தாய் கிழவி பட நடிகை பட்ட கஷ்டம்.. காதல் தொல்லையால்.. 16 வெட்டு, குடல் வெளியே வந்து துடிதுடித்த சம்பவம்
சென்னை: சினிமாவில் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை ரேச்சல் ரெபேக்கா, சமீபத்தில் "தாய்க்கிழவி" திரைப்படத்தின் மூலம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். ஆனால், அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

உயிர் பிழைக்க போராடிய தருணம்
அந்த பேட்டியில் ரேச்சல் பகிர்ந்த அனுபவம் உண்மையிலேயே மனதை பதற வைக்கும் வகையில் உள்ளது. அதில் ஒரு தலை காதலால் அவர் பட்ட அவஸ்தை குறித்து பேசி இருக்கிறார். அதில் "நான் 2008-ல் கல்லூரி முதல் வருடம் படிச்சுக்கிட்டு இருந்தேன்... சின்ன வயசுல இருந்தே எனக்கு டாக்டர் ஆகணும் என்பதுதான் கனவு. அதுக்காகவே நல்லா படிச்சுட்டு இருந்தேன். அப்போ தான் ஒருத்தன் என்னை காதல்னு சொல்லிட்டு பின்தொடர ஆரம்பிச்சான். எனக்கு அப்போ காதல் மேல எந்த விதமான விருப்பமும் இல்ல... நான் என் படிப்புல தான் கவனம் வச்சிருந்தேன்.
ஒரு நாள் நான் வீட்டுல தனியா இருந்தேன்... காலிங் பெல் அடிச்சது. நான் அப்போ ஹெட்போன்ல பாட்டு கேட்டுக்கிட்டு இருந்தேன். போய் கதவு திறந்தேன்... வெளியே அவன்தான் நின்றிருந்தான். உடனே என் கையில இருந்த போனை பிடுங்கிக்கிட்டு, 'இது வேணும்னா நான் சொல்ற இடத்துக்கு வா'ன்னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டான்.
அந்த நேரத்துல நான் ரொம்ப உடைந்து போயிட்டேன்... அந்த போன் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்... சித்தப்பா வாங்கி குடுத்தது. இதை எப்படி சமாளிப்பது, அவன் தொந்தரவை எப்படி நிறுத்துவது எனக்கு புரியல. அந்த அளவுக்கு மனசு உடைந்து போய்... ஒரு நேரமாக நான் தற்கொலை பண்ணிக்கலாம்னு கூட நெனச்சிட்டு இருந்தேன்.
தவறான எண்ணம்
எங்க வீட்டுல நான் தான் ஹேர் ஆயில் மாதிரி சில விஷயங்கள் ரெடி பண்ணுவேன். அதுக்காக குன்றிமணி விதை வாங்கி வைச்சிருந்தேன். அது விஷம் என எனக்கு தெரியும்... அதையே பொடி பண்ணி சாப்பிட்டுட்டு முடிச்சுடலாம்னு முடிவு பண்ணேன்.
ஆனா அதை சாப்பிடறதுக்கு முன்னாடி சாமி கும்பிடலாம்னு நினைச்சேன்... அப்போ அங்க இருந்த கண்ணாடியில என் முகத்த பார்த்தேன்... நான் அழுதுட்டு இருந்தேன். அப்போ எனக்கே ஒரு கேள்வி வந்துச்சு - 'நாம என்ன தப்பு பண்ணோம்? எதுக்காக நாம சாகணும்?' அப்படின்னு. அந்த ஒரு நொடியிலேயே நான் முடிவு எடுத்தேன்... இனிமேல் இந்த மாதிரி எண்ணமே வரக்கூடாது'ன்னு. உடனே அந்த பொடியை தூக்கி போட்டுட்டேன்.

அப்பா கொடுத்த தைரியம்
அந்த நேரத்துல என் அப்பா வீட்டுக்கு வந்தார்... நடந்ததை எல்லாம் சொன்னேன். அவர் என்னை தைரியம் சொல்லி 'நீ ஏன் பயப்படுற? அவன் வீட்டுக்குள்ள வந்தா அவனையே உள்ளே தள்ளிட்டு நீ வெளியே லாக் பண்ணிருக்கலாம்'ன்னு பேசினார். அது எனக்கு கொஞ்சம் தைரியம் கொடுத்தது.
அதுக்கப்புறம் கொஞ்ச நேரத்துல அப்பா வெளியே போயிட்டார்... நான், அம்மா மட்டும் வீட்டுல இருந்தோம். மீண்டும் காலிங் பெல் அடிச்சது... இந்த முறை கதவு திறந்ததும் அவனே மீண்டும் வந்திருந்தான். அம்மா அவனை திட்டினாங்க... ஆனா அவன் கேட்காம வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டான்.
அவன் கையில இருந்தது ஒரு துருப்பிடிச்ச கத்தி... அதைக் கொண்டு என்னையும் அம்மாவையும் வெட்ட ஆரம்பிச்சான். எனக்கு மட்டும் 16 இடங்களில் வெட்டுப்பட்டது... அது ஒரு நொடி கூட இல்ல... என்ன நடக்குதுனு எனக்கே புரியல.
வலி வேதனை
ஒரு குத்து என் வயிற்றுல விழுந்தப்போ எனக்கு உள்ளே ஏதோ பெரிய விஷயம் நடந்துடுச்சுன்னு தெரிஞ்சுச்சு... நான் கையை வயிற்றுல வைத்து பார்த்தேன்... உள்ளே குடல் வெட்டுப்பட்டது எனக்கு புரிஞ்சுச்சு. நான் காலையில் சாப்பிட்ட தோசை கூட வெளியே வந்தது...
அந்த நேரத்துல கூட நான் கத்தின சத்தத்துக்கே அவன் அங்கிருந்து ஓடிப்போயிட்டான். அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னா... என் அம்மா பக்கத்து வீட்டுக்காரங்களை கூப்பிட்டு என்னை மருத்துவமனைக்கு கொண்டு போனாங்க. அப்போவும் நான் ஒரே ஒரு விஷயத்த தான் சொல்லிக்கிட்டே இருந்தேன் - 'நான் வாழணும்... என்னை காப்பாத்துங்க...'
முதல்ல கொண்டு போன ஹாஸ்பிடல்ல 'இது ரொம்ப ஆழமான காயம்... முடியாது'ன்னு சொல்லிட்டு வேற ஹாஸ்பிடலுக்கு அனுப்பிட்டாங்க. அப்போ என் உடம்புல இருந்து ரொம்ப ரத்தம் வெளியேறி இருந்தது... ஆனா அந்த நேரத்துல என் அப்பா பல பேருக்கு செய்த உதவியால பலர் வந்து எனக்கு ரத்தம் கொடுத்தாங்க. அந்த ரத்தம் தான் என்னை காப்பாத்தியது.
வைராக்கியம்
பல நாள்களுக்கு அப்புறம் தான் நான் கண் திறந்தேன்... அப்போ தான் எனக்கு புரிஞ்சது - நான் உயிரோட இருக்கேன் என்பதே ஒரு அதிசயம். அதுக்கப்புறம் நான் ஒரு முடிவு எடுத்தேன்... 'நான் மட்டும் வாழ்றதுக்கு இல்லை... என்னுள் ஓடுற இந்த ரத்தத்துக்கு நியாயம் செய்யணும்... நான் சாதிக்கணும்... இன்னும் பல பேருக்கு உதவணும்'ன்னு.
இப்போ நான் உயிரோட இருக்குறதுக்கு காரணம் அந்த மனிதர்கள்... அந்த அன்பு... அந்த ரத்தம். அதனால தான் நான் இப்போ இவ்வளவு உறுதியா நிற்கிறேன்."
சினிமாவில் வெற்றி
இப்போது ரேச்சல் ரெபேக்கா, தன்னுடைய ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார். அவரது நடிப்பை பாராட்டும் ரசிகர்கள், இந்த பின்னணியை தெரிந்து கொண்ட பிறகு அவரை இன்னும் அதிகமாக மதித்து வருகின்றனர்.














Click it and Unblock the Notifications