எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் திரிஷா..! ஹீரோ யார் தெரியுமா? வெளியான அப்டேட்
சென்னை: எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அந்தப் படத்தில் எம்ஜிஆராக நடிக்க இருக்கும் ஜெ.எம்.பஷீர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான 'பசும்பொன் தேவர்' படத்தில் நடித்திருந்த ஜெ.எம்.பஷீர், அடுத்ததாக எம்ஜிஆரின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்த படம் குறித்து பேசிய அவர், எம்ஜிஆர் மீது தனக்கு இருக்கும் பாசம், மரியாதை, படத்தின் நோக்கம், த்ரிஷாவிடம் நடந்து வரும் பேச்சுவார்த்தை எனப் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
ஜெ.எம்.பஷீர் பேட்டி
அவர் பேசுகையில், கடந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்து அந்தப் படத்தை வெளியிட்டேன். தென் தமிழகத்தில் அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு நிறைய படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள். ஆனால், நான் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய பிறந்தநாளில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில்தான் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். இப்போது படத்துக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

எம்ஜிஆரின் புகழ்
இந்த படம் உலகம் முழுவதும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் எம்ஜிஆராக நடிக்கிறேன் என்று சொன்னதும், பெரிய கல்வியாளர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள் என பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். நான் எம்ஜிஆரை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால், என்னுடைய தந்தை அவரிடம் வேலை பார்த்திருக்கிறார்.
எம்ஜிஆர் பட இயக்குனர்
எம்ஜிஆரை பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு நடிக்கக் கூடாது. அவரை முழுமையாக உள்வாங்கி நடிக்க வேண்டும் என்பதற்காக அதற்கான வேலைகளை கவனித்து வருகிறேன். இந்த படத்தை ஒரு பெரிய இயக்குநர் இயக்கப் போகிறார். அவருடைய பெயரை விரைவில் அறிவிப்போம். அவருடைய பெயரை தெரிந்தாலே நீங்க ஆச்சரியப்படுவீங்க. என்னுடைய மகளும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
அரசியல் முன்னோடி
எம்ஜிஆரை பின்பற்றித்தான் இன்றைக்கும் பலர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரை பற்றி எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். உலகம் முழுவதும் பிரபலமானவர் எம்ஜிஆர். அவருடைய வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன். இந்தப் படம் யாரையும் தாக்கும் விதமாக இருக்காது. எம்ஜிஆரின் புகழைப் பரப்பும் படமாகத்தான் இருக்கும். இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத் த்ரிஷாவிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் என்னுடைய மகளுக்கு நெருங்கிய தோழி. அதனால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். த்ரிஷா ஜெயலலிதாவாக நடித்தால் படம் வேற லெவலில் இருக்கும். என்னுடைய மகள் த்ரிஷாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார்" என்று ஜெ.எம்.பஷீர் கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவாக த்ரிஷா
த்ரிஷாவை ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பார்க்க முடியுமா? என்பதுதான் இப்போது ரசிகர்களுக்கு எழுந்திருக்கும் கேள்வி. ஜெயலலிதா என்றாலே அவருடைய தோற்றம், பேச்சு, உடல்மொழி, அரசியல் மேடைப் பேச்சு எனப் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். அதனால், இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பவர் அதை எந்த அளவுக்கு வெளிப்படுத்துகிறார் என்பதைப் பொறுத்துதான் ரசிகர்களின் வரவேற்பும் அமையும். த்ரிஷா ஏற்கெனவே பல விதமான கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால், ஜெயலலிதா போன்ற அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்த ஒருவரின் வாழ்க்கையைத் திரையில் கொண்டு வருவது வேறு மாதிரியான சவால். அதேசமயம், ஜெ.எம்.பஷீர் சொல்வதைப் போல த்ரிஷா இந்தப் படத்தில் நடித்தால் அந்தக் கூட்டணி ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால், த்ரிஷா இன்னும் இந்தப் படத்தில் நடிப்பதை உறுதி செய்யவில்லை. அவரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக மட்டுமே ஜெ.எம்.பஷீர் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகுதான் அவர் ஜெயலலிதாவாக நடிக்கிறாரா என்பது தெரியவரும்.
த்ரிஷா ஜெயலலிதாவாக நடித்தால் அந்தத் தோற்றம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக் கதாபாத்திரத்துக்கு த்ரிஷா பொருத்தமாக இருப்பாரா, அல்லது ஜெயலலிதாவின் தோற்றத்தையும் கம்பீரத்தையும் கொண்டுவர வேறு மாதிரியான நடிப்பு தேவைப்படுமா? என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் விவாதமாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications
