Nanjil Vijayan: ரோபோ சங்கர் குடும்பமே கடனில் தான் இருக்கிறது! இந்திரஜா தாலியை கூட கழட்டி.. நாஞ்சில் விஜயன் உருக்கம்
சென்னை : சினிமாவில், தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் ரோபோ சங்கர். சமீபத்தில் அவர் உடல்நலக் குறைவால் திடீரென காலமானார். அவரது இழப்பு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது நெருங்கிய நண்பரும், கலைஞருமான நாஞ்சில் விஜயன் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்து, ரோபோ சங்கரின் இழப்பு குறித்துப் பேசியுள்ள தகவல்கள், பலரின் மனதை உருக்கியுள்ளன.

வதந்திகளுக்கு பின்னால் உள்ள உண்மை
சமூக வலைத்தளங்களில், ரோபோ சங்கரின் உடல்நலக்குறைவுக்குக் குடிப்பழக்கம் தான் முக்கிய காரணம் என்று பலர் கருத்துகளைப் பரப்பி வந்தனர். இதற்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், "அதுவும் ஒரு காரணமே தவிர, அது மட்டும் தான் காரணம் இல்லை. அவர் மேடைக் கலைஞராக இருந்தபோது உடம்பில் பூசிக்கொண்டிருந்த பெயிண்ட், ஓயாத உழைப்பு என எல்லாமே சேர்ந்துதான் அவருடைய உடல்நலக் குறைவுக்குக் காரணம்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணத்தின் விளிம்புக்கே சென்றார். ஆனால், அவரது மனைவி பிரியங்கா போராடி அவரை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்டு வந்தார். ஆனால், குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்த அவரை, எந்தத் தொலைக்காட்சி சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று நடிக்க வாய்ப்பு கொடுத்தது என்று நாஞ்சில் விஜயன் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைஞனின் மறைக்கப்பட்ட போராட்டங்கள்
வாய்ப்பு இல்லாததால், கடந்த இரண்டு வருடங்களாக ரோபோ சங்கர் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். வளசரவாக்கத்தில் அவர் இருக்கும் வீட்டுக்கு மட்டுமே மாதம் ஒரு லட்சம் ரூபாய் இஎம்ஐ கட்ட வேண்டும். இந்தச் சூழ்நிலையில், அவரும் ஓடி ஓடி உழைத்திருக்கிறார்.
"ரோபோ சங்கர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபோதே ஐம்பது லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டது. அவ்வளவு பணத்தைச் செலவு செய்துதான் பிரியங்கா அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவச் செலவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள். இந்திரஜா அணிந்திருந்த தாலி உட்பட அத்தனை நகைகளையும் மருத்துவமனையிலேயே கழட்டிக் கொடுத்தார். அதேபோல அவரது கணவர் கார்த்திக்கும் தனது கையில் அணிந்திருந்த செயின், மோதிரம் என அனைத்தையும் கழட்டிக் கொடுத்துதான் மருத்துவச் செலவு செய்யப்பட்டது. அனைத்தையும் அருகில் இருந்து கண்கூடாகப் பார்த்தவன் நான்" என்று நாஞ்சில் விஜயன் மனம் உருகி பேசியுள்ளார்.
விமர்சனங்களுக்கு பின்னால் உள்ள வலி
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மீது, வருமானம் இல்லாததால் பல பிரமோஷன்களைச் செய்து வருகிறார் என்று பலர் விமர்சனங்கள் வைக்கின்றனர். அது குறித்துப் பேசிய நாஞ்சில் விஜயன், "ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதற்காக அவர்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று நினைத்துவிடக் கூடாது. ரோபோ சங்கர் குடும்பம் மிகப்பெரிய கடன் சுமையில் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
அதேபோல, ரோபோ சங்கரின் மனைவி இறுதி ஊர்வலத்தில் ஆடியதை சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அது குறித்துப் பேசிய நாஞ்சில் விஜயன், "இறுதி ஊர்வலத்தில் ஆடியது வேதனையின் உச்சத்தில் ஆடினார். தனது கணவருக்குப் பிடித்ததை கடைசியாகச் செய்தார். அதைத் தமிழ் மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்" என்று அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
மொத்தத்தில், நாஞ்சில் விஜயனின் இந்த உருக்கமான பேட்டி, ரோபோ சங்கர் குடும்பம் எவ்வளவு துயரத்தில் இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பரப்புவதை நிறுத்திவிட்டு, ஒரு கலைஞனின் கௌரவத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications