பெண்களுக்காக இதை செய்யணும்! அந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வேண்டும்! சிவகார்த்திகேயன் உருக்கம்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மதராஸி' மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' ஆகிய படங்களின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்த நிலையில், ஒரு நேர்காணலில் தனது திரைப்பயணம், குடும்பம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் மனம் திறந்து பேசியுள்ளார்.

ரொம்ப ஜாலியான அப்பா
சிவகார்த்திகேயன் தனது குழந்தைகள் குறித்துப் பேசியபோது, "எனக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். குழந்தைகளைக் கொஞ்சுவது மட்டும்தான் என் வேலை. அவர்களைப் முழுப் பொறுப்போடு பார்த்துக் கொள்வது என் மனைவிதான். நான் ரொம்ப கண்டிப்பான அப்பா கிடையாது. முதலில் என் குழந்தைகள் என்னைப் பார்த்துக் கொஞ்சம் பயந்தார்கள். அப்புறம் 'இவன் எதுவும் பண்ண மாட்டான்'னு அவர்களுக்கே புரிந்துவிட்டது. நான் ரொம்ப ஜாலியான அப்பாதான்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பெண்களைப் பொறுப்புடன் காட்சிப்படுத்தணும்
பெண்களைப் பற்றிப் பேசிய சிவகார்த்திகேயன், "ஆரம்பத்தில் பெண்களைக் கம்பீரமாக, மரியாதையாகக் காட்ட வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் எனக்குக் கிடையாது. நானும் அதைப்பற்றி எல்லாம் யோசிச்சதில்லை," என்று குறிப்பிட்டார். "நாம் செய்த தவறுகளை உணர்ந்து, திருத்திக்கொள்வது, புரிந்து கொள்வது, படித்துத் தெரிந்துகொள்வது எனப் படிப்படியாகத்தான் மாறினேன். 'கனா' திரைப்படத்தில்தான் அந்த எண்ணம் மாறியது. படம் பார்த்தவர்கள் பெண்ணின் கதையை, கனவை, வாழ்வைச் சொன்னதற்காகப் பாராட்டினார்கள். அதிலிருந்து பெண்களைப் பொறுப்புடன் காட்சிப்படுத்த வேண்டும் எனப் பின்பற்றத் தொடங்கிவிட்டேன்," என்று தெரிவித்தார்.
மாவீரன் 2-வில் நடிக்கும் ஆசை
"என்னுடைய படங்களில் இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்றால் 'மாவீரன்' படத்தின் அடுத்த பாகத்தில் நடிப்பதற்கு ஆசை. ரொம்பவே தனித்துவமானது அந்தக் கதை. இதனால் 'மாவீரன் 2' படத்துக்கு முயற்சி செய்யலாம்," என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.
'மாவீரன்' படத்தின் வெற்றி: மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'மாவீரன்' திரைப்படம், சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் அவருக்கு கிடைத்த அசரீரி குரலுக்கு, நடிகர் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்திருந்தார். அது படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 'மாவீரன்' வெற்றிக்குப் பிறகு, மடோன் அஸ்வின், சியான் விக்ரமை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
சிவகார்த்திகேயனின் அடுத்த படங்கள்
மதராஸி: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மதராஸி' படம், விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் வித்யுத் ஜம்வால், ருக்மணி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதை 'கஜினி' போலவும், சண்டைக் காட்சிகள் 'துப்பாக்கி' போலவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பராசக்தி: சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படம், இந்தி திணிப்புக்கு எதிரான ஒரு படைப்பாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
