சரிகமபவில் “வெட்டிவேரு வாசம்” பாடலை பாடிய சிறுமி.. விஜய் ஆண்டனி கொடுத்த இன்ப அதிர்ச்சி! பெரிய மனசு தான்!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சரி கம பா ஜூனியர்' சீசன் 5 (SaReGaMaPa Junior Season 5) நிகழ்ச்சி, குழந்தைகளின் இசை திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முக்கிய மேடையாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த வார எபிசோடில் ரசிகர்கள் எதிர்பாராத ஒரு இனிமையான தருணம் நிகழ்ந்துள்ளது.
இந்த வாரம் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony) கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இந்த வார ரவுண்டில், டவுன் பஸ் ஸ்டைலில் 800ஸ் மற்றும் 90ஸ் காலக்கட்டத்தில் வெளியான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இனிமையான பாடல்களை பாடும் சவால் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. அந்த ரவுண்டில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளும் தங்களின் பாடல் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

அபிஷாவின் பாட்டு
அந்த வரிசையில் அபிஷா என்ற சிறுமி, "வெட்டிவேரு வாசம்" என்ற பாடலை பாடி மேடையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். அந்த பாடலின் மெலோடி மற்றும் உணர்ச்சியை மிக நேர்த்தியாக வெளிப்படுத்திய அபிஷாவின் குரல், அங்கு இருந்த நடுவர்களை மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் மெய்மறக்க செய்தது. பாடல் முடிந்ததும், நடுவர்கள் அனைவரும் அபிஷாவின் குரல் வளம் மற்றும் பாடல் தேர்வை மனமார பாராட்டினர்.
விஜய் ஆண்டனியின் பெருந்தன்மை
அப்போது பேசிய விஜய் ஆண்டனி, "இந்தக் குழந்தையின் பாடலைக் கேட்டவுடன் நான் மெய்மறந்து போனேன். இவருடைய திறமையை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவருக்கு என்னால் முடிந்த உதவிகளை நான் கண்டிப்பாக செய்வேன். குறிப்பாக, என் அடுத்த பாடலில் இவருக்கு பாட வாய்ப்பு கொடுக்க விரும்புகிறேன்" என்று கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்க பலரும் நீண்ட காலமாக முயன்று வரும் நிலையில், அபிஷாவுக்கு இந்த வாய்ப்பு நேரடியாக அவரது திறமையின் மூலம் கிடைத்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் அபிஷாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், ஒரு சிறுமியின் திறமையை உடனடியாக கவனித்து, அதற்கான சரியான அங்கீகாரத்தை வழங்கிய விஜய் ஆண்டனிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திறமைக்கு கிடைத்த வாய்ப்பு
இந்த சம்பவம், சிறுவயதிலேயே குழந்தைகளின் திறமையை ஊக்குவித்து வழிநடத்தினால், அவர்களுக்கு பெரிய வாய்ப்புகள் தானாகவே வந்து சேரும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது. 'சரி கம பா ஜூனியர்' மேடையில் நிகழ்ந்த இந்த இனிய தருணம், இசை ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நினைவில் நிற்கும் ஒரு சம்பவமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications
