'கூலி' பட வில்லி ரச்சிதா ராம் யார் தெரியுமா? ‘டிம்பிள் குயின்’, அந்த படங்களில் நடிப்பு! குடும்பத்தில் வந்த பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான கருத்துக்களைப் பெற்றாலும் வசூலில் பெரும் சாதனை படைத்து வருகிறது. வெளியான நான்கு நாட்களில் ₹404 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் அதிகம் பாராட்டியவர்கள் இருவர். ஒருவர் வில்லனாக நடித்த மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் மற்றொருவர் நடிகை ரச்சிதா ராம்.

Rachita Ram Coolie Rajinikanth

கூலி படத்தின் பிரம்மாண்டம்

'கூலி' படத்தில் ரஜினியுடன் நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர் அமீர் கான் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். நடிகை பூஜா ஹெக்டே ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி இருந்தார். படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். 'கூலி' திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ₹151 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதுவரை ₹300 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் ₹400 கோடியை தாண்டி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது

ரச்சிதாவின் ஆக்ரோஷமான கதாபாத்திரம்

லோகேஷ் கனகராஜின் படங்களில் ஒரு கதாபாத்திரம் முதலில் முக்கியத்துவம் இல்லாதது போல காட்டப்படும். ஆனால் ஒரு கட்டத்தில் அது ஆக்ரோஷமாக மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். 'கைதி' படத்தில் ஜார்ஜ் மரியான் 'விக்ரம்' படத்தில் ஏஜென்ட் டீனா போன்றவை இதற்கு சிறந்த உதாரணம். அதேபோல 'கூலி' படத்தில் ரச்சிதாவுக்கு இப்படிப்பட்ட ஒரு ஆக்ரோஷமான கதாபாத்திரம் வழங்கப்பட்டது. முந்தைய இரண்டு கதாபாத்திரங்கள் பாசிட்டிவானவை என்றால் ரச்சிதாவின் கதாபாத்திரம் முழுக்க முழுக்க நெகட்டிவானது. அதை அவர் சிறப்பாகவே செய்திருந்தார்.

யார் இந்த ரச்சிதா ராம்?

தமிழ் ரசிகர்களுக்கு இவர் இதற்கு முன்பு அதிகம் பரிச்சயம் இல்லையென்றாலும் கன்னடத்தில் அவர் மிகவும் பிரபலமானவர். அவரது கன்னக்குழிக்காக ரசிகர்கள் அவரை 'டிம்பிள் குயின்' என்று அழைக்கிறார்கள். 90ஸ் கிட்ஸ் வேர்லுக்கு லைலா எப்படி கன்னகுழி அழகியோ அதுபோல 2கே கிட்ஸ்கள் பலருக்கு இவர்தான் கன்னக்குழி அழகி. கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் அவரும் ஒருவர். அவர் நடித்த பல கன்னடப் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன.

2013 ஆம் ஆண்டு வெளியான 'புல்புல்' என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானார். இது தெலுங்கில் வெற்றி பெற்ற 'டார்லிங்' படத்தின் கன்னட ரீமேக். இந்த ஒரு படமே ரச்சிதாவை கன்னட திரையுலகில் பிரபலமாக்கியது. ரன்னா, சக்ரவ்யூஹா, புஷ்பக விமானம், பர்ஜரி, அயோக்யா, சீதாராம கல்யாண, நடசார்வபவுமா, ஆயுஷ்மான் பவ போன்ற பல படங்களில் நடித்து கன்னட ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகையாக மாறிவிட்டார்.

வாழ்க்கையில் ஒரு புயல்

2019 ஆம் ஆண்டு வெளியான சீதாராம கல்யாண, நடசார்வபவுமா, ஐ லவ் யூ போன்ற படங்கள் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தன. ஆனால் 2020 ஆம் ஆண்டு ரச்சிதா நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்கு காரணம் ஐ லவ் யூ படத்தில் இடம்பெற்ற மாட்டனாடி மாயவடே என்ற பாடல் காட்சி. அதற்கு முன்பு கவர்ச்சியான காட்சிகளில் நடிக்காத ரச்சிதா இந்தப் பாடலில் உபேந்திராவுடன் மிக நெருக்கமாகவும் கவர்ச்சியாகவும் நடித்தார். இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியது.

குடும்பப் பிரச்சனைகள்

ரச்சிதாவின் குடும்பத்தினர் இந்தப் பாடலை ரசிக்கவில்லை. இது அவரது குடும்பத்தில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. இதனால் அவர் தனது சொந்த வீட்டை விட்டே வெளியேற்றப்பட்டார் என்று கூட கூறப்படுகிறது. பின்னர் ஒரு பேட்டியில் அந்தப் பாடல் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்தும் தனது பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது குறித்தும் கண்ணீருடன் பகிர்ந்திருந்தார்.

"உன்னை ஒரு நடிகையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் எங்களுடைய மகளாக அல்ல" என்று தனது தாய் கூறியதையும் அந்தப் பேட்டியில் ரச்சிதா அழுதபடி நினைவு கூர்ந்தார். இந்த சர்ச்சைக்குப் பிறகு உடனடியாக அந்தப் பாடல் திரையரங்குகளிலிருந்து படக்குழுவினரால் நீக்கப்பட்டது. ஓடிடியில் படம் வெளியானபோது கூட அந்தப் பாடல் சென்சார் செய்யப்பட்டு வெளியானது. இந்த விவகாரம் கன்னட திரைத்துறையில் பெண்களை அதீத கவர்ச்சிப் பொருளாக காண்பிப்பது குறித்த விவாதங்களை கிளப்பியது. இந்த சர்ச்சைக்குப் பிறகு உபேந்திராவுடன் ரச்சிதா ராம் எந்தப் படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. ஆனால் இப்போது வெளியாகியிருக்கும் 'கூலி' படத்தில் உபேந்திராவும் ஒரு முக்கிய கேமியோ செய்திருக்கிறார். எனினும் இருவரும் சேர்ந்து வரும் காட்சிகள் படத்தில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கம்பேக்

இந்த சர்ச்சையால் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்ட ரச்சிதா அதிலிருந்து மீண்டு வந்து கன்னடத்தில் 'மான்சூன் ராகா' (2022) 'கிராந்தி' (2023) போன்ற படங்களின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகச் சிறப்பாக தொடங்கினார். அவர் தனது நடிப்பாற்றலால் இழந்த இடத்தை மீண்டும் எளிதில் எட்டிப் பிடித்தார்.

Rachita Ram Coolie Rajinikanth

இந்தச் சூழலில்தான் 'கூலி' படத்தில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பதன் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று வருகிறார். கன்னடத்தில் இரண்டாம் இன்னிங்ஸை வலுவுடன் தொடங்கியிருக்கும் அவருக்கு இனி தமிழிலும் வாய்ப்புகள் குவியும் என்பதில் சந்தேகம் இல்லை.

சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போட்டோஷூட் படங்களை வெளியிடாமல் ரச்சிதா ராம் 'கூலி' படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "கூலி' படத்தில் எனது கல்யாணி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என் கதாபாத்திரத்துக்கு கிடைத்த விமர்சனங்களும் அன்பும் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஊடகம் விமர்சகர்கள் மீம்கள் ட்ரோல் செய்தவர்கள் என அனைவருக்கும் என் நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார். ரச்சிதா ராமின் இந்த பதிவு அவருடைய கனவு நனவானதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது. ஒரு நடிகருக்கு ரசிகர்களின் அன்புதான் பெரிய சொத்து. அதை ரச்சிதா இப்போது பெற்றிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+