தவெக எம்எல்ஏக்கள் 20 பேர் அதிமுகவுக்கு வருகிறார்கள்.. செங்கோட்டையனுக்கு எடப்பாடி பதிலடி
சென்னை: அதிமுகவில் இருந்து 15 பேர் வெளியில் வரப் போகிறார்கள். இதெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா என்று தெரியவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில் இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சிரித்தபடி பதில் அளித்த எடப்பாடி, 'தவெக எம்.எல்.ஏக்கள் 20 பேர் அதிமுகவுக்கு வருகிறார்களாம்' என்றார்.
சட்டமன்ற பொதுத்தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக, சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது. தவெக வெற்றி பெற்ற நிலையில், இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக 3 ஆம் இடம் சென்றது. இத்தனைக்கும் இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே அதிமுக வசம் இருந்த தொகுதிகள் ஆகும்.

எடப்பாடி பழனிசாமி பதில்
தொடர் தோல்வியால் அதிமுகவிற்கும் உள்கட்சி பூசல் மீண்டும் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்த சில நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவை விரைவில் கூட்டுவதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இது ஒருபக்கம் இருக்க, அதிமுக தோல்வியால் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் மேலும் சிலர் தவெகவுக்கு தாவலாம் என்று கடந்த சில நாட்களாக அரசியல் விமர்சகர்களால் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த சூழலில் அதிமுகவில் இருந்து மேலும் 15 எம்.எல்.ஏக்கள் வர இருப்பதாக தவெக அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அது எல்லாம் கற்பனை.. தவெகவில் இருந்து தான் 20 பேர் வருவார்கள் என்று நான் கூட சொல்லலாம்" என்று சிரித்தபடி கூறிவிட்டு சென்றார்.
செங்கோட்டையன் பேசியது என்ன?
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுகவில் இருந்து 15 பேர் வெளியில் வரப் போகிறார்கள். இதெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா என்று தெரியவில்லை. நேற்று கூட அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். என்ன நடக்கப் போகுதுனு எனக்கு தெரியவில்லை.. நல்ல வேளையாக எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்.
தப்பித்து வந்து இங்கு வருவாய் துறை அமைச்சராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் நானும் முன்னாள் அமைச்சராக இருந்து வாயை பார்த்து கொண்டிருந்திருக்க வேண்டும். அதிலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உட்கார வைத்துவிட்டார்கள். நான் எங்கு இருக்கிறேன் பார் என்று சொல்லும் வகையில், அவருக்கு எதிராக உட்கார்ந்து இருக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் விஜய்யை போல் ஒருவரை பார்த்ததே இல்லை" என்றார்.
6 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா
அதிமுகவில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் தங்கள் பதவியை ராஜினமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். கடந்த வாரம் தாராபுரம் , மதுராந்தகம் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தவெக சார்பில் சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.




Click it and Unblock the Notifications
