இவர் யார் தெரியுமா? ஆர்த்திக்காக இவர் காலில் விழுந்தேன்.. எனக்கு முன்னாள் இவர்தான்! ரவி மோகன் உருக்கம்
சென்னை: நடிகர் ரவி மோகனின் குடும்ப வாழ்க்கை தொடர்பான சர்ச்சை கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வருகிறது. மனைவி ஆர்த்தி ரவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாடகி கெனிஷாவுடன் அவரின் நட்பு தொடர்பு இந்த விவகாரத்தை இன்னும் பெரிதாக்கியது. இதுவரை பெரும்பாலும் அமைதியாக இருந்த ரவி மோகன், தற்போது செய்தியாளர்களை சந்தித்து தனது மனதில் இருந்த வேதனைகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார். அந்த பேட்டியில் அவர் கூறிய தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவி மோகன் பேட்டி
பேட்டியின் போது மிகவும் எமோஷனலான ரவி மோகன், தனது திருமண வாழ்க்கையை காப்பாற்ற எவ்வளவு தாழ்ந்து சென்றேன் என்பதை யாருக்கும் தெரியாது என்று கூறினார். "என்னுடைய முன்னாள் மனைவியின் குடும்பத்தின் மரியாதை காக்க வேண்டும் என்று நினைத்து நான் ஒரு மனிதரின் காலில் விழுந்தேன்.
அந்த வீட்டில் ஏற்கனவே ஐந்து விவாகரத்துகள் நடந்திருக்கிறது. இனிமேலும் இன்னொரு விவாகரத்து நடந்துவிடக்கூடாது என்று நினைத்துதான் நான் அந்த அளவுக்கு இறங்கி போனேன்," என்று கண்ணீருடன் கூறினார்.
யார் இந்த நபர்
இதற்கிடையில் அவர் திடீரென, "ஒரு நிமிடம்" என்று கூறிவிட்டு அங்கிருந்த ஒருவரை மேடைக்கு அழைத்து வந்தார். இதனால் செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக குழப்பம் ஏற்பட்டது. அந்த நபர் யார்? ஆர்த்தி ரவியின் உறவினரா? முன்னாள் காதலரா? குடும்ப நண்பரா? என்ற கேள்விகள் எழுந்தன.
ஆனால் அதற்கு தெளிவான விளக்கம் அளிக்காமல், "நான் எப்படி அந்த குடும்பத்தில் கஷ்டப்பட்டேனோ, அதேபோல் கஷ்டங்களை அனுபவித்தவர் இவரும். ஆனால் அவர் அந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்துவிட்டார். நான் மட்டும் மாட்டிக்கொண்டேன். என் முன்னாள்...க்காக இவருடைய காலில் விழுந்தேன்," என்று கூறினார்.
காலில் விழுந்த ரவி மோகன்
அப்போது அந்த நபரும் ரவி மோகன் கூறியவற்றை மறுக்காமல், "அவர் சொல்வது உண்மை" என்பதுபோல் தலையசைத்துக் கொண்டிருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
தொடர்ந்து தனது மன வேதனையை வெளிப்படுத்திய ரவி மோகன், "நான் ஒரு செலிபிரிட்டி என்பதற்காக எனக்கு கஷ்டமே இருக்கக்கூடாது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நானும் ஒரு சாதாரண மனிதன் தான். எனக்கும் வலி இருக்கும். எனக்கும் உணர்வுகள் இருக்கின்றன. சினிமாவில் நடிக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் எப்போதும் நடிக்க முடியாது. இதுவரை அமைதியாக இருந்தது தான் என்னுடைய மிகப்பெரிய தவறு. அதனால்தான் எல்லோரும் என்னை வைத்து கேம் விளையாடினார்கள்," என்று தெரிவித்தார்.
மேலும் தனது தொழில் வாழ்க்கை குறித்தும் பேசினார். "எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை. இந்த மனநிலையுடன் என்னால் முழுமையாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. சிலர் திட்டமிட்டு என்னுடைய வாழ்க்கையை சிதைக்க முயற்சி செய்கிறார்கள்," என்று கூறினார்.

கண்ணீர்விட்ட ரவி மோகன்
கெனிஷா தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கும் அவர் நேரடியாக பதில் அளித்தார். "என்னை சரியாக புரிந்து கொண்டவர் அவர். நான் ஏன் அந்த திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வர நினைத்தேன் என்பதை புரிந்து கொண்டு மனிதநேயத்துடன் நடந்துகொண்டார். ஆனால் அந்த உறவையே கேவலமாக பேசி அவரை சென்னையை விட்டு வெளியேறச் செய்துவிட்டார்கள். சாதுவாக இருந்த என்னை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள்," என்று ஆதங்கத்துடன் கூறினார்.
தனது மீது எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் எமோஷனலாக பேசினார். "எனக்கு 45 வயதாகிறது. நான் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. இந்த வயதில் ஒரு பெண்ணின் அழகைப் பார்த்து பின்னால் போகும் மனிதனா நான்? அப்படி இருந்தால் சினிமாவில் அழகான நடிகைகளுடன் தினமும் வேலை செய்கிறேன். அப்போதெல்லாம் போகாதவன் இப்போது போவேனா?" என்று கேள்வி எழுப்பினார்.
குழந்தைகள் பற்றி உருக்கம்
இதையடுத்து தனது குழந்தைகள் குறித்து பேசும்போது ரவி மோகன் முற்றிலும் உடைந்து போனார். "என்னுடைய பசங்களைக் கூட பார்க்க முடியவில்லை. போனில் பேச விடுவதில்லை. ஸ்கூலுக்கு போய் பார்க்க முயற்சித்தாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தடுக்கிறார்கள். என் உலகமே என் பசங்கதான். என் சின்ன பையனுடன் தினமும் விளையாடுவேன். என் இரண்டு குழந்தைகளுக்காக 50 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டி படிக்க வைக்கிறேன். இதையெல்லாம் பாசம் இல்லாமல் செய்வேனா?" என்று கண்ணீருடன் பேசினார்.
அதேபோல் மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவலாக, குழந்தைகளை பார்க்க முடியாத வேதனையில் தற்கொலை முயற்சிக்கும் அளவுக்கு மன அழுத்தத்தில் சென்றதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் பரவி வருகின்றன. தனது கையில் வெட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற அளவுக்கு மன வேதனை இருந்ததாக அவர் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை இப்போது சொல்ல காரணம் எனக்கு வேறு வழியில்லை. நான் எவ்வளவு தாங்க முடியும்? எல்லோரும் என்னை வலிமையானவன் என்று நினைக்கிறார்கள். ஆனால் நானும் உடைந்து போகும் மனிதன் தான்," என்று கண்கலங்கியபடி ரவி மோகன் கூறிய இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி வருகிறது.













Click it and Unblock the Notifications