Vadivelu birthday: மக்கள் தான் என் கடவுள்! பிறந்தநாளில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை நெகிழவைத்த வடிவேலு!
சென்னை: தமிழ் சினிமாவின் நகைச்சுவை சாம்ராட், வைகைப் புயல் வடிவேலு தனது 65-வது பிறந்தநாளை இன்று (செப். 12) கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர். இந்த அன்பைக் கண்ட வடிவேலு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வைகைப் புயல்
நடிகர் வடிவேலுவின் திரைப்பயணம் ஒரு நீண்ட போராட்டத்தின் கதை. சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க வாய்ப்பு தேடி, மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தவர். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து, தனது அசாத்தியமான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம், ரசிகர்களைக் கவர்ந்தார். ஆரம்பத்தில் துணை நடிகராக இருந்த அவர், படிப்படியாக உயர்ந்து, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக மாறினார்.
சந்திரமுகி படத்தில் வரும் முருகேசன், வெற்றிக்கொடி கட்டு படத்தில் வரும் லண்டன் பாண்டி, வின்னர் படத்தில் வரும் கைப்புள்ள போன்ற கதாபாத்திரங்கள், காலம் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் வாழ்கின்றன. அவரது பேச்சுகள், இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வாழ்க்கை போராட்டமும், விடாமுயற்சியும்
வடிவேலுவின் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. குறிப்பாக, அவருடைய அரசியல் வாழ்க்கை அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனாலும், அவர் தன்னுடைய நகைச்சுவைத் திறனையும், விடாமுயற்சியையும் ஒருபோதும் கைவிட்டதில்லை. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர், சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற படங்களில் நடித்து, ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.
மக்கள்தான் என் கடவுள்
தனது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வடிவேலு வெளியிட்டுள்ள வீடியோவில், "உலகம் முழுவதும் உள்ள என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கம். இன்று என்னுடைய பிறந்தநாள். இந்தப் பிறந்தநாளில் உலகம் முழுவதும் உள்ள பலரும் என்னை மனதார வாழ்த்தியிருக்கிறீர்கள். இந்த வாழ்த்து என் குலதெய்வத்தை விட மேலான ஒன்றாக இருக்கிறது. மக்கள்தான் என் கடவுள். மக்கள்தான் எனக்கு எல்லாமே. நீங்கள் இல்லை என்றால் இந்த வடிவேலே இல்லை. இன்றைக்கு இந்த அளவிற்கு இருக்கிறேன் என்றால் அதற்கு உங்களுடைய ஆசீர்வாதம்தான் மிக முக்கியக் காரணம். உங்களுடைய வாழ்த்து இன்று மட்டும் அல்ல, என்றைக்குமே வேண்டும்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
வடிவேலுவின் இந்த வார்த்தைகள், ரசிகர்களின் மனதில் இன்னும் ஆழமான இடத்தைப் பிடித்துள்ளன. ஒரு கலைஞன் தனது ரசிகர்கள் இல்லாமல் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் வடிவேலு. அவரது நகைச்சுவை, வாழ்க்கையின் பல கடினமான நேரங்களில் மருந்து போல இருந்து வருகிறது. வடிவேலுவின் இந்த அன்பு, ரசிகர்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழும்.












Click it and Unblock the Notifications