத்துகிறது. இயக்குனர் வர்ஷா எந்த இடத்திலும் செயற்கையான சினிமாத்தனத்தை திணிக்கவில்லை.
தெருக்கள், கங்கை, இரவு, அமைதி எல்லாவற்றையும் கேரக்டர்களாகவே பயன்படுத்தி இருக்கிறார். மாஸ் ஹீரோ பஞ்ச் வசனம், சண்டை, ரத்தம் எதுவும் இல்லாமல் 2 பேர் பேசிக் கொண்டே 2 மணி நேரம் நம்மை உட்கார வைத்து பார்க்க வைப்பது சாதாரண விஷயம் இல்லை. அமைதியாக மனதை தொட்டு படம் முடிந்த பிறகு நீண்ட நேரம் நம்மோடு பயணம் செய்யும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்த படம் முடிந்த பிறகு உங்கள் அம்மாவையோ, மனைவியையோ, அக்காவையோ, இன்னொரு பார்வையில் பார்க்க வைக்கும் சக்தி இந்த சின்ன சின்ன ஆசைக்கு இருக்கிறது.


Click it and Unblock the Notifications
