வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் அட்டகாசம் தாங்கல.. கொதித்து எழுந்த பிசியோதெரபி சங்கம்!
சென்னை: வாட்டர் மெலன் ஸ்டார் திவாகருக்கு தமிழ்நாடு பிரைமரி ஹெல்த் சென்டர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிசியோதெரபி துறை குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாட்டர் மெலன் ஸ்டார், சின்ன சிவாஜி என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டு ரீல்ஸ்போட்டு பிரபலமானவர் திவாகர். இவர் விளம்பரத்திற்காக செய்யும் சேட்டைகள் ஏராளம். சினிமாவில் பெரிய நடிகர்களை வம்புக்கு இழுக்கும் திவாகர், யூடியூபில் தனது நடிப்பை பார்த்து தான் அவர்கள் நடிக்கிறார்கள் என்றும் எல்லை மீறிப் பேசி வருகிறார்.

திவாகர் ஒரு பிசியோதெரபி மருத்துவர். ஆனா இவர் அண்மைக்காலமாக விளம்பரத்துக்காக எக்கச்சக்க சேட்டைகளைச் செய்து வருகிறார். பிசியோதெரபி மருத்துவர் என்ற பெயரில் செய்யும் அக்கப்போரால், அவருக்கு எதிராக பிஸியோதெரபி சங்கமே கொதித்து எழுந்துள்ளது.
வார்த்தைக்கு வார்த்தை தான் ஒரு பிசியோதெரபி டாக்டர் என்று சொல்லிக் கொள்ளும் திவாகருக்கு, தற்போது பிசியோதெரபிஸ்ட் டாக்டர்களே எச்சரிக்கை விடுத்துள்ளனர். யூடியூப் சேனல்களில் திவாகரின் அலப்பறையை தாங்கிக்கொள்ள முடியாத பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர். சிலர் திவாகரின் அட்டகாசத்தால் பிசியோதெரபி துறையையே விமர்சித்து வருகின்றனர்.
இதனால் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இதனிடையே, நடிகர் பயில்வான் ரங்கநாதன் பிசியோதெரபி துறையை பற்றி அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளதாகவும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், திருச்சியில் தமிழ்நாடு பிரைமரி ஹெல்த் சென்டர் பிசியோதெரபி சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், நடிப்பு அரக்கன் என்று கூறிக் கொண்டு திவாகர் செய்யும் செயல்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், தனி மனிதரை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு, பிசியோதெரபி துறை குறித்து அவதூறு கருத்துகளை பரப்புவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இனிமேலும், சமூக ஊடங்களில் பிசியோதெரபி குறித்து தவறான கருத்துகளை பதிவிட்டால் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்போம். பிசியோதெரபி படித்தவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்திய பிறகு தான், பிசியோதெரபி மருத்துவர் என்று அழைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன எனத் தெரிவித்துள்ளனர்.
வாட்டர் மெலன் ஸ்டார் எனக் கூறிக் கொண்டு யூடியூப் சேனல்களில் அலப்பறை செய்யும் திவாகருக்கும், அவரை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு பிசியோதெரபி துறையையே விமர்சிப்பவர்களுக்கும் பிசியோதெரபி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications