Robo Shankar: சங்கர் எப்படி "ரோபோ” சங்கர் ஆனார்னு தெரியுமா? விஜய் டிவிக்கு முன்பே கிடைத்த பட்டம்!
சென்னை: (How Shankar Became Robo Shankar ) கிராமத்து மேடைகளில் ரோபோ நடனங்கள் ஆடி, அதையே தனது அடையாளமாக மாற்றிக்கொண்ட ரோபோ சங்கர், இன்று நம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்திவிட்டுச் சென்றுள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், ஒரு எளிய மனிதராகவே வாழ்ந்த ரோபோ சங்கரின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்த ஒரு கதை. அவர் எப்படி ரோபோ சங்கர் என்ற பெயருடன் பிரபலமானார் என்பது குறித்து ஒரு சுவாரசியமான பார்வை.

சின்னத்திரையின் அசாத்திய கலைஞன்
(Robo Shankar biography) மதுரையில் பிறந்த சங்கர், தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் பாடி லாங்குவேஜ் திறமைகளால் விஜய் டிவியில் நடைபெற்ற கலக்கப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் புகழ் பெற்றார். அந்த நிகழ்ச்சிகளில் அவர் ரோபோ கெட்டப் போட்டுச் செய்த காமெடிகள், பார்வையாளர்களிடையே அவருக்குப் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தன. அந்த ரோபோ கெட்டப்பே அவருக்கு ரோபோ சங்கர் என்ற பட்டம் கிடைத்ததாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே அவருடைய சொந்த ஊரான மதுரையில் அவர் பல நிகழ்ச்சிகளிலும் ரோபோ போல வேடம் அணிந்து நிகழ்ச்சிகளில் அசத்தி இருக்கிறார். அப்போதுதான் அவருக்கு ரோபோ சங்கர் என்ற பெயர் கிடைத்திருக்கிறது. அதன் மூலமாகத்தான் அவர் விஜய் டிவி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருந்தாராம்.
சினிமாவில் ஒரு திருப்புமுனை
சின்னத்திரையில் பெற்ற புகழ், ரோபோ சங்கருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. தனுஷின் மாரி திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அவர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். மாரி திரைப்படம் அவரை தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக உயர்த்தியது. அதன்பிறகு, அவருக்குப் பல பட வாய்ப்புகள் குவிந்தன. அம்பி என்ற திரைப்படத்தில் அவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

உடல்நலப் போராட்டமும், எதிர்பாராத முடிவும்
ரோபோ சங்கரின் வாழ்க்கை வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருந்த நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அவரது உடல்நலம் மோசமானது. அவர் உடல் மெலிந்து காணப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.
நோயிலிருந்து மீண்டு வந்த ரோபோ சங்கர், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். ஆனால், சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்தார். அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழந்து, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் மறைவு, பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரிப்பை மட்டுமே கொடுத்த ஒரு கலைஞன், தனது வாழ்க்கையின் இறுதி நாட்களில் வலிகளால் அவதியுற்றது, அவரது ரசிகர்களையும் குடும்பத்தினரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications