ஒரே படத்தை எத்தனை தடவைதாண்டா பார்க்கிறது.. இது கொரோனாவை விட கொடுமையா இருக்கே!
ரத்தத்தில் கலந்தது சினிமா. ஆனால் அதுக்காக கண்ணு காதெல்லாம் ரத்தம் வரும் அளவுக்கு திரும்பத் திரும்ப பார்த்த படத்தையே போட்டுட்டிருந்தா எப்படிய்யா என்று மக்கள் கடுப்பாக ஆரம்பித்து விட்டனர்.
சென்னை: வீட்ல டிவிய போட்டாலே ஒரே சினிமாதான். சீரியலை ஒளிபரப்ப முடியாத சேனல்கள் எல்லாம் சினிமாவுக்கு மாறி விட்டன. பழைய சினிமாக்கள், பார்த்த சினிமாக்களை ஒளிபரப்புவதால் மக்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. சினிமாவிற்கு மட்டுமே உள்ள சேனல்களில் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து சினிமா வரைக்கும் ஒளிபரப்பாகிறது எல்லாமே பார்த்த பழைய படங்கள்தான் என்பதால் மக்களுக்கும் போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. என்னதான் செய்வது இப்படி கட்டி போட்டு விட்டதே கொரோனா வைரஸ் என்பதுதான் எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சாக இருக்கிறது. இதனால் டிவி பார்ப்பதை விட்டு விட்டு மாலை நேரங்களில் விளையாட்டுகளுக்கு மாறி வருகின்றனர்.
Recommended Video
கொரோனா லாக் டவுன் அறிவித்து ஒரு மாதம் ஆகி விட்டது. இந்த ஒரு மாத காலம் உலக மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. எந்த வேலையும் நடக்கவில்லை. பொழுது போக்கவும் வெளியே போக முடியவில்லை. ஒரே ஒரு பொழுது போக்கு டிவி மட்டும்தான். நல்லவேலையாக அதில் இப்போது அழுகை சீரியல்கள் இல்லை, காட்டு கத்தல் எதுவும் இல்லை மாறாக 20 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட் அடித்த சீரியல்களை ஒளிபரப்புகின்றன.
தூர்தர்சனில் ராமாயணமும், மகாபாரதமும், சக்திமானும் ஒளிபரப்பினாலும் சேட்டிலைட் சேனல்களிலும், யுடுயூப், ஓடிடி பிளாட்பார்களிலும் படம் பார்த்து பழகிய மக்களுக்கு அவற்றை மீண்டும் ரசிக்க முடியவில்லை.
இன்றைய தலைமுறையினர் சிலர் மட்டுமே பழைய சீரியலை ரசிக்கின்றனர். 90 கிட்ஸ்கள் இப்போது சீரியலை சீரியஸாக பார்ப்பதில்லை சீரியல் ஒளிபரப்பாக நேரங்களில் சில சேனல்களில் பழைய ரியாலிட்டி ஷோக்களை மறுஒளிபரப்பும் செய்கின்றனர். மீதி நேரங்களில் சினிமாதான். எம்ஜிஆர் காலத்து படங்களை வயதானவர்கள் ரசித்தாலும் சிறுவர் சிறுமியர்களுக்கு கார்டூன் படங்களும் கேம்ஸ்களும்தான் பொழுது போக்காக இருக்கிறது.

ராமாயணம்
1990களில் ஒரே ஒரு சேனல்தான் அதுவும் தூர்தர்சன்தான் அதில் போடும் ஒளியும் ஒலியும், சினிமாவும், ராமாயணம், மகாபாரதம்தான் ஒரே பொழுது போக்காக இருந்தது. வேலையை முடித்து மாலை நேரங்களில் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்க்க அமர்ந்து விடுவார்கள். இன்றைக்கு அப்படியில்லை தமிழ் டிவி சேனல்கள் 25க்கும் மேல் இருக்கின்றன. செய்தி சேனல்களும் பல இருக்கின்றன. 24 மணிநேரமும் எல்லா சேனல்களும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி கொண்டுதான் இருக்கின்றன.

24 மணி நேர நிகழ்ச்சிகள்
டிவி சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள், நடிகர்,நடிகையர்களைப் பற்றிய பேட்டிகள் என மாறி மாறி ஒளிபரப்புகின்றனர். செய்தி சேனல்களில் பிளாஷ் நியூஸ்களை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கிறது. இதில் வரும் விளம்பர வருமானத்தை வைத்துதான் சேனல்கள் கல்லா கட்டிக்கொண்டு இருந்தன. எல்லமே கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்புதான். இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

ஒரு நாளைக்கு 4 சினிமா
எந்த சேனல்களிலும் புது சீரியல்கள் ஒளிபரப்பாவதில்லை. எல்லாமே மறு ஒளிபரப்புதான். செய்தி சேனல்களை திருப்பினால் கொரோனா செய்திதான் அதையே பார்த்து எத்தனை நேரம்தான் பார்த்து பீதி அடைவது என்பதால் சில நேரங்களில் சினிமாதான் பொழுதுபோக்கு. காலை 9.30 மணி திரைப்படம், பிற்பகல் 3 மணி திரைப்படம், மாலை 6 மணி திரைப்படம், இரவு 9 மணி திரைப்படம் என ஒரே சினிமா மயம்தான். சேனல் ஒளிபரப்பை நிறுத்த முடியாதே எப்படியாவது ஒளிபரப்பாக வேண்டுமே என்று சினிமாவை ஒளிபரப்பத் தொடங்கிவிட்டனர்.

ஒரே காமெடியா இருக்கே
டிவியில் ஒளிபரப்பாகும் சினிமாக்களை மணி கணக்கில் உட்கார்ந்து பார்க்கவும் இப்போது யாருக்கும் பொறுமை இருப்பதில்லை என்பதுதான் உண்மை. விளம்பரம் இல்லாமல் ஒரே ஒரு இடைவெளியில் படம் போட ஆரம்பித்து விட்டதால் வேறு வழி இல்லாமல் அனைவரும் அமர்ந்து சினிமாவை பார்க்க தொடங்கிவிட்டனர். யாராவது ஒருவர் கையில் ரிமோட்டை வைத்துக்கொண்டு சேனல் மாற்றி மாற்றி சினிமா பார்ப்பது வீட்டில் உள்ள எல்லோரையும் எரிச்சலாக்கி சண்டையைதான் கொண்டு வருகிறது. அதிலும் பழைய படங்களில் சண்டை காட்சிகள், நடன காட்சிகளை பார்க்கும் போது இப்போது உள்ள இளைய தலைமுறையினருக்கு ஒரே காமெடியாகத்தான் இருக்கிறது.

போராடித்து போன சினிமா
சினிமாவோ, சீரியலோ ஒருதடவை பார்க்கத்தான் சுவாரஸ்யமாக இருக்கும். 20 சேனல்களிலும் பார்த்த படங்களையே பார்த்து பார்த்து இந்த ஒரு மாதத்தில் போரடித்து விட்டது. இனி வரும் காலங்களை எப்படி கடத்தப்போகிறோமோ என்ற யோசனையில் இருக்கின்றனர் வீட்டில் இருப்பவர்கள். இளசுகள்தான் வீட்டில் இருக்க முடியாமல் அவ்வப்போது வண்டியை எடுத்துக்கொண்டு போய் போலீசார் கொடுக்கும் தண்டனை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேருகின்றனர்.

விளையாட்டுக்கள்
பெண்களுக்கு சமையல் செய்த நேரம் போக வீட்டிற்குள் உட்கார்ந்து போரடித்து போய் விட்டதால் வீதிகளில் சமூக இடைவெளி விட்டு விளையாட ஆரம்பித்து விட்டனர். நொண்டி, கிளித்தட்டு, கபடி, கோகோ என எத்தனையோ விளையாட்டுகளை வீதிகளில் விளையாடி பொழுது போக்க ஆரம்பித்து விட்டனர். எது எப்படியோ கொரோனா வைரஸ் லாக் டவுன் காலம் பலருக்கும் பழைய நினைவுகளை அசைபோட வைத்து விட்டது சினிமாவோ விளையாட்டோ எதுவென்றாலும் பழைய ரசித்து ருசிக்க எல்லோருக்கும் பிடிக்கும்தானே.












Click it and Unblock the Notifications