‘கூலி’ படத்தை விடுங்க.. ரஜினிகாந்த் நடித்த "A" சான்றிதழ் படங்கள் வசூல் எப்படி இருந்துச்சு?
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள 'கூலி' திரைப்படம் சென்சாரில் 'A; சான்றிதழ் பெற்றுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான் 'ஏ' சான்றிதழ் பெற்ற படம் எது தெரியுமா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 'கூலி' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

கூலி
கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. 100க்கும் அதிகமான நாடுகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அதன் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
இந்த நிலையில், 'கூலி' படத்தின் சென்சார் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதற்கு முக்கிய காரணம் இதில் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளதாம்.
ஏ சான்றிதழ்
ரஜினிகாந்த் படத்தை குழந்தைகளுடன், குடும்பமாக விசில் அடித்து ரசித்து பார்ப்பது பல ஆண்டுகால வழக்கம். ஏ சான்றிதழ் என்பதால் குழந்தைகளுடன் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. இது படத்தின் வசூலை பாதிக்குமா என்ற பயம் ரஜினி ரசிகர்கள் பலருக்கும், படக்குழுவுக்கும் ஏற்பட்டுள்ளது. படத்தில் வன்முறை அதிகமா ஏன் 'ஏ' சான்றிதழ் என்று கேள்விகள் எழுந்துள்ளது.
எனினும், ரஜினிகாந்த் நடித்து 'ஏ' சான்றிதழுடன் வெளியான படங்களும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களாகி உள்ளன. ரஜினிகாந்த் நடித்து கடைசியாக ஏ சான்றிதழ் பெற்ற படம் என்றால் அது கடந்த 1989 ஆம் ஆண்டு வெளிவந்த 'சிவா' தான். அப்படத்திற்கு பின் அவர் நடித்த எந்த படமும் ஏ சான்றிதழ் பெற்றதில்லை. தற்போது 36 ஆண்டுகளுக்கு பின்னர் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. ரஜினி நடித்து 'ஏ’ சான்று பெற்ற 5 படங்களைப் பார்க்கலாம்.
'நான் சிகப்பு மனிதன்' (1985)
ஆக்ஷன் த்ரில்லராக உருவான படத்தில் ரஜினிகாந்த் ராபின்ஹூட் வேடத்தில் நடித்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இப்படம், ராஜ் பப்பர் நடித்த ஆப் கி ஆவாஸ் (1984) என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். நான் சிகப்பு மனிதன் ஒரு வன்முறை நிறைந்த படமாக இருந்தது. இப்படம் வசூலிலிலும் பெரிய வெற்றியைப் பெற்றது.
'நான் மகான் அல்ல' (1984)
1978 ஆம் ஆண்டு வெளியான சத்ருகன் சின்ஹா திரைப்படமான விஸ்வநாத் படத்தின் ரீமேக்கான இந்த தமிழ் படத்தை எஸ்.பி. முத்துராமன் இயக்கினார். ரஜினிகாந்த் விஸ்வநாத் என்ற வழக்கறிஞராக நடித்தார். வணிக ரீதியாக வெற்றி பெற்ற இந்தப் படம், ரஜினியின் அட்டகாசமான நடிப்புடன் அதிரடி நிறைந்த பழிவாங்கும் கதையாக வெளியானது. இந்தப் படத்திற்கு முதலில், 'நான் காந்தி அல்ல' என்று டைட்டில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெற்றிக்கண்' (1981)
எஸ்.பி. முத்துராமன் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்தார். விசு இந்தப் படத்திற்கு கதை மற்றும் வசனம் எழுதினார். கே. பாலசந்தர் நெற்றிக்கண் படத்திற்கு திரைக்கதை எழுதினார். சக்ரவர்த்தி என்ற நடுத்தர வயது பெண் வெறியராக நெகட்டிவ் கேரக்டரிலும் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
'புதுக்கவிதை' (1982)
டாக்டர் ராஜ்குமார் நடித்த கன்னட பிளாக்பஸ்டர் படமான நா நின்னா மரேயலரே (1982) படத்தின் ரீமேக்கான இந்தப் படம், ரஜினிகாந்தின் வெற்றிப் பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமனால் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஒரு மோட்டார் சைக்கிள் சாம்பியனாக நடித்திருந்தார்.
'சிவா' (1989)
இந்த அதிரடி திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ரகுவரன் நடித்திருந்தார். அமீர்ராஜன் இயக்கிய இந்தப் படம், 1977 ஆம் ஆண்டு வெளியான கூன் பசினா என்ற இந்தி படத்தின் ரீமேக். இந்தப் படம் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications