Thandakaranyam Box Office: பா. ரஞ்சித்தின் தண்டகாரண்யம் - முதல் நாள் வசூல் ஏமாற்றம்! மொத்தமே இவ்வளவுதானாம்!
சென்னை: இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில், அதியன் ஆதிரை இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் ஆகியோர் நடிப்பில் உருவான சமூகப் போராட்டத் திரைப்படமான தண்டகாரண்யம், நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியானது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்திற்கு, முதல் நாளில் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, படத்தின் வசூல் நிலவரம் சற்று ஏமாற்றம் அளித்துள்ளது.

கதைக்களம்
தண்டகாரண்யம் என்றால் தண்டனைக்குரிய காடு என்று பொருள். இந்தப் படம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கையையும், அதிகார வர்க்கத்தினர் அவர்களுக்கு இழைக்கும் அநீதிகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிக்கும், பழங்குடி இனத்தைச் சேர்ந்த தினேஷுக்கும் இடையே ஏற்படும் மோதலில், கலையரசனின் அரசு வேலை பறிபோகிறது. இதைத் தொடர்ந்து, தம்பியை எப்படியாவது அரசுப் பணியில் சேர்த்துவிட வேண்டும் என்று நினைக்கும் தினேஷ், தனது நிலத்தை விற்று, ஒரு நக்சல் எதிர்ப்புப் படையில் அவரைச் சேர்க்கிறார்.
அங்கு, நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் அரசு நடத்தும் ஊழல்கள், அதிகாரப் போராட்டங்கள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, தினேஷ் மற்றும் கலையரசன் எப்படிப் போராடுகிறார்கள் என்பதே படத்தின் கதை.
விமர்சனம்
நாட்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்ததற்காக இயக்குனர் அதியன் ஆதிரைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தினேஷ் மற்றும் கலையரசனின் யதார்த்தமான நடிப்பு படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக, தினேஷின் அழுத்தமான வசன உச்சரிப்புகள் பெரும் கவனம் பெற்றுள்ளன.
நுட்பமான கலை இயக்கம்
பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு காடுகளின் அழகையும், அதே சமயம் அதன் பயங்கரத்தையும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை குறிப்பாக, படத்தில் வரும் ஒப்பாரிப் பாடல் மனதை கனக்கச் செய்கிறது.
இதுதான் நெகட்டிவ்
படத்தின் முதல் பாதி மெதுவாகச் செல்வதாகவும், காட்சிகள் ஆங்காங்கே தேங்கி நிற்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். ஒரு சில காட்சிகள் அழுத்தமாக இருந்தாலும், மொத்தமாகப் பார்க்கும்போது, படம் ஒரு ஆவணப்படம் போல இருப்பதாக ஒரு சில ரசிகர்கள் கருதுகின்றனர். இதுவே படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைய ஒரு முக்கியக் காரணம்.
தண்டகாரண்யம் வசூல் நிலவரம்
தண்டகாரண்யம் படத்திற்கு முதல் நாளில் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. பல திரையரங்குகளில் சரியான ஷோக்கள் கூட கிடைக்காத நிலைதான் இருந்தது. இதன் காரணமாக, இந்தப் படம் முதல் நாளில் வெறும் 26 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தண்டகாரண்யம் ஒரு சமூகப் போராட்டத்தையும், அதிகார வர்க்கத்தின் கோர முகத்தையும் துணிச்சலாகப் பேசியுள்ளது. ஆனால், இதுபோன்ற ஒரு கனமான கதைக்களம், இன்றைய வணிகச் சந்தையில் மக்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்பதே உண்மை. கலை நேர்த்தியும், அழுத்தமான சமூகக் கருத்தும் நிறைந்த ஒரு படம், வணிக ரீதியாகத் தடுமாறும் அவலத்தை தண்டகாரண்யம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications