Robo Shankar: ரோபோ சங்கர் இறப்பதற்கு முன்பு நடந்த சம்பவம்! இதை அவர் பண்ணியிருக்க கூடாது! வருத்தப்பட்ட பிரபலம்
சென்னை: சினிமா விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான சுபிர், நேற்று காலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் கடைசி நாட்களைப் பற்றியும், அவரது மறைவின் பின்னணி குறித்தும் பேசிய கருத்துகள், திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ரோபோ சங்கரின் இழப்புக்கு மது பழக்கமும், சுய கட்டுப்பாடின்மையும்தான் முக்கியக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலைஞனின் கடினமான பயணம்
மதுரை கோயில் திருவிழாக்களில், உடலெங்கும் பெயிண்ட் அடித்துக்கொண்டு, ரோபோ மாதிரி நடனமாடியதன் மூலம் ரோபோ சங்கர் என்று அழைக்கப்பட்டார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்த அவர், முதலில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தார். கிடைத்த வேலைகளில் எல்லாம் முழு கவனம் செலுத்தி, வாய்ப்புகளுக்காக அலைந்து கொண்டிருந்தார். அதன் பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சுட்டி அரவிந்த் உடன் இணைந்து நகைச்சுவை சரவெடியை நிகழ்த்திப் பிரபலமானார்.
மீண்டும் தொடங்கிய பழைய கதை
சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கருக்கு, கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார். "அவர் பிழைத்ததே பெரிது" என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது வாய் குழறியதைக் கண்டு, மீண்டும் தனது குடிப்பழக்கத்தைத் தொடங்கிவிட்டாரோ என்று சுபிர் சந்தேகித்துள்ளார்.
சுபீர் மேலும் பேசுகையில், "பல மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டாலும், ரோபோ சங்கரின் நிறுத்த முடியாத குடிப்பழக்கம் அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். தனது குடிப்பழக்கத்திற்கு எதிராக அவரே ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தாலும், அதிலிருந்து அவரால் மீண்டு வர முடியவில்லை என்றும் சுபிர் கூறியுள்ளார்.
துன்பத்தை யாராலும் தடுக்க முடியாது
சுருளிராஜன் காலம் முதல் ரோபோ சங்கர் வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதைச் சுட்டிக்காட்டிய சுபிர், "ஒரு மனிதன் தனது கட்டுப்பாட்டை மீறி, தான் வாழும் வாழ்க்கை அவனுக்கு வரும் துன்பத்தை யாராலும் தடுக்க முடியாது" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஆனால் சுபீர் பேசிய தகவலுக்கு அவருடைய நண்பர்களும் ரசிகர்கள் சிலரும் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்
அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
உடல் உறுப்புகள் செயலிழந்து நேற்று இரவு உயிரிழந்த ரோபோ சங்கரின் மறைவு, திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் விஜய் ஆண்டனி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவிற்கு ஆறுதல் கூறினார். அதுபோல ரோபோ சங்கரின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, சிவகார்த்திகேயனைக் கண்டதும் கதறி அழுத காட்சி பலரையும் நெகிழ வைத்தது. அதுமட்டுமல்லாமல் ரோபோ சங்கரின் ஆஸ்தானு குருவான கமல்ஹாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்.
பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, "ரோபோ சங்கர் ஏறிய முதல் மேடையிலிருந்து நான் அவருடன் இருந்திருக்கிறேன். ஆனால், மனம் சொன்னதை மட்டுமே கேட்டு செயல்பட்டார்" என்று வருத்தத்துடன் கூறினார். ரோபோ சங்கரின் அண்ணன் சிவகாசி சிவா கண்ணீருடன் பேசும்போது, "அவன் தான் மீண்டும் பிறந்து வந்து அவனுடைய இடத்தைப் நிரப்பணும்" என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்.
நடிகர் இளவரசு, "மேடை நிகழ்ச்சிகளுக்காக உடம்பில் சில்வர் பெயிண்ட் அடித்து, அதை மண்ணெண்ணெய் வைத்துத் துடைத்ததே அவரது கல்லீரல் பாதிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம்" என்று ஒரு அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துள்ளார். ரோபோ சங்கர் மறைந்த செய்தியை கேட்டு அவருடைய காமெடி மற்றும் அவருடைய நடிப்பை மிஸ் பண்ணுவதாக பல ரசிகர்கள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications