தனிமை எவ்வளவு கொடுமை? பிஞ்சு குழந்தை சொன்ன ஒரு வார்த்தை குடும்பத்தையே காப்பாற்றியது! பலருக்கு பாடம்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய எபிசோடின் ப்ரோமோ வெளியாகி, பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் வகையில் வைரலாகி வருகிறது. "மீளாத துயரால் தற்கொலைக்கும் முயன்றவர்கள்... அதிலிருந்து மீண்டவர்கள்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விவாதம், வாழ்க்கையின் மிக இருண்ட தருணங்களையும், அதிலிருந்து வெளிச்சத்திற்கான பயணத்தையும் உருக்கமாக வெளிப்படுத்துகிறது.

தமிழா தமிழா ப்ரோமோ
ப்ரோமோவில் பலரும் தங்களின் கடந்தகால வேதனைகளை கண்ணீருடன் பகிர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர், "கடனால் என் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் என்னுடன் யாரும் இல்லை. அதனால் நான் கத்தியை எடுத்து என் வயிற்றில் குத்திக்கொண்டேன். அந்த தருணம் நினைத்தாலே இன்னும் நடுங்குகிறது" என்று கூறுகிறார்.
தனிமை கொடுமை
மற்றொருவர் பகிர்ந்த அனுபவம் அதைவிட அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. "தனக்கென யாருமே இல்லை என்ற தனிமையால் தற்கொலை முயற்சிக்குப் பிறகு, நான் போஸ்ட்மார்டம் அறையில் கிடந்தேன். கண் திறந்த போது, என் கையில் இருந்த செல்போனின் லைட்டை அடித்து பார்த்தேன். ஒரு பக்கம் நான்கு உடல்கள், இன்னொரு பக்கம் நான்கு உடல்கள்... அவற்றின் நடுவே நான் இருந்தேன். அந்த நொடியில் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று புரிந்தது" என்று அவர் கண்ணீருடன் கூறுகிறார்.
குழந்தை சொன்ன வார்த்தை
ஆனால், இந்த நிகழ்ச்சியில் அதிகம் மனதை தொடும் கதை ஒரு தாயின் அனுபவமாகும். கணவர் விட்டு சென்ற பிறகு, இரண்டு குழந்தைகளுடன் கடும் கஷ்டத்தில் இருந்த அவர், ஒருநாள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அந்த வேளையில், தனது முதல் குழந்தையிடம் "நாம் இந்த உலகத்தில்வாழ முடியவில்லை... சாமியிடம் போய்விடலாமா?" என்று கேட்க, அந்த சின்ன குழந்தை, "சரி அம்மா... ஆனா தம்பியை மட்டும் பாட்டி வீட்டில் விட்டு போகலாம்... அவனால இந்த கஷ்டத்தை தாங்க முடியாது" என்று சொல்லிச்சாம்.
அந்த ஒரு வார்த்தை தான் அந்த தாயின் வாழ்க்கையை முழுவதும் மாற்றியுள்ளது. "நம்மை விட்டு சென்றவர் சந்தோஷமாக இருக்கிறார்... ஆனால் அவருக்காக நான் என் குழந்தைகளின் வாழ்க்கையை முடிக்க கூடாது" என்று முடிவு செய்த அவர், அதே நாளில் இருந்து வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு உறுதி எடுத்ததாக கூறுகிறார். இன்று எத்தனை சோதனைகள் வந்தாலும் தைரியமாக அதை சமாளித்து வருகிறேன் என்று பெருமையாக தெரிவித்துள்ளார்.
தமிழா தமிழா எபிசோடு
இந்த ப்ரோமோ, வாழ்க்கையில் எந்த அளவுக்கு பிரச்சனைகள் வந்தாலும் அதற்கான தீர்வு இருக்கிறது என்பதையும், ஒரு நொடியில் எடுக்கப்படும் தவறான முடிவு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்த்துகிறது.
"பிரச்சனை வந்துவிட்டது என்று அதைத் தவிர்க்காமல், அதனை எதிர்கொண்டு மீண்டு வர வேண்டும்" என்ற வலியுறுத்தலுடன், இந்த நிகழ்ச்சி பலருக்கும் ஒரு விழிப்புணர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது இப்படியான தற்கொலை எண்ணங்கள் வந்தால், தயங்காமல் அருகிலுள்ளவர்களிடம் பேசுங்கள். உதவி கேட்பது பலவீனம் அல்ல - அது ஒரு தைரியம்.












Click it and Unblock the Notifications